ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 26, 2019

பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து “இப்படிச் செய்கிறார்களே...!” என்று எண்ணவே வேண்டாம்...!

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்துவிட்டோம் அல்லவா...!” என்று இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி...
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி...!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கும்...!”

எப்படி...?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா...!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது... அவனுக்கும் கெடுகிறது...!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே...! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்...!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே...!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்...!” (இது முக்கியம்)

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா...! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்...! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்...? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்...!

கையில் அழுக்குப் பட்டால் உடனே கழுவி விடுகின்றோம் அல்லவா...! உடுத்தியிருக்கும் துணியில் ஏதாவது கொஞ்சம் அசிங்கமானால் உடனே கழுவுகிறோம் அல்லவா...!

இதே மாதிரி அவ்வப்பொழுது தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஜோதிடம் தேவையில்லை.. ஜாதகம் தேவையில்லை... மந்திரமோ மாயமோ எதுவுமே தேவையில்லை..! எல்லாமே உங்களால் மாற்றியமைக்க முடியும்.

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்... குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.