இப்பொழுது பஸ்ஸில் அடிபட்டு ஒருவன் துடித்துக் கொண்டிருக்கின்றான்
என்று வைத்துக் கொள்வோம். அவன் துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள்.
அதனால் அவனுக்குள் எத்தனை இம்சைகள் பட்டானோ வேதனைப்படுகின்றானோ
நாம் உற்று பார்த்தால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அதே மாதிரி ஒருவன் ஆட்டினை அதைக் கத்தக் கத்த அறுத்துக்
கொல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
அதைப் பார்த்தவுடன் நம் முகம் சுளிக்கின்றது. அவன் செய்கின்றான்
பாவம். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.
ஆட்டிடமிருந்து வெளிவரும் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள்
பாவ வினைகளாக வந்துவிடுகின்றது. ஆடு அது துடிதுடிக்கும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
மற்றொரு ஜீவனை ஒரு நாய் கடித்துக் குதறுகின்றது. இந்த வகையில்
அங்கே பாவங்கள் நடக்கின்றது. அது துடிக்கும் உணர்வுகளைப் பார்க்கின்றோம்.
அதைப் பரிவு கொண்ட மனதுடன் பார்க்கும் போது அதனின் உணர்வுகள்
நமக்குள் பாவ வினையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
1.ஒன்றை அது மற்றதைக் கொன்று புசிக்கும் பொழுது “அது எப்படித்
துடித்ததோ…,”
2.ஒன்று மற்றொன்றைத் “தாக்கும் பொழுது..,” அந்த உணர்வின்
அலைகள் படர்ந்ததோ
இரண்டு உணர்வின் வித்தாக இது நமக்குள் பதிவாகின்றது.
ஆக, அங்கே எப்படி ஒன்றை ஒன்று விழுங்குகின்றதோ அதே போன்று
நமக்குள்ளும் நம் நல்ல குணங்களை ஒன்றை ஒன்று விழுங்கி செயலற்றதாக மாற்றி பாவ வினைகளாக
நமக்குள் விளைந்து தீய வினைகளாக உருவாகிவிடுகின்றது.
பாவ வினைகளையும் தீய வினைகளையும் நீக்க நாம் என்ன செய்ய
வேண்டும்?
பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றிடும்
சக்தியாக வளர்ந்து வந்துள்ளோம்அவ்வாறு வளர்ந்து. இன்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில்
மனிதனாக வந்தோம் என்பதை நாம் அறிதல் வேண்டும்
விண்ணிலிருந்து வரும் ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்று
தனக்குள் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அதை நாம் எளிதில்
பருகுவதற்குத்தான் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். அந்த விநாயகர் தத்துவத்தை
உணர்த்தியவன் அகஸ்தியர்.
இந்த மண்ணுலகில் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய
அகஸ்தியர் இன்று விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்
அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய
வினைகள் சாப வினைகள் அகல வேண்டும் ஈஸ்வரா என்று விநாயகரைப் பார்க்கும் பொழுது இப்படி
எண்ணுதல் வேண்டும்.
இந்த நல்ல வினைகளை நாம் ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.
நல்ல வினைகள் நமக்குள் சேர்க்கச் சேர்க்க இதனின் கணக்குகள் கூடி நாம் பார்த்த பாவ வினைகளின்
கணக்குகள் குறைந்து சிறுத்து விடுகின்றது.
நமது குருநாதர் இயற்கையின் நிலைகள் எது எது எப்படி இயங்குகின்றது?
நமக்குள் தீமைகள் எப்படி வருகின்றது. தீமைகள் நமக்குள் எப்படி விளைகின்றது? அந்தத்
தீமையை விளைவிக்கும் நிலைகளிலிருந்து நாம் எப்படித் தப்ப வேண்டும் என்பதை உண்ர்த்தினார்.
பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கிடையிலும் அவர் காட்டிய
அருள் வழியில் அனுபவபூர்வமாக யாம் கண்டுணர்ந்ததைத்தான் உங்களிடம் உபதேசிக்கின்றோம்.
1.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட
வேண்டும்.
2.தீமைகள் உங்களை அணுகக் கூடாது.
3.உங்கள் பார்வையினாலேயே தீமைகள் அகல வேண்டும் என்ற நிலைக்கே
தான் இந்த உபதேசத்தைக் கொண்டு வருவது.
யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை நீங்கள் உங்களுக்கு
வேண்டிய உணர்வை உட்கொண்டால் தான் அந்த உணர்வின் தன்மை வரும்.
உபதேசிக்கும் அருள் உணர்வுகளை ஏற்றுக் கொள்வோம். தீமையை
நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வோம். நம்மை அறியாது வந்த தீமைகளைப் போக்குவோம்
என்ற இந்த உணர்வுகள் உங்களுக்குள் வர வேண்டும்.