ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2019

பல வழிச் சாமியார்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கிவிட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.