ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2015

தெய்வீக அன்பைப் பெற்று, தெய்வீகப் பண்புகளை வளர்த்து, தெய்வீக சக்திகளை நாம் பெறுவோம்

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறுங்கள். அதே போல அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதியுங்கள்.
அவரவர்கள் உடல்களைக் கோவிலாக மதியுங்கள்.
அவர்கள் உடல்களைச் சிவமாக மதியுங்கள்.
அவர்களுடைய கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.

அவர்களுடைய உயிரையும், உடலையும், கண்களையும் மதிக்கப்படும் பொழுது
நம் உயிரை நாம் மதிக்கின்றோம்.
நம் உடலை சிவமென்று நாம் மதிக்கின்றோம்.
நம்முடைய கண்களை நாம் மதிக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சேர்க்கும்போது அந்தக் கணங்களைக் கணபதி என்று வேண்டுவோம். ஆறாவது அறிவை முருகன் என்று நினைப்போம்.

அருள் ஒளியை நமக்குள் தீமைகளை அகற்றும் சக்தி என்று ஒவ்வொரு மனிதரையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

ஏனென்றால், அப்படி நாம் எண்ணினோம் என்றால் ஒரு மனிதனுக்குள் தீங்கை விளைவிக்கும் உண்ர்வை மாற்றிட முடியும் அவர் மேல் வரும் பகைமையை நாம் தடுத்திட முடியும்.

ஒவ்வொருவர் உயிரை ஈசனாகவும், கண்ணைக் கண்ணனாகவும், உடலைச் சிவனாகவும், பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு, அந்த வினைக்கு நாயகனாக மனித உடலை விநாயகா என்றும், தீமைகளை அகற்றிடும் சக்தியாக மனித உடல் பெற்றதை ஆறாவது அறிவை முருகன் என்றும் எண்ணுங்கள்.

 நம் எண்ணமே ராமன் என்றும், உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும், உயிரால் ஈர்க்கப்படும் காந்தத்தை லட்சுமி என்றும் எண்ணுங்கள்.

நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் பிரம்மாகின்றது. அதன் உணர்வே நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது என்ற நிலையை ஒவ்வொரு மனிதரையும் அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் என்று எண்ணினால் நமக்குள்ளும் அந்தச் சக்திகளைப் பெறுகின்றோம்.

ஏனென்றால் நீங்கள் வாழ வேண்டும்; உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது
உங்கள் உயிரை மதிக்கின்றேன்.
உங்கள் உடலை சிவமாக மதிக்கின்றேன்.
உங்கள் கண்ணைக் கண்ணனாக மதிக்கின்றேன்.

நாம் இப்படி எண்ணும் பொழுது நம் கண்களில் மற்றவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு வருவதில்லை.

ஆனால் அதே சமயத்தில், ஒருவர் தவறான, வெறுப்பான செயல்களைச் செய்து விட்டார் என்று உற்றுப் பார்க்கும்போது பார்த்தவரின் கண்கள் சிவந்து விடுகின்றது. கண்ணனுக்கே நாம் துரோகம் செய்கின்றோம்.

அந்த உணர்வின் நிலையை நமக்குள் நுகர்ந்துவிட்டால் உடலான சிவனுக்குத் துன்பத்தை உண்டாக்குகின்றோம்.

நமது ஆறாவது அறிவை தெளியும் மனதை, நாம் வேதனை என்ற உணர்வை  எடுக்கும்போது முருகனுக்கே துன்பத்தை உண்டாக்குகின்றோம் என்று நினைவில் வையுங்கள்.

ஆகவே, அருள் ஞானம் பெற்ற இந்த உணர்வு கொண்டு, அண்டம் பிண்டத்திற்குள் பெற்ற உணர்வின் சக்தியை நீங்கள் தெளிந்து, ஒவ்வொரு மனிதனையும் இதைப்போல எண்ணி ஏங்குங்கள். அப்படிச் செய்தால்
மதம் இருக்காது.
இனம் இருக்காது.
மொழி பேதம் இருக்காது.

ஒவ்வொரு நிலையிலும் உங்களை நான் நேசிக்கும் பொழுது, என்னை நேசிக்கும் பண்பே உங்களுக்கும் வருகின்றது.

நான் உங்களைக் கடவுளாக மதிக்கும் பொழுது என்னை நீங்கள் கடவுளாக மதிக்கின்றீர்கள். கடவுள் என்ற தன்மை வரப்படும் பொழுது பகைமை என்ற நிலைகள் அகற்றப்படுகின்றது.

இதைப் போன்று வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிதரிடமிருந்து நாம் குறைகளைக் காண நேர்ந்தால், நுகர நேர்ந்தால் என்ன செய்யவேண்டும்?

மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படரவேண்டும்.
அந்த ஈசன் குடியிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெறவேண்டும்.
சிவனாக வீற்றிருக்கும் அந்த உடல் நல் நிலை அடைய வேண்டும்.
வழி காட்டும் அந்தக் கண்ணன் (கண்கள்) மகிழ்ச்சி பெறும் அந்த சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நமக்குள் அந்தச் சக்தி பெறுகின்றது. உங்களை நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அதே நிலை ஆகின்றது.

இதைத்தான் கீதையிலே, "நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்". நமது வாழ்க்கையில் இதைப் படிப்படியாக உயர்த்திக் கொள்ளுங்கள். மனிதன் என்று நாம் முழுமை அடைவோம்.

பகைமையற்ற நிலைகளை இங்கு உருவாக்கும் பொழுதுதான் உயிரின் தன்மையை ஒளியாக ஆக்குகின்றோம்.

தெய்வீக அன்பைப் பெறுவோம்
தெய்வீகப் பண்புகளை வளர்ப்போம்
தெய்வீகச் சக்திகளைப் பெறுவோம்
தெய்வீகக் குடும்பங்களாக நாம் அனைவரும் வளர்வோம்.