கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு
வாழ்ந்து வளர்கின்ற இல்லத்தில் மகிழ்ச்சியும் மணமும் நிறைந்திருக்கும்.
அத்தகையை இல்லங்களில் மனைவியின் சமையல் மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும்.
கணவன் தனது மனைவியின் நலன்களைப் பற்றிச் சிந்திப்பதாலும் மனைவி தன் கணவனின்
நலன்களைப் பற்றிச் சிந்திப்பதாலும் அவர்களின் இரு எண்ணங்களும் வலு நிறைந்ததாக
இருக்கும்.
வேலைக்கோ அல்லது வியாபாரத்திற்கோ எல்லும் கணவன் பல நபர்களைச் சந்திக்க
வேண்டியிருப்பதால் பல உணர்வுகள் அவரிடத்தில் வந்து மோதும் வாய்ப்புண்டு.
சங்கடம், கோபம், வெறுப்பு, வேதனை போன்ற உணர்வுகள் அவரிடத்தில் வந்து மோதும்
பொழுது அது அவருடைய பணியிலும் குடும்பத்திலும் அமைதியைக் குலைப்பதாக
அமைந்துவிடும்.
அல்லது குடும்பத்தில் கணவன் மனைவி இருவரின் உணர்வுகள் வேறுபட்டு
இருவருக்கிடையே உள்ள ஒற்றுமை குலைந்து போனாலும் அதுவும் கணவனின் தொழிலையும்
அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும்.
உதாரணமாக, வீட்டில் கணவன் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வியாபாரத்திற்கு வருவாரானால் கடைக்கு
வரும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்தச்
சரக்கு நல்ல சரக்காக இருந்தாலும் அது வாடிக்கையாளரைத் திருப்தியடையச் செய்யாது.
இதனால், வாடிக்கையாளர் சரக்கை வாங்காது சென்றுவிடுவார்கள்.
கணவனுக்கு வீட்டில் ஏற்பட்ட வெறுப்பான உணர்வுகள் அவர் வெளிப்படுத்தும்
மூச்சலைகள் மூலம் கடையில் படர்ந்து நல்ல சரக்குகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள்
அந்த வெறுப்பான உணர்வைச் சுவாசித்து அவரிடத்திலும் வெறுப்பான உணர்வையே
தூண்டிவிடும்.
இவ்வாறு குடும்பத்தில் உருவான குழப்பம் தொழிலும் படர்ந்து அங்கும் துன்பத்தையே
தருகின்றது.
இதைப் போன்று ஒருவர் அலுவலகத்தில் பணி புரிபவராக இருந்தாலும் வெறுப்பின்
உணர்வுகளால அவருடைய பணிகள் தடைப்படுகின்றன. அதனால் அவருடைய மேலதிகாரிகளிடம் கெட்ட
பெயரைச் சம்பாதிக்கும் நிலை உருவாகிவிடுகின்றது.
ஆகவே, இத்தகையை தீய உணர்வுகளின் தன்மையை உணர்ந்து கணவன் மனைவி இருவரும்
அன்புடன் மனம் ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒருவர் மற்றொருவரைப்
பார்க்கும் வண்ணமாக நேருக்கு நேர் அமர்ந்து கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து
கொள்ள வேண்டும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க
வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு
நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் மனைவிக்குக்
கிடைக்க வேண்டும் என்று கணவனும், என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று
மனைவியும் உணர்வை ஒருவருக்கொருவர் பாய்ச்சுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவரைப் (கணவன்/மனைவி) பார்ப்பவர்கள் நல்ல
எண்ணம் பெறவேண்டும், அவர் வழி நல் வழியாக இருக்க வேண்டும் என்ற உணர்வினைப்
பாய்ச்சுதல் வேண்டும்.
எங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் நாங்கள் இருவரும் என்றும் மகிழ்ந்த உணர்வுடன்
இருக்க அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை மனைவி கணவருக்காக ஏங்கித் தியானிக்க
வேண்டும். இதைப் போன்று கணவனும் மனைவிக்காக எண்ணித் தியானிக்க வேண்டும்.
இவ்வாறு இருவரும் தியானிப்பதால் எங்கு சென்றாலும் இருவருக்கும் பாதுகாப்பான
நிலைகள் ஏற்படும்.
இருவரிடமும் அறியாது சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகள் நீங்கும்,
சொல்லும் செயலும் புனிதம் பெறும், பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலை ஏற்படும்.
இரு மனமும் ஒரு மனதாக இணைந்து செயல்படும் நிலை ஏற்படும். இல்லற வாழ்க்கையில்
எல்லா நலமும் எல்லா வளமும் பெற முடியும்.
கணவன் மனைவி இருவரின் மகிழ்ந்த உணர்வலைகள் அவர்கள் இல்லங்களில் படர்ந்து
இல்லங்களுக்கு வருவோர் அனைவரும் இந்நிலை பெற முடியும்.
ஆக, கணவனின் உணர்வுகள் மனைவிக்குப் பாதுகாப்புக கவசமாகவும், மனைவியின்
உணர்வுகள் கணவனுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் செயல்படும்.
ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ந்து வாழச் செய்திட நம்முடைய மகரிஷிகள் காட்டிய
பேருண்மைகள் இது.