Thursday, December 3, 2015

அகஸ்தியனைப் போன்று வானுலக ஆற்றலைப் பெறும் மெய்ஞானியாக நீங்கள் ஆக வேண்டும் - ஞானகுரு

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் கூட்டிப் பூஜிக்கத் தொடங்குகின்றான். அதனின் உட்பொருள் என்ன?

இந்த உடலில் சிறிது நாள் தான் நாம் வாழப் போகிறோம். அதற்குள் எந்தப் பகைமையும் இல்லாது ஒன்று சேர்த்து வாழும் உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் இந்த உயிரின் தன்மை ஒளியாக மாறுகின்றது.

அதுதான் கோடிக்கரை. தனுசு கோடி

தீமைகள் நமக்குள் புகாது தடுத்து நாம் ஒன்றாகச் சேர்க்கும் நிலையாக ஒவ்வொரு உயிரும் அந்தப் பிறவியில்லாத நிலையை அடையக்கூடிய பக்குவத்தைத்தான் இராமேஸ்வரத்தில் இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைக் வைத்துள்ளார்கள்.

ஆனால், இராமேஸ்வரத்தில் நாம் இன்று என்ன செய்கிறோம்?

எண்ணெய் தேய்த்துவிட்டு பித்ருக்களுக்குக் கொடுத்துவிட்டு பாவத்தைப் போக்கிவிட்டு வாளியை எடுத்து கிணறுகளில் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தண்ணீரை மோந்து ஊற்றிக் கொள்கிறோம்.

அங்கே கான்ட்ராக்ட் எடுத்திருப்பார்கள். அவர்களிடன் காசைக் கொடுத்து அந்தத் தீர்த்தத்தை ஊற்றிக் கொள்கிறோம். கடைசியில் எங்கே போகிறோம்? கோடித் தீர்த்தம் என்று அவனுக்கும் அங்கே காசைக் கொடுத்துவிட்டுப் போகின்றோம்.

காசைக் கொடுத்துவிட்டு உயர்ந்த சக்தியைப் பெறுவதாகத்தான் நம்முடைய எண்ணங்கள். மனிதன் எண்ணக்கூடிய எண்ணங்களே நமக்குள் ஆகின்றது.

ஆகையினால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம். இந்த விஞ்ஞான உலகில் வரும் இருளைப் போக்குவோம். மெய்ஞானிகளை நாம் உருவாக்குவோம்.

அகஸ்தியனுக்குப் பின் மெய்ஞானிகள் பெரும்பகுதி வரவில்லை.

ஒவ்வொரு நிலையிலும் பக்தி மார்க்கத்தில் வந்தவர்கள் தான் உண்டே தவிர வானுலக ஆற்றலைப் பெறும் தகுதி பெற்றவர்கள் நிறைய இல்லை.

ஆகவே, இன்றைய நிலைகளுக்கு ஞானிகளை மகரிஷிகளை நாம் உருவாக்குவோம்.
நம்மையும் காப்போம்.
ஊரையும் காப்போம்.
உலகையும் காப்போம்.
விஞ்ஞான அறிவிலிருந்து மீள்வோம்.
விஞ்ஞான அறிவால் வந்த நஞ்சினை வெல்வோம்
என்று உறுதிப்படுத்தி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற நிலையில் இனி நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

ஏனென்றால், இப்பொழுது குறுகிய காலம் தான் இருக்கின்றது. எப்பொழுது வேண்டுமென்றாலும் குண்டு வெடிக்கலாம். கத்தி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற நிலைதான்.

இதிலிருந்து நாம் தப்புவதற்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த நிமிடம் நாம் வெளியில் சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

“அட பாவமே.., இந்த மாதிரி குண்டு விழுகின்றதே, என் பையன் சாகின்றானே” என்றால் இந்த உடலுக்குள் தான் போகின்றோம். அவனும் இறக்கின்றான்,  நாமும் இறக்கின்றோம்.
கடைசியில் என்ன ஆகின்றது?
புழுவாக, பூச்சியாக, எறும்பாக இப்படித்தான் பிறக்க முடியும்.

ஆக மொத்தம் இதைப் போன்ற இல்லாதபடி என்றுமே இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை, அருள் ஒளி பெற்றோம் என்றும் ஏகாந்த நிலை என்ற நமக்கு எதிர்ப்பே இல்லை என்ற நிலையை நாம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திடும் நிலையாக இந்த வாழ்க்கையில் இப்படிச் செயல்படுங்கள்.

தபோவனத்தில் வெளியிட்டுள்ள அருள்ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள். அதில் வெளிப்படுத்தியுள்ள மெய்ஞானிகளின் உணர்வுகளை கவனத்தில் கொண்டு வாருங்கள்.

அதன் வழியில் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள். இருளை அகற்றும் மனப்பான்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய மனது தெளிவாகும்.

இருளை உங்களுக்குள் புகாது தடுத்துக் கொள்ளும் அந்த ஆற்றல் பெறவேண்டும் என்றால் இதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

திட்டியவரை எண்ணினால் நமக்குள் உடனே புரையோடுகிறது. அவரை எண்ணினால் உங்கள் காரியமெல்லாம் கெடுகின்றது. அவருக்கும் கெடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் தொடர்ந்து இல்லாதபடி அருளைப் பெருக்குங்கள், இருளைப் போக்குங்கள்.

பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய நமது குரு அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவாக்கி
உங்கள் சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
பேரருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

இனி நீங்களும் பிறவியில்லா நிலை அடையும் அருள் ஆனந்த நிலையை இந்த வாழ்க்கையில் அடைந்து பொருளறிந்து செயல்படும் திறன் பெறக்கூடிய அந்த சக்தி பெறவேண்டும் என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

மீண்டும் மீண்டும் அதை நினைவு கொள்ளுங்கள்
மெய்ப் பொருளைக் காணுங்கள்
அழியா ஒளியின் சரீரம் அனைவரும் பெறுங்கள். எமது அருளாசிகள்.