ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2017

“எல்லோரும் நல்லவராக வேண்டும்” என்று எண்ணினால் அந்த எண்ணம் நல்ல சொல்லையும் செயலையும் நம்மைச் செய்ய வைக்கும் – அதற்குத்தான் ஆலயங்களில் சிலையை வைத்துள்ளார்கள்

ஒருவர் தீமையான செயலைச் செய்கின்றார். தீமை செய்யும் தீயவர்கள் இருப்பினும் “அவர்கள் நல்லவராக மாறவேண்டும் என்ற இந்த உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது.
2.நல்ல உடலாக மாற்றுகின்றது.
3.நல்ல சொல்லாகவும் செயலாகவும் நம்மைச் செயல்பட வைக்கின்றது.

ஒருவரை நல்லவன் என்று நாம் எண்ணினாலும் அவன் வெளிப்படுத்தும் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது என்ன ஆகும்?

பாலிலே பாதாமைப் போட்டாலும் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தியில்லை.

அதைப் போன்று தான் நாம் நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது கெட்டவன் என்று இருந்தாலும் “அவன் சொல்லையோ செயலையோ கேட்டுத்தான்.., பார்த்துத்தான்..,” நாம் உணர்கின்றோம்.

அப்படி உணரப்படும் பொழுது நம் உடலில் தீய உணர்வின் வலிமை சேர்ந்து விடுகின்றது. ஆகவே

1. தீயவர்கள் என்பவர்கள் எவரும் இல்லை.
2. சந்தர்ப்பம் அந்தத் தீய செயலைச் செய்ய வைக்கின்றது.
3. அந்த உணர்வுகள் உடலிலே தீயதாக விளைகின்றது.
4. தீய அணுக்கள் விளைந்து தீயதாக அந்த உடலை இயக்குகின்றது.
5.தீயவனாக மாற்றி உடலுக்குப் பின் “இன்று மனிதன்.., அடுத்து.., மனிதனல்லாத நிலையை..,” உருவாக்கிவிடுகின்றது.

ஆனால், நமக்கு ஞானிகள் காட்டிய நிலைகளில் “தன்னை அறிந்து செயல்படும் தத்துவம் தான் “விநாயகர் தத்துவம்.

நாம் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். மனிதனானபின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைப் பெற்றோம்.

ஆகவே இந்தப் பிள்ளை யார்...? நீ சிந்தித்துப் பார்...! என்று கேள்விக் குறியைப் போட்டு திரும்பும் இடமெல்லாம் விநாகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஆக உயிரால் வளர்க்கப்பட்டது தான்.

எனது சொத்து.., எனது உடல்.., என்று தான் இருக்கின்றோமே தவிர நான்...! எனது...! என்பது.., “எங்கும்.., என்றும்.., இல்லை!”

நான் என்பது நான் நானாவேன். “உயிர் தான்..,” எல்லாவற்றிற்கும் “நான் உருவாக்கினேன்..,” என்று.

இந்த உயிரைப் போல உணர்வினை அருள் ஒளியாக உருவாக்கினால்.., “உயிருடன் ஒன்றிய நான் – “நானாகின்றது”. ”அந்த நிலைகளை” நாம் பெறுதல் வேண்டும்.

உயிர் - “ஈசன்

நுகர்ந்து கொண்ட உணர்வு - “வினை.

அந்த வினைக்கொப்ப உடலின் நிலை - “விநாயகா.

உணர்வின் தன்மை உறையும்போது அதனின் மலம் உடலாகும் பொழுது - “சிவம்.

தீமைகளை நீக்கிய உணர்வு ஒவ்வொன்றும் நம் உடலில் அறிந்து கொள்ளும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றது. இது தான் - “கார்த்திகேயா.

சிவனின் பிள்ளை மூத்தவன் விநாயகன் இளையவன் கார்த்திகேயன். எல்லாவற்றையும் அறிந்திடும் உடல் பெற்றது என்ற நிலையை நமது ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

விநாயகர் கோவிலுக்குச் சென்றால்.., நாம் என்ன நினைக்கின்றோம்...?

1.அங்கே குறைகளைச் சொல்வதும்
2.அல்லது என்னைச் சோதிக்கின்றான் என்பதும்
3.அர்ச்சனை அபிஷேகத்தைச் செய்து குறைகளைச் சொல்லி அதைத்தான் விரும்புகின்றோமே தவிர
4.குறைகள் நமக்குள் எப்படி வந்தது?
5..அந்தக் குறைகளை எப்படி நீக்குவது..? என்ற நிலை இல்லை.

குறைகளை எப்படி நீக்குவது என்று கேட்டு யாராவது தீமையை நீக்கும் ஆற்றலை எண்ணுகின்றோமா..,? தீமை செய்பவர்களின் வலிமையைப் பற்றித்தான் “அதிக நேரம் எண்ணிக் கேட்கின்றோம்.

தீமைகளைத் துடைக்கும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் செலுத்துவது.

கடுமையான விஷங்களை மாற்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன். அவன் தான் இன்று அந்தத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை நீக்கினானோ அதை நாமும் நீக்கலாம். அவன் சென்ற எல்லையை அடையலாம்.


தீமைகளை நீக்கிவிட்டு “உயிருடன் ஒன்றும் உணர்வை.., எப்படி ஒளியாக மாற்றவேண்டும்?” என்பதை நாமெல்லாம் அறிந்து நம்மை நாம் தெரிந்து “தெளிவான வாழ்க்கை வாழ்வதற்குத்தான் இந்தச் சிலைகளை எல்லாம் வைத்தார்கள் ஞானிகள்.