ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2019

இதிகாசங்களில் உள்ள மூலக் கருத்துக்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?


இராமாயணத்தில் என்னென்னமோ இருக்கிறது.. இவர் (ஞானகுரு) என்ன சொல்கிறார்…? என்று வினாக்களை எழுப்புவார்கள். சொல்கிறார்… ஆனால் எனக்கு அர்த்தமே ஆகவில்லை..! என்று ஒரு சொல்லில் நிறுத்திக் கொள்வார்கள்.

நானும் எத்தனையோ தெரிந்திருக்கின்றேன். இருந்தாலும் இவர் சொல்வதை நானே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அடுத்தவர்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…?
1.இப்படி நன்றாகத் தான் இருக்கிறது.
2.ஆனால் இது புரியாது என்பார்கள்.

இராமன் காட்டுக்குள் சென்றான். அங்கே குகனை நண்பனாக்கினான் என்று வான்மீகி சொன்னது.

அதாவது குகன் என்பவன் அவன் படகில் செல்பவன். நாம் சுவாசிப்பது எல்லாமே நம் உடலுக்குள் அலைகளாக மாறுகின்றது. குகனை நண்பனாக்கினான் என்றால்
1.இந்த உடலுக்குள் வந்த ஒவ்வொன்றையும் தனக்குள் நட்பாக்கிக் கொண்டான் இராமன்.
2.தன்னுடன் இணைந்து செயல்படும்படி… தடையில்லாது கொண்டு போனான்…! என்று குகனைப் பற்றிச் சொல்கிறார்கள்.
3.இந்த உடல் ஒரு குகை…! இதற்குள் இயக்கும் உணர்வைத் தனக்குள் நட்பாக்கிக் கொண்டான் இராமன்,

காட்டுக்குள் சென்றால் எத்தனையோ பல மிருகங்கள் வருகின்றது அல்லவா. அதனால் பயமும் வெறுப்பின் தன்மையும் அடைகின்றோம்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட உணர்வுகள். அந்தத் தாவர இனங்களின் எண்ணங்கள் தான் நமக்குள் உண்டு.

அதனால் உருவான அந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு தான் இந்த உருவின் தன்மை அடைந்துள்ளோம். ஆகவே  உடல் ஒரு பெரிய காடு,

உடலில் இரத்தம் போகாத இடம் இல்லை. அந்த இரத்தத்தில் தான் எல்லாமே கலந்து போகின்றது. ஆக படகை விடுபவனாகத் தான் இராமாயணத்தில் குகனைக் காட்டுகின்றார்கள்.

அந்தப் படகின் தன்மை… அதாவது இரத்தம் இல்லை என்றால் உடலில் ஒன்றும் வேலை செய்யாது.
1.அதிலே மிதந்து செல்வது தான் இந்த உணர்வுகள்
2.அங்கங்கே எப்படி நிலையாக்குகிறது…?
3.இரத்த நாளங்களில் இயக்கங்கள் அந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே எப்படிச் செயல்படுகிறது…?
4.மற்றதை எப்படி நட்பாக்குகின்றது…? அல்லது பகையாக்குகிறது..?

ஏனென்றால் நாம் எதை எடுத்தாலும் (நாம் சுவாசிப்பது எல்லாம்) அந்த உணர்வின் தன்மை இரத்தங்களாகின்றது. அந்த இரத்தங்களில் அணுக்களாக உருப்பெறுகின்றது.

அப்பொழுது உயர்ந்த எண்ணங்களை நம் இரத்தங்களில் (படகு போல) செலுத்தும் பொழுது என்ன ஆகும்…?
1.நட்பின் தன்மையை அங்கே உருவாக்கும்.
2.நட்பாகும் பொழுது நோயில்லாத நிலைகள் வரும்.

இதெல்லாம் எண்ணங்களின் உணர்வுகள் தான். இந்த மனிதனின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை இராமாயணத்தில் மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனக்கு (ஞானகுரு) ஈஸ்வரபட்டர் இப்படித் தான் சொல்லிக் கொடுத்தார்.

மற்றவர்கள் சொல்லக்கூடிய இராமாயணம் இராமன் காடு மேடெல்லாம் போனான். தந்தை சொல் தட்டாது சென்றான்…! என்ற நிலையைக் காட்டுவார்கள்.

அதிலே உண்மை உண்டு. ஆனால் சொல்பவர்கள் அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் நாம் மூலத்தை அறியாது போய்விட்டோம்.