“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு
சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை
நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?
கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே…, எத்தனை நாள்
தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?
ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள்
அதன் வழி காட்டுகின்றது.
தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம்.
ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும்
நிலை” இல்லை.
இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.
என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?
“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்”. அங்கே போனவுடனே
என் உடலில் பதட்டம் வருகின்றது…, பயம் வருகின்றது.
1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச்
செய்வது யார்…?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள்
போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத்
தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.
திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது.
பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார்
குருநாதர்.
இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும்.
அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.
என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப்
பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…,” என்கிறார்
குருநாதர்.
போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான
விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன்
அறுந்துவிட்டது.
அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது..,
“அந்தச் சந்தர்ப்பம்”. அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி
வருகின்றது.
அப்புறம் என்ன செய்தேன்…?
“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய
விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள்
போய்விட்டேன்.
அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள்
அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப்
போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.
மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது.
உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.
அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை
இருப்பது) தெரிந்துவிடும்.
ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால்
மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.
அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை
வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.
குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.
1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல
பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம்
என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
6.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி
நம்மைப் பலவீனபடுத்துகின்றது?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?
இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.
அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன்.
கயிறு மாதிரிச் செய்தேன்.
நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய
கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி
நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.
அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன்
அப்படியே சுற்றிக் கொண்டது.
அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப்
பக்கம் வந்து சேர்ந்தேன்.
முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி
இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.
இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது
என்பதற்குத்தான் இந்த அனுபவம்.
ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க
வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.
அதன் வழியில் நான் போகின்றேன்.
முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது
அறுந்திருக்காது.
அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே
சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி
இருக்கும்?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து
கிடைக்கும்?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்
என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.
இது தான் என்னுடைய அனுபவம்.
அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த
விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.
பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு
மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக
வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு
குகை இருக்கும்.
அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள்
போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.
ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த
வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.
ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள்.
அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.
நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே
இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.
ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.
அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில்
அந்த நீர் ஊற்று இருக்கும்.
ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு
ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.
காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல்
வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க
முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு
அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.
சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த
வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.
தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள்.
பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது.
ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து
தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.