ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2015

ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் “சார்ஜ்” செய்யும் இடம் - இராமேஸ்வரம்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் கடைசிக் கரையாக
இதை மனிதன் புரிந்து கொள்வதற்காக
ஓரத்தில் ஒதுங்கி ஒரு திட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள்,
கோடிக்கரை.

அங்கே கடல் தெரிகின்றது. அந்தக் கடலுக்கு நேராக வடக்குத் திசையில் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கும் அளவிற்கு அந்தத் தீவும் அமைந்திருக்கின்றது.

அதனால் இராமேஸ்வரம் என்ற ஊரில் அங்கே துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சாதாரண மக்களும் எண்ணி ஏங்கி இந்த உடலுக்குள் சார்ஜ் செய்வதற்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஏற்றி வலுப்படுத்திக் கொண்டபின் அடுத்து தனுசு கோடி.

சந்தர்ப்பத்தில் நம் வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்திக்கின்றோம். உதாரணமாக ஒரு பொருள் உடைந்து அதிகமான பணம் செலவழிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திவிட்டு, “சரி நாளைக்குச் சம்பாதித்துக் கொள்வோம்..,” என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம்
பக்தி மார்க்கத்திலே பக்தி எப்படி இருக்க வேண்டும்?
மனிதன் தீமைகளை எப்படி நீக்க வேண்டும்”
அதற்கு வேண்டிய உபாயங்களைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே, தனுசு கோடி எத்தனை கோடி உணர்வுகளைப் பெற்று இன்று இந்த மனிதனாக ஆனோமோ தீமைகளை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு வந்தால் ஒவ்வொரு நிலைகளிலும் கோடி.
இப்படிக் கோடி உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது
நம் உயிர் ஒன்றாகின்றது.

கோடி உணர்வின் ஒளியின் ஒன்றாகி அது இன்றைக்கு ஒளியின் சரீரமாக இருப்பது துருவ நட்சத்திரம். அங்கே சென்றால் நாமும் ஒளியின் சரீரம் ஆகின்றோம்.

27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து சூரியன் ஒளியாக ஆகிறது. அதே போல 27 நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எடுத்து நமக்குள் மனிதனாகி ஒளியின் உணர்வு பெற்றபின் அது ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக நாம் வாழும் (மற்ற) இடங்களில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடியாது. அந்தக் கடலோரப் பகுதிப் பக்கம் போகும்போது இராமேஸ்வரத்தில் வடக்குத் திசையில் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தைப் பார்த்து அதை நமக்குள் உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் ஞானிகள் அன்று அந்த இராமேஸ்வரத்தில் காட்டியுள்ளார்கள்.

இதை யாரும் சொல்வதில்லை. ஆனால், இன்று என்ன செய்கிறார்கள்?

காசை வாங்கிக் கொண்டு சாங்கியங்களைச் செய்து பாவத்தைப் போக்கும் இடம் என்று
தவறான பாதைகளைக் காட்டித்
தவறான வழிகளில் போய்
அதுதான் நமக்குச் சிறந்தது என்று
இதன் வழிதான் பெரும்பகுதி மக்கள் போய்க் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் காட்டிய நிலைகளில் உன் உயிரை நீ மதித்து நட, உன்னை அறியாது சேர்த்த அழுக்கை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியை எடுத்துக் கொள் என்றுதான் இராமேஸ்வரத்தை வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் 27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளியாக ஆக்குகின்றது சூரியன்.

 27 நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
விஷத்தின் தன்மையை முறித்தவன்,
உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
ஒளி உடலாக ஆனவன், அகஸ்தியன்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆண் பெண் என்ற நிலைகளில் இணைந்து ஒளி உடல் பெற்றவன் அவன். உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை இதே சூரியன் தான்  கவர்கின்றது. நமக்கு முன் வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்தை சூரியன் கவர்கின்றது. உயிரணு நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுவின் தன்மை உருவாகி உடலாக மாறுகின்றது.

செடியில் விளைந்த சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்தால் அந்தச் செடியின் வித்தை மண்ணிலே ஊன்றினால்
புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
தாய்ச் செடியின் சத்தை எடுத்து
அதே செடியாக விளைகின்றது.

அதே உணர்வு
       அதே வித்து
       அதனின் நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பலவிதமான உணர்வுகளை எடுத்து 27 நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டது.

ஒளியின் உடலாக
     அதே உயிர் கொண்டு
          நம் உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.