ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2015

துருவ நட்சத்திரத்தை எடுத்து இரத்தத்தில் போட்டு கலந்துகொள்ளுங்கள், பாதுகாப்புக் கவசமாக இருக்கும்

சென்னை போன்ற பெரிய நகரங்களில் பார்த்தோம் என்றால் ஒரு பக்கம் கழிவு நீர் (சாக்கடை) போகும். ஒரு பக்கம் பைப்பில் நல்ல தண்ணீர் போகும்.

வீட்டுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீர் பைப் துருப்பிடித்து சிறிதளவு ஓட்டை ஆகிவிட்டால் வீட்டுக்குள் வரும் நல்ல தண்ணீரில் சாக்கடை கலந்த நீராக வரும். கெட்ட வாசனை கலந்து வரும்.

நல்ல தண்ணீருக்குள் இப்படிக் கலந்து வந்து கிருமிகளாகி பிறகு புழுக்கள் எல்லாம் உண்டாகும்.
நல்ல தண்ணீர் பைப்புக்குள் சென்றாலும்
பக்கத்திலிருக்கும் சாக்கடையை இழுத்துக் கொண்டு
வீட்டுக்குள் வந்துவிடுகின்றது.

இதைப் போன்று நாம் போகும்போது மற்றவர்களுடைய உணர்வு வரப்படும்போது நாம் அவைகளைக் கவர்ந்து தெரிந்துதான் போகின்றோம். அதனின் உணர்வை இழுத்துத்தான் நம்மை உணரச் செய்கின்றது.

உதாரணமாக நாம் நல்ல எண்ணம் கொண்டு வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வும் சேர்த்துவிடுகின்றது. எது?

ஒரு நல்ல காரியத்தை எண்ணிப் போகிறோம். ஒருவன் தவறென்ற உணர்வைச் செய்தால் அதையும் இழுத்துவிடுகின்றது. அந்தச் சாக்கடையும் இதனுடன் கலந்துவிடுகின்றது.

நல்ல எண்ணத்துடன் நாம் செல்லும்போது ஒருவன் வெறுப்பாக இருந்திருப்பான், கோபமாக இருந்திருப்பான், வேதனையாக இருப்பான் இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்த்திருப்போம்.

இது என்ன செய்கின்றது? இந்தப் பைப்பில் இழுத்து அதை இணைத்துவிடுகின்றது.

இதன் வழியில் தான் நாம் நல்லதை எண்ணிச் செல்லும்போது அதனுடன் இந்த ஆன்மாவில் சேர்த்தவுடனே பிறரின் தவறான உணர்வுகளை இழுத்து அதை உள்ளுக்குள் (நமக்குள்) கொண்டுபோய்ச் சேர்க்கின்றது.

ஏனென்றால் நம் கண்ணின் உணர்வு நம் உணர்வு உயிரில் படுகின்றது. பட்ட பிற்பாடு உயிரில் வந்து மோதுகின்றது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தைப் பார்க்கப் போவதை விட்டுவிடுகிறோம். செய்தாலும் சரியாகச் செய்ய மாட்டோம்.

இந்த உணர்வுகள் வந்தவுடன், சனியன் இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கின்றது இப்படியெல்லாம் தப்புப் பண்ணுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே ஆபீசுக்குப் போவோம்.

ஆபீசில் போய் உட்கார்ந்தவுடன் இந்த உணர்வு கலந்துவிடும். அப்பொழுது அந்த ஆபீசுக்குப் போவதற்கு முன்னாடி என்ன செய்யவேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பார்த்தவர்களை எண்ணி அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இது மாதிரி மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால்
இதை அடைத்துவிட்டு (தீமைகள் புகாமல்)
இந்த மாதிரி மாற்றியமைத்து (நல்லதாக வேண்டும் என்று)
நல்லதை உள்ளுக்குள் கொண்டு போகவேண்டும்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்தவுடனே தீய அணுக்கள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது. அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

நன்றாகத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் தெளிந்து தெரிந்து அதன் படி நடக்கவும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

நான் கஷ்டப்பட்டேன், அனுபவித்தேன், சக்தியையும் கொடுக்கின்றேன் நீங்கள் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த உபதேசத்தைக் கேட்டும் பலனில்லை.

ஆகவே இதைப் பயன்படுத்த முயற்சி எடுங்கள்.
அது நல்ல பலனைக் கொடுக்கும்.
உங்கள் எண்ணம் பரிசுத்தமாகும்.
நல்ல எண்ணங்களை உருவாக்கலாம்.
நல்ல சிந்தனைகளை உருவாக்கலாம்.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே செல்லும் முன் இதே போன்று ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் என் செயல் அனைத்தும் மற்றவர்கள் போற்றும் நிலைக்கு வரவேண்டும் என்று இரு ஐந்து நிமிடம் இந்த எண்ணத்தை எடுத்துச் சுவாசிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை எடுத்து
இரத்தத்தில் போட்டு
இப்படிக் கலந்து கொள்ள வேண்டும்.

நாம் எடுக்கும் இந்த எண்ணம் நம்மைக் காக்கும். நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றவருக்கும் நல்லதாகும். இதைப் போன்று செய்து பாருங்கள். உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும்.