ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2015

உயிரை நாம் யாராவது மதிக்கின்றோமா? – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

தீமை நமக்குள் புகாமல் தடுக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் உபதேசம் என்ற நிலையில் கொடுத்து பதிவாக்குகின்றோம். உபதேசத்தை நீங்கள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் தியானம் செய்யும்போது பதிவாக்கிய உபதேசத்தின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணினால் அதை எளிதில் பெற முடியும்.

சில பேர் என்ன செய்கின்றார்கள்?

தியானம் என்று சொன்னவுடன் என் பையன் இப்படிச் செய்கின்றான், கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று யாம் சொல்லும் உபதேசத்திற்கு முன்னாடி உபதேசத்தைப் பதிவாக்காதபடி பல எண்ணங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.

நான் தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லையே என்று சொல்கிறார்கள்.

கேட்கும் வரையில் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அமைதியாக இருப்பார்கள். ஆனால், தியானத்தில் இருக்கும்போது பார்த்தால் மன உளைச்சல் வருகிறது, சங்கடம் வருகிறது, இதெல்லாம் வருகிறது.

இது எதனால் இப்படி வருகிறது?

நீங்கள் தியானிக்கும் போது துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை இழுப்பதற்காகத்தான் யாம் இந்த உபதேசமே செய்கின்றோம்.

 துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

தியானத்தின் மூலமாக துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். பழகிக் கொண்டபின் தீமையான உணர்வுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே கண்ணின் நினைவினை வானை நோக்கிச் செலுத்துங்கள்.
அடுத்து கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து
உயிரின் பால் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தினை இழுத்துச் சுவாசியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் உங்கள் உடலுக்குள் சென்று தீமை செய்யும் அணுக்களை வேக வைத்து அதைப் பிரித்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்.

இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனை இம்சைப்பட்டிருப்பார்?

தீமைகள் எப்படி வருகின்றது?
சாதாரண மக்கள் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்படுகின்றார்கள்?
இதையெல்லாம் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு பல அவஸ்தைப்பட்டேன்.

இந்த உயிர் எத்தனையோ உடல்களுக்குப் பின் இன்று நம்மை மனிதனாக உருவாக்கியிருக்கின்றது. அப்படிப்பட்ட உயிரை யாரும் மதிக்க மாட்டேன் என்கிறார்களே. இந்த உடலைத்தான் மதிக்கின்றார்கள், உயிரை யாரும் மதிக்கவில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல் என்றார் குருநாதர்.

நீ ஆண்டவனுக்குச் சேவை செய்வது என்றால் ஒவ்வொரு உயிரும் அந்த ஒவ்வொரு உடலையும் ஆள்கின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்யவேண்டும்?

அந்த உடலெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லச் சொன்னார் குருநாதர்.

இப்பொழுது உபதேசிக்கக்கூடிய உபதேசம் நீங்கள் நுகரப்படும்போது உங்கள் உயிரான ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை அருள் உணர்வுகள் அபிஷேகம் நடக்கின்றது.

கோவிலில் பால் அபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அது அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்.

உங்கள் நல்ல குணத்தைக் காப்பாற்றவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? அந்தப் பாலைப் போல மனம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு வரும் போது பாருங்கள். அந்த வேதனையுடன் அபிஷேகம் செய்வார்கள். அப்பொழுது அந்த உயிருக்கு அதுதான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்வாகும் போது அந்த உணர்ச்சிகள்தான் முன்னாடி இருக்கும். அப்பொழுது நான் பாலாபிஷேகம் செய்தால் எப்படி இருக்கும்?
விஷத்தில் போய் பாலை ஊற்றினால் என்ன செய்யும்?
பாலும் விஷமாக மாறிவிடும்.

ஆகவே, யாம் உபதேசத்தின் நிலைகளில் கொடுக்கும்போது நீங்கள் வேதனையுடன் எடுத்தீர்கள் என்றால் யாம் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.

நாம் பல முறை சொல்லியிருக்கின்றேன், இதைப் பயனற்றதாக்காதீர்கள் என்று. ஏனென்றால் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. யாம் உங்களுக்குள் பதிவாக்கும் அருள் ஞான வித்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்.
அவனை மதித்து அந்த அருளைப் பெற்றீர்கள் என்றால்
இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவீர்கள்.