ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2015

முதலில் தாய் தந்தையருக்குத்தான் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று கோவிலில் எண்ணும்படி காட்டியுள்ளார்கள் – எண்ணுகிறோமா?

நம் தாயே கடவுளாகின்றது. தெய்வமாகக் காக்கின்றது. தாயை எண்ணி ஏங்கினால் அவர்கள் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எளிதில் பெறலாம்.

காட்டுக்குள் போய்ப் பாருங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தினால் “அம்மா...,” என்று சொன்னால் போதும். தாயிடம் வளர்ந்த உணர்வுகள் இந்தக் காற்றிலே உண்டு. தாயின் உடலிலும் உண்டு.

அம்மா என்று சொல்லும் பொழுது
அந்த உணர்வை இழுத்து முன்னாடி கொண்டு வந்து
ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்மைக் காக்கும்.

உற்று நோக்கி அந்த உணர்வைக் கவரும் புலியோ யானையோ அதுவும் தாய்ப்பாசம் உடையது. நுகர்ந்தபின் தாயின் உணர்வுகள் நம்மைக் கொல்லாது பாதுகாக்கும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ரோட்டில் ஒரு நாய் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்மைத் துரத்தினால், “அம்மா.., “ என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அந்த நாய் அப்படியே நிற்கும். தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிலுக்குப் போய் சாமியைப் பார்க்கிறோம், சாமியாரைப் போய்ப் பார்க்கிறோம், ஜோதிடக்காரரையோ மந்திரவாதியையோ போய்ப் பார்க்கிறோம். நல்ல நேரம் வருகிறதா கெட்ட நேரம் வருகிறதா என்று பார்க்கிறோம்.

தாயை எண்ணி
உங்களுடைய அருள் வேண்டும்,
நான் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்,
எனக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று எண்ணி ஏங்கிச் சுவாசியுங்கள்.

அந்தத் தாயின் உணர்வு நமக்குள்ளும் இருக்கின்றது, இந்தக் காற்றிலிருக்கின்றது அதை நீங்கள் பெற முடியும். அதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவில்களில் அதைத்தான் எண்ணும்படிச் செய்துள்ளார்கள். அதன்படி தாயை நாம் யாராவது எப்படி எண்ணுகின்றோமா? யாரும் எண்ணுவதில்லை.

முதலில் எங்கள் அம்மா அப்பாவிற்குத்தான் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும்
என்று கோவிலில் எண்ணும்படிச் சொல்கிறார்கள்.
கோவிலில் யார் அப்படிக் கேட்கிறார்கள்?

காசு, சொத்து கொடுத்தால் எங்கள் அம்மா அப்பா நல்லவர்கள் என்பார்கள். கொடுக்கவில்லை என்றால் எங்கள் அம்மா ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தது போல் செயல்படுகிறது என்பார்கள்.

உதாரணமாக இரண்டு பிள்ளைகள் இருந்தால் ஒரு பையன் நல்லவனாக இருந்தால் அவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். ஆனால், இன்னொரு பையன் முடியாத நிலையில் இருந்தால் அவனுக்குக் கொடுத்தால் அவனுக்கு மட்டும் எங்கள் அம்மா கொடுக்கின்றது எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறது என்று சொல்வார்கள்.

தாய் முடியாதவனை உயர்த்தத்தான் எண்ணும்.
அது இவனுக்குப் (நன்றாக இருப்பவனுக்கு) பொறுக்காது.

இதைப் போன்ற உணர்வுகள் வரும்போது நாம் இந்த இயற்கை எப்படி இயக்குகிறது என்பதனை உணரல் வேண்டும்.

எண்ணம் தான் நம்மை உயர்வாக்குகின்றது,
எண்ணம் தான் நம்மை இழிவாக்குகின்றது,
எண்ணம் தான் வேதனையை உருவாக்குகிறது
அந்த வேதனைதான் நம்மை நோயாக்குகின்றது
பின் மனிதனின் உருவையே மாற்றிடும் சக்தியாகிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் எண்ணங்களை, உணர்வுகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.