ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2017

இராமன் குகனை நட்பாக்கினான் - விளக்கம்

உங்களுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். அதற்காக வேண்டி.., “வாருங்கள் போகலாம்..,” என்று சொல்லி உங்களை நான் காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா?

அப்பொழுது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? “சாமியார் வருகிறார் என்றால் ஒரு வேளை குடும்பத்தை விட்டு இவரும் “ஓடி விடுவாரோ.., என்னமோ!” என்று சொல்லிப் பெண்கள் பேசத் தொடங்குவார்கள்.

இந்த மாதிரியெல்லாம் இன்று உலக நிலைகள் இருக்கின்றது.

ஆனால், உங்கள் உடலே ஒரு காடு. அந்தக் காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று தான் இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

காட்டிற்குள் இராமனும் சீதாவும் செல்லும் பொழுது குகன் என்ன செய்கின்றான்? நீரைக் கடந்து செல்வதற்குப் படகு கொடுக்கின்றான். அதனுடைய விளக்கம் என்ன?

நாம் எதை எண்ணுகின்றோமோ..,” அந்த உணர்வுகள் அனைத்துமே “இரத்தத்தில் தான் கலந்து செல்கின்றது.

நல்ல இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் போகக்கூடிய இடத்திற்கு போகின்றோம். அதனால் தான் குகனைப் பற்றிச் சொல்கின்றார்கள்.

1.நாம் எடுக்கும் உணர்வுகளிலிருந்து இயங்கி
2.இந்த “இரத்தம்
3.நம் உடலில் எவ்வளவு பக்குவமாகக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது?
4.அங்கங்கே அவரவர்களுக்கு வேண்டிய இடத்தில் கொண்டு போய் இந்த உணவைக் கொடுக்கின்றது.
5.உடலிலுள்ள எல்லாவற்றிற்கும் உணவு இந்த இரத்தத்தின் வழியாகத் தான் செல்கின்றது என்பதைப் பச்சையாகவே காவியத்தில் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.

ஆனால் இங்கே “பட்டி மன்றம் வைத்துப் பேசினார்கள் என்றால் என்னவெல்லாம் பேசுகின்றார்கள்?

இராமனைப் பற்றிப் பேசுபவர்கள் இராமனுக்கு.., “எல்லா உதவியும் செய்தது.., யார் தெரியுமா?

குகன்.

அந்த இடத்தில் வான்மீகி எழுதிய காவியத்திற்கு இவர்கள் கற்பனை கட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு ஞானியும் எத்தனையோ காவியங்களைப் படைத்துள்ளார்கள். அதை இன்று பட்டி மன்றம் வைத்து வாதித்து இவர்கள் ஒரு புத்தகத்தை எழுதுகின்றார்கள்.

இன்று இருப்பவர்கள்.., அதைப் படிப்பவர்கள் எல்லோரும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள் என்கிறார்கள்.

அதே மாதிரி கந்தப் புராணத்திலும் சரஹணபவா.., குகா.., இங்கேயும் குகனாகின்றது. கந்தா – வருவதை அறிந்து; கடம்பா – உருவாக்கத் தெரிந்து கொண்டவன் – இந்த ஆறாவது அறிவு முருகன்.

1.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மை எழுப்பும் பொழுது
2.குகன் அந்த நல்ல வழிக்குக் கொண்டு போகின்றான்.

இராமாயணத்திலும் குகனைப் பற்றிக் கொடுக்கின்றார்கள். இங்கே கந்த புராணத்திலும் அதே தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு காவியத் தொகுப்பிலும் குகன் முக்கியமானவனாக வருகின்றான்.

இராமயாணக் காவியத்தில் இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். குகன் ஆற்றில் படகை ஓட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக, நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும், நம் எண்ணங்களால் உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அவைகள் நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில் இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

1.நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால்
2.நமக்குள் வெறுப்பை உண்டாக்கும் நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை
3.நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து அதன்வழி செல்லப்படும் பொழுது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

தீய உணர்வின் அணுக்கள் நல்ல உணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும். ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

இதில்  இராமன் குகனை நட்பாக்கினான் என்று அதாவது
1.நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கருவாக்கி உருவின் தன்மை பெறச் செய்து
2.உயர்ந்த துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அணுக்களாக விளையச் செய்தால்
3.அது உடலில் பதிந்திருக்கும் பகைமையுணர்வுகளை நீக்கி மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு அழைத்து செல்லும்.
4.அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகா ஞானிகளின் அருளுணர்வின் ஒளியலைகளை நமக்குள் பெருக்கும் பொழுது அது நம்மை அருள்வழியில் அழைத்துச் செல்லும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட நம்முடைய காவியங்கள் தெளிவானது. அதன் மூலங்களை நாம் அறிந்து கொண்டால் விண் செல்வது மிகவும் சுலபம்.