ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2015

நம் உடலுக்குள் "தீமை செய்யும் அணு" எப்படி உருவாகிறது?

ரோட்டில் ஒருவன் சப்தம் போடுகின்றான். சாபமிட்டுக் கொண்டிருக்கின்றான், “உருப்படுவானா.., நாசமாகப் போவான்..,” என்று சப்தம் போடுகின்றான். அதை நீங்கள் கேட்கின்றீர்கள்.

இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் உமிழ்நீராக மாறுகின்றது. உமிழ் நீராக மாறியவுடன் என்ன ஆகின்றது.

அன்றைய தினம் நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பீர்கள். அவன் சாபமிடுவதைக் கேட்கும்போது திடமாகத்தான் கேட்பீர்கள்.

இந்த உமிழ் நீர் உடலுக்குள் போய் ஒரு அரை மணி நேரம் இருக்கும். வயிறு ஏதோ கடா புடா என்று செய்யும். பட பட என்று வயிற்றால் போகும். நன்றாகத் தானே சாப்பிட்டோம் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

இது எதனால் வருகின்றது?

அவன் சாபமிட்ட உணர்வுகள் நமக்குள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்று ஜீரணிக்கக்கூடிய சக்தியை இழக்கச் செய்கின்றது. இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சாபமிடுவோர் பேசுவதை நீங்கள் சும்மா வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் உடலுக்குள் வந்து இந்த நிலையாகிவிடுகின்றது. அப்பொழுது இதைத் துடைப்பது யார்?

கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்தால் சரியாகிவிடுமா? சாமிக்கு பூவைக் கொடுத்து எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து என் உடல் நிலை சரியில்லை, நோயாக இருக்கின்றது, ஒரே கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னால் சரியாகுமா?

கோவிலுக்குச் சென்று கஷ்டத்தையும் வேதனைகளையும் சொல்லி கஷ்டத்தை வளர்க்கத்தான் முடிகின்றதே தவிர அதைப் போக்கும் மார்க்கம் இல்லை. கேட்கும் போதாவது
என் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்
கஷ்டம் நீங்க வேண்டும்
என் உடல் நன்றாக வேண்டும் என்று கேட்கின்றார்களா என்றால்
அதுவும் இல்லை.

நீங்கள் அடுத்தவர்கள் பேசுவதை வேடிக்கையாகப் பார்க்கின்றீர்கள், அந்த உணர்வு உங்கள் உடலில் சேர்கின்றது.

ஏனென்றால் உயிர் ஒரு நெருப்பு. நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதனின் மணத்தைத்தான் கொடுக்கும்.

தீமையான உணர்வுகள் உயிரில் படும் போது அதை இயக்கத்தான் செய்யும். அதைத் துடைக்க வேண்டுமா.., வேண்டாமா..,?

உங்களுக்குள் தீமைகள் வரும்போது அதைத் துடைக்க வேண்டும், தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் அதற்குண்டான அருள் சக்தி வேண்டும் என்று யாராவது கேட்கின்றீர்களா? யாரும் கேட்பதில்லை.

சாபமிடுவதை நீங்கள் கேட்கின்றீர்கள். கேட்டால் அப்பொழுது உடனே என்ன செய்யவேண்டும்?

ஈஸ்வரா.., என்று கண்ணின் நினைவை உடனே புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

மூக்கு வழியாகப் போய்த்தான்
உங்கள் உயிரில் போய் மோத வேண்டும்.

உயிரில் போய் மோதி
அவன் சாபமிட்ட உணர்ச்சி
உங்கள் உடல் முழுவதும் படர்கின்றது.

அங்கே பாருங்கள், இவன் சும்மா இருக்கின்றான் ஆனால் அவன் சாபமிடுகின்றான் பாருங்கள் என்று அவன் சாபமிடுவதைப் பார்க்கின்றீர்கள். உயிரில் பட்டு இயக்கி உங்கள் உடலுக்குள் என்ன செய்கின்றது? அந்த உணர்ச்சி உமிழ்நீராக மாறுகின்றது.

இதை இராமாயணத்தில் எப்படிக் காட்டுகின்றார்கள்?

பார்வதி ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளத்தில் யாராவது ஆண்கள் வந்து குளித்தார்கள் என்றால் பெண்ணாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டிருக்கின்றார்கள்.

அந்தக் குளத்தில் ஒரு குரங்கு விழுந்து பெண்ணாக மாறிவிட்டது. அப்பொழுது வாயு - அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவனுக்கு ஆசை வந்துவிட்டது. அந்தப் பெண்ணுடைய அழகைப் பார்த்து ஆசைப்பட்டு எடுத்துக் கொள்கிறான்.

யார்? வாயு.

அப்படி என்றால் அது எங்கிருந்து வருகின்றது? காலில் பாதத்தில் நாம் பூமியின் ஈர்ப்பிலிருக்கின்றோம். அப்பொழுது சொல்வதை எடுக்கும்போது காந்தம் இழுப்பதனால் அதைச் சுவாசிக்கின்றோம்.

அப்படிச் சுவாசித்து என்ன செய்கின்றது? அது (வாயு) உமிழ்நீராக மாறுகின்றது. இதை மக்களுக்குக் கதையாகச் சொல்லி புரிய வைப்பதற்குப் பதிலாகத் தவறான பாதையைக் காட்டிவிட்டார்கள்.

இந்தப் பெண்ணின் அழகை அப்புறம் இந்திரன் பார்க்கிறான். அவன் நினைத்தது உணர்வுகள் இங்கே வந்து கன்னத்தில் பட்டுவிட்டதாம்.  அது உள்ளுக்குள் போனவுடன் இந்திரன் – கருவாக ஆக்கிவிடுகின்றது.

ஆகவே, இது வாயுவாகப் போய் உமிழ்நீராக மாறி சாப்பாட்டுடன் சேர்த்து அவன் சாபமிட்ட அலைகள் எந்த உணர்ச்சியைத் தூண்டியதோ சாப்பாட்டுடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது?
நம் உடலில் இரத்தமாக மாறுகின்றது.
அந்த இரத்தத்தில் சாபமிட்ட அலைகள் அணுவாக மாறுகின்றது.

இப்படித்தான் நாம் சுவாசிப்பது அனைத்தையும் உயிர் நமக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயுள்ளது. எத்தகைய உணர்ச்சி கொண்டு அணு உருவானதோ அதற்கு நம் உயிர் அதனின் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து ஊட்டி அதை வளர்க்கச் செய்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது, நுகரும் உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் விளையத் தொடங்குகிறது.

இப்படி எண்ணிலடங்காத உணர்வுகளை நாம் சுவாசிக்கின்றோம். இதில் எதனின் கணக்கு அதிகமாகின்றதோ அதற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கும். இதுதான் இயற்கையின் நியதி.

சாதாரண மக்களும் தன்னை அறிந்து
இந்த உடலுக்குப் பின் எங்கே செல்லவேண்டும்?
என்ற பேருண்மைகளைத்தான்
ஞானிகள் காவியங்களாக உருவாக்கி உணர்த்தியுள்ளார்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்து வாழ்க்கையில் வரும் தீமைகளைப் போக்குங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிடும் அருளாற்றலைப் பெறுங்கள்.

உயிருடன் ஒன்றிடும் நிலை பெறுங்கள், ஒளியின் சரீரம் பெற்றிடுங்கள். எமது அருளாசிகள்.