ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2015

கொடிய விஷத்தை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்

நமது அன்றாட சகஜ வாழ்க்கையில் வெளியில் தொழிலுக்குச் செல்கின்றோம். பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம். அதற்கு வேண்டிய பக்குவங்களை எடுத்துச் சொல்கின்றோம்.

ஆக, அவர்கள் சொல்லும் வேதனை வெறுப்பு இவைகளை நுகர்கின்றோம். அறிகின்றோம், அவர்களுக்கு நல்ல உபாயங்களைச் சொல்கின்றோம்.

உபாயத்தைச் சொல்லிவிட்டு வந்த பின் அவர்கள் சொன்ன தீமையின் உணர்வுகள் நம் உடலில் வந்துவிடுகின்றது.

கஷ்டப்படுவோர் சொல்லைக் கேட்டு நீங்கள் அதில் உள்ள நியாயத்தைக் கேளுங்கள்.
அவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
நம்மையும் சோர்வடையச் செய்வார்கள்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு வந்தால் சரியாகச் சாப்பிட முடியாது. இந்த உணர்வுகள் என்ன செய்யும்? அதே இயக்க உணர்வாக இரத்தத்தில் மாறுகின்றது.

இரத்தத்தில் மாறியவுடன்
உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
நம் உடலில் கெட்ட அணுக்கள் சேர ஆரம்பிக்கின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் ஓம் நமச் சிவாய. நாம் எதை நுகர்கின்றோமோ “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது. ஓம் நமச் சிவாய.., சிவாய நம ஓம்.

கஷ்டத்தை என்னிடம் சொன்னான். அது இப்படி இருந்தது அதனால் நான் உதவி செய்தேன் என்றெல்லாம் சொல்வீர்கள்.

கஷ்டப்படும்போது உதவி செய்தேன் கடைசியில் பார்த்தால் எனக்குக் கஷ்டம் வந்துவிட்டது. இதுதான் ஓம் நமச் சிவாய.., சிவாய நம ஓம்

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் அது உடலாகி சிவாய நம ஓம். இந்த உடலிலிருந்து அதே சொல்லைச் சொல்லும் அதனின் உணர்வுதான் வரும்.

அவன் உடல் நலிந்தது
நம் உடலும் நலிகின்றது.

அவன் குணம் குறைந்தது
நம் குணமும் குறைந்தது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்று தீமைகளை நீக்கி இன்று தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

சக்தி பெற்ற மனிதன் நாம் - ஈகை பண்பு பரிவு என்ற நிலைகள் இருப்பினும் பிறருடைய துயரங்களைக் கேட்டு அவர்களுக்கு நாம் உதவி செய்தாலும் அந்தத் துயரம் வராது தடுக்க நீங்கள் என்ன வைத்திருக்கின்றீர்கள்?

எல்லோரும் நல்லவர்கள்தான். பேரன்பு கொண்டவர்கள் தான். இதைத் துடைக்கும் சக்தி இல்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு பாதாமில் நல்ல சரக்குகளைப் போட்டு செய்து வைத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே அந்தப் பக்கம் ஒரு விஷத்தைத் தூவிக் கொண்டுள்ளார்கள். அது வெளியில் வருகின்றது. காற்றிலே பறந்து வருகிறது.

நாம் செய்து வைத்த பாதாமை மூடி வைக்கவில்லை என்றால் அந்த விஷம் பட்டுவிடும். இந்தப் பொருளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

நான் நன்றாகத் தான் பாதாமைச் செய்தேன் என்று நினைப்பீர்கள். ஆனால் விஷக் காற்று இதற்குள் பட்டவுடன் சாப்பிட்டபின் மயக்கம் வரும். இதற்கு என்ன செய்கிறது?

வீட்டில் பார்த்தால் நிறைய பல்லிகள் இருக்கும். பல்லி அது போகும் வழியில் மனிதன் மேல் எச்சம் இட்டால் பட்ட இடங்களில் பொறி பொறியாகும். அந்த எச்சம் சமையல் செய்த குழம்பில் விழுந்தால் அதைச் சாப்பிட்டால் குடலுக்குள் புண்ணாகும்.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து அது செல்லப்படும் போது சில உறுப்புகளில் இந்த உணர்வின் தன்மை பொறி பொறியாக வந்துவிடும்.

நான் எந்தத் தப்பும் செய்யவில்லை.
நான் நன்றாகத் தான் இருந்தேன் என்று நினைப்போம்.
இதில் தப்பு யார் செய்தது?
இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.

இத்தகைய கொடிய விஷத்தை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

உயிரணு தோன்றி மனிதனான பின் இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளான் அகஸ்தியன். இன்றும் நஞ்சை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் நுகர்ந்தால் அவன் ஒளியாக மாற்றிய ஆற்றலை நாம் பெறலாம். அவன் சென்ற எல்லையை நாமும் அடைய முடியும். இதில் ஒன்றும் சிரமமில்லை.