ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2015

நீ பட்டது போதும்..., தாயே..., மகாலட்சுமி..!

லவா குசா என்பவர்கள் இராம காவியத்தைப் பாடி வருகின்றனர். இதை இராமன் உற்றுக் கேட்கின்றான்.

நம்முடைய காவியங்களை முழுமையாகச் சொல்வதற்கு இவ்வளவு இளமையான வயதில் இவர்களுக்கு யார் சொன்னது? எப்படி இவர்களுக்குத் தெரியும்? என்ற உணர்வு கொண்டு வினா எழுப்புகின்றான்.

கர்ப்பிணியான சீதா காட்டுக்குச் சென்றிருக்கும்போது அந்தக் கருவில் விளைந்த உணர்வுக்கு
அங்கே வான்மீகி கூறிய உணர்வு கொண்டு
அந்த உண்மையின் உணர்வின் தன்மையை எடுத்து
இங்கே சொல்ல வருகின்றான்
என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறான் இராமன்.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டபின் இராமன் என்ன செய்கின்றான்?

தன் மனைவியை சீதாவை தன் அரண்மனைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வருகின்றான். லவா குசா அவர்கள் சொன்ன உணர்வைக் கேட்டு சீதாவிடம் குற்றம் இல்லை என்று அறிகின்றான் இராமன்.

நாம் தான் தவறு செய்தோம், தவறான வழிகளில் நடந்துவிட்டோம் என்று இப்படி சீதாவைச் சந்தோஷப்படுத்த தன் வீட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிடப் போகின்றான் இராமன்.

அப்பொழுதுதான், பூமா தேவிக்கே தாங்க முடியவில்லை..,

மகாலட்சுமி...., (ஏனென்றால், நம் உயிர் மகா விஷ்ணு) எல்லாவற்றையும் உருவாக்கி இன்று மனிதனாக உருவாக்கியது மகாலட்சுமி.

உலகை வலம் வந்து
தன்னை அறிந்து கொள்வதற்காகச் சென்ற நிலையை
இந்த மகாலட்சுமி (சீதா) எத்தனை அவஸ்தைப்படுகின்றாள்?
என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

இந்த மகா விஷ்ணு உயிர். மகாலட்சுமி பல கோடி உணர்வுகள் சேர்த்து நம்மை வளர்த்துள்ளது என்ற நிலையை இந்த இராமாயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

அப்பொழுதுதான் அதன் உணர்வு வழிப்படி இந்த பூமா தேவி என்ன செய்கின்றது?
நீ பட்டது போதும்...,
தாயே.., மகாலட்சுமி..!
அப்படி என்று சொல்லிவிட்டு உலகின் நிலை கொண்டு பூமி பிளந்து இந்த உடல் என்ற சீதா என்ற சத்து பூமிக்குள் போய்விடுகின்றது.

ஆனால், விஷ்ணு என்ற உணர்வைக் கொண்டு
என்றைக்கும் ஒளி மங்காது, இருள் என்ற நிலைகள் வராது
எந்த இருளையும் தனக்குள் எண்ணாது
உணர்வின் தன்மை பெற்று உயிரான அந்த உணர்வுடன் ஒன்றி வருகின்றது.

அப்பொழுது உடலை விட்டுச் சென்ற சீதா எங்கே சென்றடைகின்றது?

விஷ்ணுவிடமே சென்று (உயிருடனே ஒன்றி) சொர்க்கமடைகின்றது

ஆக, நம் உயிர் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
எத்தனை வேதனைகளைச் சந்திக்கின்றது?
எத்தனை கொடுமைகளைச் சந்திக்கின்றது?
எத்தனை கொடுமைகளிலிருந்து மீட்டிக் கொண்டது?
மனிதனான பின்னும் நமக்குள் எந்த நிலையாகின்றது?
மனிதனுக்குள் எந்தெந்த நிலைகள் மாற்றமடைகின்றது?
சீதா என்ற சுவையான உணர்வுகள் எப்படியெல்லாம் மாறுபடுகின்றது?

ஆனால், எல்லாம் இந்த உடலுக்குள்தான்.

இந்த உடலில் எல்லாவற்றையும் வளர்த்துக் கொண்டாலும் இந்தச் சதைகள் அனைத்தும்
மண்ணிலே வளர்ந்தது
மண்ணுடனே அடங்குகின்றது.

ஆக, உயிரின் தன்மை உணர்ச்சிகளை இயக்குகின்றது. இருளை நீக்கிய உயிரிடம் விஷ்ணுவிடமே ஐக்கியமாகின்றது, சொர்க்கமடைகின்றான்.

இதைத்தான் நம்முடைய காவியத் தொகுப்புகள் இந்த உடலுக்குப்பின் நம் உயிரான அவனிடம் நாம் எப்படி மகிழ்ச்சியின் உணர்வைச் சேர்த்து அவனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்று இராமாயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இதை யாராவது சிறிதளவாவது சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. சீதா இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்பட்டது. கடைசியில் அவள் சொர்க்கமடைந்து விட்டாள் என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

அவன் காட்டிய (வான்மீகி) உண்மையின் மூலங்களை நாம் உணர முடியாது நம் ஆசைக்கொப்ப காவியத்தைப் படித்து இந்த வாழ்க்கைக்குத்தான் பயன்படுத்த முடிகின்றதே தவிர
வாழ்க்கையில் வரும் இன்னல்களை
நாம் எப்படி மாற்றவேண்டும்? என்பதை அறியவில்லை.

இதைத்தான் இங்கே காட்டுகின்றான் இராமேஸ்வரத்தில்.

புழுவிலிருந்து எத்தனையோ சரீரங்கள் எடுத்து நாம் மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. எத்தனையோ உடல்களைக் கொன்று தின்று வந்தது தான் கோடிக்கரை என்பது இந்த மனித உடல். அதுதான் கோடிக்கரை.

இன்று நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு செயலிலும் தீமைகள் வந்து புகும். உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு உணர்வுகளிலும் கோடிக்கணக்கான உணர்வுகள் நம் வாழ்க்கையில் வருகின்றது. தனுசு கோடி, தீமை என்ற உணர்வு வரும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
தீமைகளை நீக்கி நீக்கி - தனுசு கோடி
தீமைகளை நீக்கி தீமை நீக்கி ஒன்றான நிலைகள் கொண்டு
உயிருடன் ஒன்றி நாம் சொர்க்கமடைய வேண்டும்.

ஆக, உணர்வுகள் நம் உடலில் இருப்பதெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதுதான் இராமாயணத்தின் காவியத் தொகுப்பு.