கோவிலுக்குச் செல்லும்போது அங்கே தீபாராதனை காட்டுகின்றார்கள். அந்த
வெளிச்சத்தில் அங்கே இருக்கும் பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அப்பொழுது நாம்
எதை எண்ண வேண்டும்?
பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும்
அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
குடும்பத்திற்குள் உள்ள
குறைகளை எண்ணாது எல்லோரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், நண்பர்களுக்குள் பகைமை வராது
பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அந்தக் கோவிலில் மனிதனை உருவாக்கக் காரணமான நல்ல குணங்களை அங்கே தெய்வமாக வைத்துக்
காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
அந்தக் குணத்தை எண்ணினால் அந்தத் தெய்வம் எப்படிச் செய்ததோ தீமைகளை நீக்க உதவுகின்றதோ
அந்த உணர்வை நாம் எண்ணினோம் என்றால் தீமையை நீக்கிடும் சக்தி பெறமுடியும்.
ஏனென்றால் நுகர்ந்த உணர்வுதான் நமக்குள் எண்ணங்களாகி அந்த உணர்ச்சிதான் சொல்
செயல் என்ற நிலைகளில் அமையும். நாம் நல்ல உணர்வுகளைப் போற்றினால் அதனின் உணர்வுகள்
நம் உடலுக்குள் நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.
நமக்குள்
நல்ல அணுக்களை உருவாக்க உருவம் அமைத்து அருவத்தின் செயல்களை நாம் பெறக்கூடிய மார்க்கத்தைக் கோவிலில் கொடுத்துள்ளார்கள்
நமது ஞானிகள்.
ஆகவே, கோவிலில் நாம் எதை எப்படி எண்ணி எடுக்க (சுவாசிக்க) வேண்டும் என்பதை
வழிகாட்டியுள்ளார்கள்.
தீபாராதனை காட்டும்போது பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.
சிலையைப் பார்க்கும்போது இந்தத் தெய்வீக குணத்தை நாங்கள் பெறவேண்டும், தெய்வீகச் செயலாக இருக்க வேண்டும்,
தெய்வீக நிலை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அங்கே வைத்திருக்கும் கனி
வர்க்கங்களைப் பார்க்கும்போது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும்
நாங்கள் பெறவேண்டும், எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
சாமிக்குத் தங்க ஆபரணங்களை அணிந்திருப்பார்கள். அதைப் (தங்கத்தைப்) பார்க்கும்போது தங்கம் எப்படி இருக்கின்றதோ
தங்கத்தைப் போன்று மனம் மங்காது இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
கோவிலுக்கு வருபவர்களும், வீட்டிலும், மற்றும் வேலை செய்யும் இடங்களிலும்
அனைவரும் இந்தச் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படி உபதேசத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஆனால், யாம் சொல்லும்
உபதேசத்தைத் திரும்பக் கேட்டால் திருப்பிச் சொல்லத் தெரியாது. ஆகவே திரும்பச்
சொன்னால்தான் ஞாபகத்தில் இருக்கும்.
“சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச்
சொல்கிறார் சாமி” என்று மட்டும் உடனே (SUDDEN) சொல்லத்
தெரியும். ஆக, சங்கடமோ, துன்பமோ வரும் நேரத்தில் என்ன செய்வார்கள்?
யாம் சொன்ன உபதேசத்தின் நிலைகளை அப்படிச் சொல்பவர்களால் செய்ய முடிகின்றதா
என்றால் முடியவில்லை.
அந்த நேரத்தில் வெறுப்பின்
உணர்வு வந்தால்
யாம் உபதேசித்த உணர்வு பதிவாகவில்லை,
அதை இழுக்க முடியவில்லை
நீங்கள் சுவாசித்த தீமையின் உணர்வுதான் வலுவாகின்றது
உபதேசித்த உணர்வை நீங்கள் பெற முடியவில்லை என்றுதான் அர்த்தம்.
இயற்கையின் நிலைகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நீங்கள்
எப்படி உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும்
சொல்கிறோம்.
ஏனென்றால், குரு இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் அலைந்தேன் கஷ்டப்பட்டேன், அனுபவித்தேன்
அருள் உணர்வை விளையை வைத்தேன். அந்த ஞான வித்தை உங்களிடம்
கொடுக்கின்றேன்.
நீங்கள் இதைப் பதிவு செய்தபின்
அதை வைத்து உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
சாமியார் காப்பாற்றுவார், சாமி காப்பாற்றும் ஜோதிடர் காப்பாற்றுவார் என்று அதன்
வழி நடந்தால் என்னைக் காக்கும் என்று தான் எண்ணுகின்றீர்கள்.
ஆனால், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்கி அதை நினைவுக்குக்
கொண்டு வந்து கவர்ந்து நுகர்ந்து உங்களுக்குள் விளைய வைத்தால் உங்கள் தீமைகளை இது
நீக்கும். கோவிலுக்குச் சென்றால் இதைப் போன்று எண்ணிச் செய்து பாருங்கள்.
உங்கள் உடல் ஒரு கோவில். மனிதனாக உருவாக்கக் காரணமான நல்ல தெய்வங்கள் அந்த
உணர்வு உங்களுக்குள் வந்து தெய்வ நிலை பெறவேண்டும்.
கோவிலில்
எல்லோரையும் ஒன்று சேர்த்து
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்,
நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று
ஒவ்வொருவரையும் எண்ணச் செய்வதற்குத் தான் கோவில்.
வைரத்தைப் போல் சொல்லில் ஜொலிப்பும், வார்த்தையில் ஜொலிப்பும் வாழ்க்கையில்
ஜொலிப்பும் நாங்கள் பெறவேண்டும். எங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் பெறவேண்டும்,
தொழில் செய்வோர் பெறவேண்டும்.
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள்
பெறவேண்டும். எங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் பெறவேண்டும், தொழில்
செய்வோர் பெறவேண்டும் என்று
இப்படி எண்ணினால் இந்த உணர்ச்சிகளெல்லாம்
உங்களுக்குள் “உமிழ்நீராக” மாறுகின்றது
உயர்ந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.