15.5 கி.மீ தூரத்தை ஐந்து மணி நேரத்தில் டோலி மூலம் மேலே சென்றேன். கீழிருந்து
மலை மீது செல்லச் செல்ல என்னை அறியாமலே பலவிதமான ஆற்றல்கள் என் உடலுக்குள்
புகுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்தது.
கோவிலுக்கு ஒரு கி.மீ. முன் இறங்கி நடக்கும் பொழுது
1.தலையிலிருந்து (குறிப்பாக சிறு மூளையில்) கால் வரை மின்னல் பாய்ந்து என்னை
(உடலை) இரண்டாக வகுந்தது போல் இருந்தது.
2.அதற்குக் காரணம் என்ன…? என்று உடனே உணர முடியவில்லை
3.ஆகையினால் மெதுவாகத் தான் என்னால் அங்கே நடந்து செல்ல முடிந்தது.
ஆலயத்திற்குள் முதலில் ஒரு முறை வலம் வந்தேன். பின் இரண்டாவது முறை வலம் வரும்
பொழுது இரண்டு கட்டுகளாக இருந்த அந்த ஆலயத்தின் முதல் கட்டில் பாண்டவர்களின்
அனைத்துச் சிலைகளையும் காண முடிந்தது.
அந்தச் சிலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று இளம் நீல
நிறத்தில் ‘பளீர்...ர்ர்ர்…” என்று வெளிச்சம் மின்னல் போல் வெட்டியது.
வெளிச்சம் எங்கிருந்து வருகிறது…? என்று சுற்று முற்றும் பார்க்கும் பொழுது
மறுபடியும் அதே வெளிச்சம் மின்னல் போல் இளம் நீல நிறத்தில் தெரிந்தது.
பின்னர் ஈஸ்வரபட்டர் தெளிவாக எனக்கு உணர்த்தினார். நீ ஏற்கனவே எடுத்து…
1.உனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
கிளர்ந்தெழுந்து
2.இந்த மலையில் “அபரிதமாகப் பரவிக் கொண்டிருக்கும்…!” அந்த மாமகரிஷிகளின்
அருள் சக்தியைத் தன்னிச்சையாக ஈர்த்ததால் தான்
3.இந்த நீல நிற ஒளிகள் உன்னிடமிருந்து வெளிப்பட்டது.
4.மேலும் உன் உடலையே இரண்டாகப் பிளப்பது போல் இருந்ததன் காரணமும் அதுவே தான்.
உன் உடலில் அந்த ஆற்றல்களைத் தாங்கக் கூடிய “காந்த சக்தி” இல்லாததால் தான் உனக்கு
வலியும் அதனால் சோர்வும் வந்தது…! என்று தெளிவாக்கினார்.
அந்தக் காந்த சக்தியைக் கூட்டும் முறையையும் காட்டினார்...!
அங்கே இருந்த லட்சுமி நாராயணன் சிலை அருகில் ஒரு நெய் தீபம் எரிந்து
கொண்டிருந்தது. அந்த ஒளியின் சுடரை இரண்டு கைகள் மூலம் எடுத்து வியாசகரையும் மற்ற
மகரிஷிகளையும் எண்ணி என் முகத்தில் சுமார் நான்கு முறை ஒற்றி எடுக்கும்படி உணர்த்தல்கள்
வந்தது.
அவ்வாறு செய்ததும் உடலில் சிறு மூளையில் இருந்த வலி… உடல் சோர்வு… அது எல்லாமே
குறையத் தொடங்கியது.
பின்னர் உள் கட்டில் இருந்த முக்கோண வடிவில் மலை போல் உருவாகியிருந்த கேதாரின்
சிலையை உற்றுப் பார்த்தேன். அதிலே தடவப்பட்டிருந்த நெய்யைப் பார்த்ததும் என்
நினைவுகள் அனைத்தும் மகரிஷிகள் பால் சென்றது.
மனித வாழ்க்கையில் வந்த அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து அந்த
நல்ல சக்திகளை உயிராத்மாவில் வடித்துச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.
1.அந்த உணர்வுகளைச் சுவாசித்ததும் அந்தக் கேதார் சிலையின் (முக்கோண வடிவில்) அடியில்
இருக்கும்
2.அதன் ஈர்ப்பு நிலையையும்
3.விண்ணிலிருந்து கவரும் அதனின் ஆற்றலையும் உணர முடிந்தது.
பின் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்தக்
கோவிலைத் தாங்கி நின்ற கம்பத்தில் என் உள்ளங்கையை வைத்தும்… தலையை வைத்தும்
சுவாசிக்கத் தொடங்கினேன்.
உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. பறப்பது போல் உணர்வுகள் வந்தது. மனதில்
மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் தோன்றியது.
பின்னர் ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் எண்ணிக் கொண்டே கீழே இறங்கத்
தொடங்கினேன். சுமார் ஐந்து கி.மீ சென்றதும் நீர் மேகங்கள் வேக வேகமாக மலைப்
பகுதிகளை நோக்கி ஈர்க்கப்பட்டு நீராக மாறுவது தெரிந்தது.
பின்னர் மழைத் துளியும் விழத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும் மழை பெய்யத்
தொடங்கியது. எங்கு பார்த்தாலும் வெண்மை நிற (மழை) மேகங்கள் தெரிந்தது. வானத்தில்….
1.அதாவது விண்ணுலகில் சஞ்சரிப்பது போல் உணர்வுகள் தோன்றியது.
2.ஏனென்றால் கண்ணுக்கு முன்னாடி இருப்பது எதையுமே தெளிவாகக் காண முடியவில்லை.
3.எங்கே பார்த்தாலும் அந்த வெண்மை நிறம் தான்…!
பின் அந்த மழை பொழிதலும்… மூலிகைகளின் வாசனைகளும்… சுவாசத்தில் இனிமையான
உணர்வை ஊட்டியது. கீழே இறங்கும் வரை அதை அனுபவித்தேன்.
1.காணாத காட்சிகளை எல்லாம் காண முடிந்தது.
2.விண்ணையும் மண்ணையும் ஒன்றாகவே காண முடிந்தது.
3.அந்த விண்ணுலக ஆற்றல் எனக்குள் சேர்வதையும் உணர முடிந்தது.
பின்னர் பாண்டவர்களின் சிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் உணர்த்தத் தொடங்கினார்.
நம் ஐம்புலன்கள் தான் பாண்டவர்கள். உயிரின் துணை கொண்டு ஐம்புலன்கள் வழியாக
எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு உடல் பெறும் உணர்வுகளைக் (கௌரவ உணர்வுகளை)
கரைக்கும் பொழுது அது பேரொளியாக ஜோதிலிங்கமாக இந்த உடலே ஒளியின் உடலாக மாறுகின்றது…!
என்று தெளிவாக்கினார்.