ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2019

சார்தாம் - இமயமலைப் பயணத்தில் பெற்ற இயற்கையின் பொக்கிஷ உணர்வுகள் (19.08.19 – 31.08.19)


மாமகரிஷி ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் நம் ஞானகுரு அவர்கள் கேதார்நாத் பத்ரிநாத் ஜோஸ்மத் காசி ஹரித்துவார் ரிஷிகேசம் போன்ற பல இடங்களுக்குச் சென்று பல அனுபவங்களையும் பல ஆற்றல்களையும் பெற்றார். அதை எல்லாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

அவ்வாறு அவர் பெற்ற அந்த ஆற்றல்களை எல்லாம் பெறுவதற்காகவே இந்த இமயமலைப் பயணம் (சார்தாம் – நான்கு மலைகள் யமுனோத்ரி கங்கோத்ரி பத்ரிநாத் கேதார்நாத்) 19.08.19 முதல் 31.08.19 வரை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும்
1.மகரிஷிகள் பாதுகாப்பாக வழி நடத்தியதை உணர முடிந்தது.
2.விண்ணின் ஆற்றலை உணரும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
3.விண்ணின் ஆற்றல் மண்ணுலகில் எப்படி வந்து சேர்கிறது…? என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காசி கேதார்நாத் ஜோஸ்மத் உத்தரகாசி கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற இடங்களில் பல நல்ல அனுபவங்களும் ஆற்றல்களும் கிடைத்தது.

இமயமலையைப் பற்றிய இரகசியத்தையும் மகரிஷிகள் இங்கே செயல்படும் முக்கியத்துவத்தையும் அறிய முடிந்தது.
1.விண்ணின் ஆற்றல் நீராக மாறும் தன்மையைக் கங்கோத்ரியில் கண்கூடாகக் காண முடிந்தது.
2.கேதார்நாத்தில் விண்ணுலக சக்திகள் நமக்கு முன்னாடியே அங்கே உறைவதையும் ஆற்றலாக அலைகளாகப் படர்வதையும் காண முடிந்தது.
3.அதை நம் உயிராத்மாவில் சேர்த்து ஜோதியாக மாற்றும் உபாயமும் கிடைத்தது.

அந்த 14 நாட்களுமே மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை உடல் ஏற்றுக் கொண்டதும் பசியோ தாகமோ எல்லாமே ஒரு கட்டுக்குள் சீராக அமைந்ததும் ஒரு ஆச்சரியமான அனுபவம் தான்…!

இதன் மூலம் எந்த இடத்திற்குச் சென்றாலும் மாமகரிஷிகளின் அருளைப் பெற்று நாம் “நிலைத்திருக்க முடியும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று விட்டது.

அங்கே உற்றுப் பார்த்து நுகர்ந்த இயற்கையின் பசுமையும்… மூலிகை வாசனைகளும்.. நீர் வளங்களும்… மலைகளும்… பனி படர்ந்த மலைகளும்… நீர் ஓடி வரும் வேகத்தில் அது கரைத்துக் கொண்டு வரும் ஸ்படிகக் கற்களும்.. மனதிலே ஆழமாகப் பதிவாகி விட்டது.

அதே போல் கந்தகப் பாறையில் நீர் ஓடி சுடு தண்ணீராக வருவதை யமுனோத்ரியிலும் கங்கோத்ரியிலும் காண முடிந்தது. குளிர்ந்த நீர் ஒரு பக்கம் ஓடினாலும் அதற்குப் பக்கத்திலேயே இந்தச் சுடு தண்ணீர் வருவது
1.நம் பூமித் தாயின் உள் சுவாச நிலைகளையும்
2.பூமியின் ஆற்றல்களையும் நேரடியாக அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.   

இவைகளை நினைக்கும் பொழுதெல்லாம் மலை உச்சிகளும் அவை கவரும் விண்ணின் ஆற்றல்களும் சுவாசத்தில் வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதுமே மலைகள் மட்டும் தான். சமமான பூமி அங்கே காண முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இன்றைய விஞ்ஞான உலகில் உள்ள செயற்கைகளை அந்த மலைப்பகுதிகளில் அதிகம் காண முடியவில்லை.
1.இயற்கையை முழுமையாக ஸ்பரிசித்த உணர்ச்சிகளும் இனம் புரியாத மகிழ்ச்சியும் கிடைத்தது.
2.ஒரு வேளை அன்று அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் பூமியெங்கிலும் இருந்திருக்குமோ…! என்ற உணர்ச்சிகளும் வந்தது.

நிறைவு நாளான 31.08.19 அன்று… இமயமலையில் பெற்ற சக்திகள் அனைத்தையும் குடும்பத்தைச் சார்ந்தோர்… இந்த நாட்டு மக்கள்… உலக மக்கள்… அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தோம்.

ரிஷிகேசத்தில் ஆயிரம் வருடத்திற்கு மேல் கடும் தவமிருந்த
1.அந்த ரிஷி விண் சென்ற ஆற்றலை
2.இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரான்மாவும் பெறவேண்டும் என்றும்
3.அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் விண்ணுலகம் செல்ல வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… என்று
4.விண் செலுத்தும் ஆற்றலைப் பெற தியானித்தோம்.

இந்தப் பயண அனுபவங்களைப் படிப்போர் அனைவரும் இமயமலையில் பாய்ந்து கொண்டிருக்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… விண்ணின் ஆற்றலும்… விண் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தியும் பெறவேண்டும்… அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும்…! என்று எல்லா மகரிஷிகளிடமும் வேண்டுகிறேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!