ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 7

சாமி சிலைக்கு ஞானிகள் பல வகையில் அபிஷேகம் செய்யச் சொன்னதன் நோக்கம்
கோவிலுக்குச் செல்பவர்கள் இன்று நடைமுறையில் எல்லா அபிஷேகங்களையும் செய்வார்கள்.

செய்துவிட்டு “சாமிக்கு அபிஷேகம் செய்து.., நான் என்னத்தைக் கண்டேன்? சாமிக்காக வேண்டி.., நான் எத்தனை நாள் விரதம் இருந்தேன்? எந்தச் சாமியைக் கும்பிட்டு நான் என்ன பண்ணுவது..,?

இப்படித்தான் எண்ணுகின்றார்கள்.

ஏனென்றால், வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வருவதை அவ்வப்பொழுது துடைக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? ஆக, அழுக்குச் சேர்ந்துவிட்டால் நல்லதைக் காண முடியுமா? முடியாது.

ஒரு பாத்திரத்தில் அழுக்குப்படுகின்றது. உடனே அதைச் சுத்தப்படுத்திவிட்டால் அழுக்குகள் போய்விடும். சுத்தப்படுத்தாது விட்டுவிட்டு அப்புறம்.., “சுரண்டு சுரண்டு.., என்று சுரண்டினால்.., பாத்திரம் தேயத்தான் செய்யும்.

நல்ல உணர்வுகளை நமக்குள் பெறுவதற்காக வேண்டித்தான் ஞானிகள் சிலைகளை வைத்தார்கள். நாம் யாராவது சிலைகளை மதிக்கின்றோமா?

ஆனால், இப்பொழுது நாம் எப்படி மதிக்கின்றோம்?

1.கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்.
2.நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.
3.அந்தக் கல் தான் நமக்குச் செய்கின்றது என்று நினைக்கின்றோமே தவிர
4.“கல்லில் காட்டப்பட்ட.., அந்த ஞானத்தை எடுக்கச் சொன்ன நிலைகளை..,”
5.ஞானிகள் சொன்னதை யாரும் நாம் எடுப்பதில்லை.

கோவிலில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம், சந்தனாபிஷேகம் செய்வது எதற்காக என்று நாம் தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.பாலைப் போல மணம் பெறவேண்டும்.
2.தேனைப் போன்ற இனிமையான வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும்.
3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்.
4.பன்னீரைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்.
5.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் உள்ளோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்.
இப்படிப்பட்ட நல்ல மனம் வர வேண்டும் என்று எண்ணுவதற்குத்தான் ஞானிகள் அதைச் செய்யச் சொன்னார்கள்.

இப்படி எண்ணினால் நாம் எண்ணிய அந்த நல்ல மணங்கள் அனைத்தும் புருவ மத்தியில் உயிரில் படுகின்றது. அப்பொழுது நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது.

நாம் எண்ணி எடுத்த பால் தேன் சந்தனம் மலர்கள் என்று “அந்தந்த மணத்திற்குரிய.., உணர்ச்சிகள் தோன்றுகின்றது. அந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலக்கின்றது. அப்பொழுது பகைமை உணர்வுகளை நாம் மறக்கின்றோம்.

அதே சமயத்தில் பிறரின் தீமையான உணர்வு நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றோம்.

ஆகவே, பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளைச் சேர்ப்பதற்கும் தான் கோவிலில் உள்ள சிலைக்குத் தேனாபிஷேகம், பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்கின்றோம்.

வழக்கத்தில் உள்ளவர்கள் பாலாபிஷேகம் செய்யும் போது பாருங்கள். ஒரே ஆனந்தமாக இருப்பார்கள்.

ஆகா..,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.“ஐயோ.., பையன் இப்படி இருக்கின்றானே..,
2.வாங்கியவர்கள் பணம் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே..,,
3.கொடுத்தவன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாரே,
4.நான் எல்லோருக்கும் நல்லது செய்கின்றேன், என்னைப் பற்றிக் குறையாகப் பேசுகின்றார்களே,”
இந்த உணர்வுகளெல்லாம் முன்னாடி இருந்து கொண்டு அங்கே காட்டப்படும் நல்லதையே நினைக்கவிடாது.

அதே மாதிரி தியானத்தில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.

எப்படித்தான் உட்கார்ந்திருந்தாலும் கூட உள்ளுக்குள் இருப்பது முன்னடி வந்துவிடும். வந்தவுடன் அவன் அப்படிப் பேசினான், இவன் இப்படிச் செய்கின்றான் என்று இது அத்தனையும் எண்ணத்திற்குள் ஓடும்.

ஏனென்றால், இதெல்லாம் நம் ஆன்மாவில் இருக்கின்றது. நம் ஆன்மாவில் உள்ளது அதில் எதனின் வலுவோ அதுதான் நம்மை இயக்கும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் உணர்வுகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையானதை ஈர்க்கும் சக்தியாகும்போது சூரியன் அதனைக் கவர்ந்து கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

கோவிலுக்குச் சென்று.., “தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவருமே அனாதையாக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ இங்கே தியானத்தில் உட்கார முடியவில்லை என்றாலும் கூட “அங்கே கோவிலுக்குச் சென்று.., அந்தச் சிலையைப் பார்த்தாவது..,” அந்த நல்ல உணர்வுகளை எடுத்தீர்கள் என்றால் தீமை செய்யும் உணர்வுகள் அனாதையாகின்றது.

ஆக, தீமைகள் நமக்குள் புகாதபடி தடைப்படுத்திவிடுகின்றோம். ஏனென்றால் நமக்குள் ஈர்க்க மறுப்பதைச் சூரியன் கவர்ந்து மேலே சென்றுவிடுகின்றது.

மற்றவர்களின் ஈர்ப்பு இருக்கும் பொழுது தீமைகளை இங்கே ஈர்க்கின்றது. நாம் அதை இழுக்கத் தவறினால் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.

அன்றைய காலங்களில் எழுத்தறிவு இல்லை. அதற்காகத் தான் இந்த முறைகளைக் கையாண்டார்கள். நம் ஞானிகள் ஞானிகள் காட்டிய இந்த முறையில் ஆலயங்களை நாம் மதித்தால் பகைமைகளை மறக்கலாம்.

நாம் பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்வதற்கும் தான் ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

நாம் அபிஷேகம் செய்ய வேண்டியது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நம் உயிரான ஈசனுக்கு. வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேதனையையும் சலிப்பையும் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்யக் கூடாது.

அவனுக்கு நாம் அருள் மணங்களையும் அருள் உணர்வுகளையும் தான் அபிஷேகம் செய்யவேண்டும்.