ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2019

யாகம் என்றால் என்ன..? எப்படிச் செய்ய வேண்டும்…?


நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே உணர்வைச் செலுத்தும் பொழுது உணர்வுகள் உடலில் பரவுகிறது. நம் மூச்சு வழி… சொல் வழிக் கூடி அந்த நல்ல உணர்வலைகள் வெளிப்படுகின்றது. கேட்போர் உணர்வுகளை இது மகிழச் செய்கின்றது.

ஆனால் யாகத் தீயில் நீங்கள் நல்ல சரக்கைப் போட்டால் அங்கே புகை மண்டலமாக வருகின்றது. அந்தப் புகை கண்ணிலே பட்டால் எரிச்சலாகி சுவாசித்தால் நெடியாக வருகிறது.

ஆக யாக மண்டலத்தில் என்ன இருக்கிறது…?
1.புற நிலையைக் காட்டி அதனுடைய நிலைகளை
2.அக நிலைக்கு ஊட்ட முடியாது.

கண்கள் புறக் கண். நம் உயிரோ அகக் கண். புறக் கண்ணால் பார்ப்பதும் உயிரிலே அது வரப்படும் பொழுது அகக்கண்ணாக இருந்து உள் நின்று நம்மை இயக்குகிறது… என்ற நிலையை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது இது துவைதம்.
1.அதாவது உருவம்…
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்…!
3.அந்த அருவம் என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி..,!

அந்த உணர்ச்சி என்று இயக்கும் பொழுது தான் துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்…! தனக்குள் மறைந்து இயக்கும்… இங்கே உணர்ச்சி.

உதாரணமாகக் கண்ணில் பார்த்ததும் என்ன செய்கின்றோம்…?  ஒரு பாம்பைப் பார்த்ததும் அந்த உணர்ச்சி தூண்டி “ஐயோ… பாம்பு…!” என்று குதிக்கின்றோம். அதே சமயத்தில் ஒரு அழகான பொருளைப் பார்த்தவுடனே ஆஹா…! என்று நினைக்கின்றோம்.

1.அப்பொழுது அது துவைதம்… உருவம்.
2.அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம்.
3.உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சி.
4.எந்த உணர்வின் தன்மையோ அதனின் உணர்ச்சியை ஊட்டும் நம் உயிர்
5.அதை உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது.
6.கோவிலில் காட்டப்பட்டது உருவம். ஆகவே அந்த நல்ல… உயர்ந்த… தெய்வீக குணங்களை உன் உருவமாக்கு…!
7.இது தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

ஒரு வேதனைப்படுபவரை நுகர்ந்து நமக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது நம் உடல் நலிந்து போகின்றது. சரீரத்திற்குள் மாற்றமாகின்றது.

இது சித்தாந்தம் என்று உடலுக்குள் ஆகும் நிலைகளை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளும் நிலைக்காக அதன் வழியில் தான் ஆலயங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டது.

சாமி மேல் இருக்கும் வைரக் கிரீடத்தைக் கண்களில் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…? அந்த வைரம் எப்படி ஜோலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல்லை மற்றவர் கேட்கும் பொழுது அவர்களுக்கு அந்த ஜோலிப்பு வர வேண்டும்… சந்தோஷம் வரவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

சாமிக்குப் போட்டிருக்கும் தங்க நகைகள் எப்படி மங்காதிருக்கின்றதோ அதைப் போல் என் மனது எப்பொழுதுமே அப்படி மங்காது நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எல்லோருடைய மனதும் தங்கத்தைப் போல் மங்காது இருக்க வேண்டும் என்று உங்களை நான் உயர்த்துகின்றேன். நானும் உயருகின்றேன்.

இதே போல் அந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் எண்ணினால் எப்படி இருக்கும்…? நாம் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று உணர்த்துவதே ஆலயத்தின் பண்புகள்.