ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2017

யாம் (ஞானகுரு) “ஒலி பரப்பும்” அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்க வேண்டிய முறையும் அவசியமும் – விளக்கம்

பல முறை சொல்லியிருக்கின்றார். நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறார். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

ஆனால், காலையில் சொன்னதை “சாமி என்ன சொன்னார்?” என்று மறுபடி கேட்டால் “தெரியாது..,” என்பார்கள்.

ஆனால், யாம் திரும்பச் சொல்லும்பொழுதுதான் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றது.

இதற்குத்தான் மறைந்ததை மீண்டும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அந்த மகரிஷிகளின் சக்தியை யாம் பெறச் செய்கின்றோம்.

முதலில் பதிவு செய்துவிட்டாலும்
1.சாமி நேற்றுச் சொன்னதைத்தான் சொல்கிறார் என்று (நினைவினை) வேறு பக்கம் திரும்புவார்கள்.
2.தான் கேட்பதைத் தடைப்படுத்திக் கொள்வார்கள்.
3.தனக்குத் தண்டனையே கொடுத்துக் கொள்வார்கள் என்று கூடச் சொல்லலாம்.
4.நன்மைகளைப் பெற முடியாதபடி தீமைக்கே இடமளிக்கும் நிலை வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை விடுத்து நீங்கள் மீண்டும் மீண்டும் பெறவேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றேன்.

இராமாயணமோ மகாபாரதமோ கந்த புராணமோ விநாயக புராணமோ இவை அனைத்தும் ஒரே கதையாகத் தான் எழுதி வைத்துள்ளார்கள்.

அதற்காக வேண்டி.., “நேற்று நீ அதைப் படித்தாய் இன்றைக்கு ஏன் நீ கந்த புராணத்தை மாற்றிப் படிக்கக்கூடாது! நேற்றுச் சொன்னது தானே படிக்கின்றோம், என்று யாராவது கேட்கின்றீர்களா?”

கேட்கவில்லை.

சாமி சொல்லும்போது மட்டும்..,” நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார் என்கிறார்கள்.

இதே மாதிரி கீதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார்கள். மகாபாரதப் போர் என்றால் இயற்கையின் உண்மைகளைச் “சொன்னதைத்தான் திருப்பிச் சொல்வார்கள்.

பள்ளிக்குச் சென்று எஞ்சினியரிங் (ENGINEERING) படிக்கின்றீர்கள் என்றால் அந்தப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து அதை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்கிறீர்கள்.

அப்பொழுது.., “நேற்றுப் படித்ததை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும்!” என்று விட்டுவிட்டால் படித்தது மீண்டும் என்றைக்கு நினைவுக்கு வருவது?

ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டோம். அப்புறம் ஏன் நீங்கள் படிக்கின்றீர்கள்?

அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுத்தவுடன் மீண்டும் என்ன செய்கிறோம்? புத்தகங்களை எடுத்து மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம் அல்லவா.

இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதியச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களை அறியாமல் இயக்கச் செய்து
3.உங்களை அறியாமலே தீமைகளை அகற்றச் செய்வதற்காக இதைச் செய்கின்றோம்.

ஒரு தடவை தீமை செய்வதை உற்றுப் பார்க்கின்றீர்கள். அதனைப் பதிவு செய்து கொண்டால் “அந்த நினைவு வரும் பொழுதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகின்றது.., ஆத்திரம் வருகின்றது.., அவரை எப்படித் தாக்குவது..? என்ற உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் “மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும்..,” என்ற ஏக்க உணர்வுடன் இதை யாம் சொல்லும் பொழுது உங்களுக்குள் உணர்வுகள் பதியப் பதியப் பதிய இந்த நினைவுகள் அது எடுத்துக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அதனின் வளர்ச்சியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு உங்கள் நினைவினைக் கூட்டி அருள் உணர்வுகளைத் தூண்டச் செய்து நமக்கு முன் இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் நிலைக்கே இதைச் சொல்வது.

ஆனால், “என்னமோ சாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். “நேற்றுச் சொன்னார்.., சொன்னார்.., சொன்னார்..,” என்ற நிலைகளில் இல்லாது அதை நாம் “பெறவேண்டும் பெறவேண்டும் பெறவேண்டும்..,” என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நேற்று கோவிலுக்குச் சென்று விநாயகரைப் பார்த்தோம் “இன்று ஏன் விநாயகரைப் பார்க்க வேண்டும்? நாளை வேறு ஒருவரைப் பார்க்கலாம் அல்லவா..!

இன்று முருகனைப் பார்த்து வணங்கப்படும் பொழுது நேற்றுப் பார்த்த அதே முருகனை இன்று ஏன் பார்க்க வேண்டும்? இப்படிப் புதிதாகப் பார்க்கின்றோமா?

நேற்றே முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அபிஷேகம் வேறு செய்தாகிவிட்டது. திரும்ப ஏன் முருகன் கோவிலுக்குச் செல்கின்றீர்கள்?

ஏனென்றால்..,
1.சில பேர் வினாக்களை ரொம்பவும் எழுப்புவார்கள்.
2.சாமி எல்லாவற்றையும் சொல்கிறார்.
3.திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று மிகவும் சுலபமாகச் சொல்லிவிடுகின்றார்கள்.
4.ஆனால், அவர்கள் ஏன் திரும்பத் திரும்பப் புத்தகத்தைப் படிக்கின்றார்கள்?
5.திரும்பத் திரும்ப முருகனைப் போய் பார்க்கின்றார்கள்?
6.திரும்பத் திரும்ப விநாயகரைப் போய் பார்க்கின்றார்கள்?
7.திரும்பத் திரும்ப மாரியம்மனைப் போய் பார்க்கின்றார்கள்?
8.ஒரு தடவைதான் பார்த்தாகிவிட்டதே திரும்ப அதை ஏன் சொல்வானேன்?
9.ஒரு தடவை தான் அங்கே கோவிலுக்குள் சென்றோம் மறுபடியும் அங்கே ஏன் செல்ல வேண்டும்?
10.தெரிந்து கொண்டோம் அல்லவா! இந்தச் சாமி நல்லது செய்யும் என்றார்கள். பார்த்துவிட்டோம். அப்புறம் ஏன் திரும்பப் போய் அதைக் கும்பிட வேண்டும்?

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டு திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று சாதாரண நிலைகளில் “வினாக்கள் எழுப்பிக் கொண்டிருப்போர்.., அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

ஏனென்றால் யாம் உயர்ந்த நோக்குடன் சொல்லும் பொழுது இப்பொழுது அந்த உபதேசக் கருத்திற்கு அது எதிர்மறையாக வருவது என்ன செய்யும்?

1.மனிதனின் வாழ்க்கையில் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்விற்கு
2.இது (அருள் உணர்வுகள்) தடைப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டி கேட்க விடாது தடைப்படுத்தும்.

காரணம் நீங்கள் அல்ல. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டினார் என்றால் அதைக் கூர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவானால் தான் அவரைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வரும்.

அப்படி அவர் திட்டவில்லை என்றால் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை, நினைவுக்கு வருவது மிகவும் கடினம்.

எதுவுமே பதிவு இல்லை என்றால் நம்மால் நினைவுபடுத்த முடியாது. அந்த அறிவும் நமக்கு வராது. ஒரு கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்தோமோ அதைத்தான் இயக்க முடியும்.

இதைப் போன்று தான் எப்படியும் அந்த மகரிஷிகள் பெற்ற பேராற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் வித்துக்களாக ஊன்ற வேண்டும் என்ற ஆசையில் சொல்கிறோம்.

அந்த வித்துக்கள் வளர்ந்தால் தீமைகளை நீக்கக்கூடிய சக்தியைப் நீங்கள் பெறுகின்றீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்று யாம் மதிக்கின்றோம். அந்த ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகத்தான் யாம் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.