ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது
படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.
அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த
எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப்
பூத்துவிடுகின்றது.
இவ் எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..? நெருப்பிற்கு
மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.
அதைப் போல்...
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள்
வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும்
அருள் சக்திகளை எடுத்தால் தான்
4.உலக ஞானத்தை நாம் பெற முடியும்.
ஒன்றில்லாமல் ஒன்றில்லை...!
பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா...?
ஆதி சக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெறவேண்டும்...?
நம் ஞானத்தை நாமே பெறலாகாதா...? என்ற வினா எழும்பலாம்.
அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை
நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின்
துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.
புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளில்
சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாதவண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.
கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்...”
அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.
இந்நிலை சாத்தியப்படுமா...? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்நிலை
நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக்
கதையும் உண்டு,
கதை அல்ல...! காவியம் தான் என்றாலும்...
1அந்நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட
முடியும்... அதற்குகந்த ஞானம் பெற்றால்...!
2.முடியாத நிலை என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.
பக்குவ ஞானம் பெற்று... பக்குவமான ஜெபத்தைக் கொண்டு... முதலில்
அந்நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்..
நிறுத்திடவும்... நம் ஞானத்தால் முடியும்.