ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2015

குடும்பத்தில் என்ன கவலை இருந்தாலும்,. என்ன குழப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுங்கள்

ஒரு உயிரணு தான் பெற்ற பல கோடி சரீரங்களிலும் தீமைகள் சேரும்போது அந்தத் தீமைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையாக,
தான் தப்ப வேண்டும், தப்ப வேண்டும்
என்ற உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து
இன்று அனைத்துத் தீமைகளையும் நீக்கும் ஆற்றல் பெற்ற ஆறாவது அறிவு கொண்ட மனிதராக நம்மை உருவாக்கியுள்ளது.

மனிதரின் ஆறாவது அறிவு தீமைகளை நீக்கும் ஆற்றல் பெற்றது. இதுதான் வள்ளி. அகஸ்தியர் பல கோடி நஞ்சுகளை வென்று உயிரில் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் உணர்வுகளாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

வள்ளி என்ற வலிமை மிக்க சக்தியான துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் சேர்த்துப் பழகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் சேர்க்கும்போது தெய்வானை, (தெய்வ ஆணை)

அகஸ்தியர் எப்படித் தீமைகளை நீக்கினாரோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் தெய்வமாக இருந்து தீமைகளை நீக்கும் உணர்ச்சியாக நமது உடல் உறுப்புகளை இயக்கும் என்று பொருள்.

கந்த புராணத்தில் முருகன், வள்ளி என்ற உருவங்களைக் காண்பித்து நமக்கு இவ்வளவு பெரிய உண்மைகளைக் கொடுத்துள்ளார்கள். நாம் அவைகளைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒருவர் வேதனையில் இருக்கின்றார். “அட…. பாவமே, ஒரு நல்ல மனிதருக்கு இப்படி வேதனையா…?” என்று அவரைப் பார்த்து இரக்கப்படுகின்றீர்கள்.

வேதனையான உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டபின் கிரியை.

அவருடைய வேதனையான உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு அவருடைய வேதனையை நீக்கும் நிலையாக அவருக்கு உதவி செய்கின்றீர்கள். அவருடைய வேதனையை நீக்குகின்றீர்கள்.

ஆனால், வேதனை என்ற உணர்வின் வலு உங்களுக்குள் வந்துவிடுகின்றது.

வேதனைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் இநன் உணர்வுகள் நமது உயிரில் பட்டு அது நம்முள் கிரியை ஆகி நம்மிடத்தில் ஞான சக்தியாக மாறுகின்றது.

நமது குடும்பத்தில் என்ன கவலை இருந்தாலும், என்ன குழப்பம் இருந்தாலும்,
இந்த நிலை என்ன?
ஏன் ஏற்பட்டது? என்ற நிலையில்
மன வலிமை கொண்டு திருத்தக்கூடிய நிலையும்
நம்மை வேதனை உணர்வுகள் இயக்காத நிலையும்
வேதனையை நீக்கக்கூடிய உணர்வுகளைப் பாய்ச்சி
வீட்டில் அமைதிப்படுத்த வேண்டும்.
தொழிலிலும் அமைதிப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் சேர்த்து வேதனைகளை நம்மிடமிருந்து நீக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

இல்லையென்றால், வேதனை என்ற உணர்ச்சி கொண்டுதான் உயிராத்மா உடலைவிட்டுச் செல்லும். உயிராத்மாவில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்விற்குத்தக்கதான் அடுத்த உடல் அமையும்.

இதன் உண்மைகளை நமக்கு உணர்த்துவதற்குத்தான் “நந்தீஸ்வரன்” சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று புராணங்களில் காண்பித்துள்ளார்கள்.

இன்று மனிதராக இருக்கின்றோம். இந்த வாழ்க்கையில் எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ, அதாவது ஆத்திரம், பாசம், ஆவேசம் போன்ற உணர்வுகளை அதிகமாக நம்முள் சேர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா பேயாக மாறும்.

பேயாக மாறி மனிதராக வாழ்ந்த காலத்தில் யார் மீது பற்று கொண்டோமோ அந்த உடலுக்குள் சென்று பேயாக ஆட்டி அவருடைய நல் உணர்வுகளையும் அழித்து மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாகிவிடும்.

நமது மூதாதையர்கள் நம் மீது பாசமாக இருந்து நமக்குப் பல உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.

அப்பொழுது யார் மீது அதிகப் பாசத்துடன் இருந்தார்களோ, பேரன் மீது அதிகம் பாசம் என்றால் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா பேரனின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

இதனால் பேரனுக்குத் தாத்தாவிற்குண்டான குணம், தாத்தாவிற்குள்ள நோய் என்று எல்லாம் வரும். பேரனைப் பார்த்து, தாத்தா மாதிரியே இருக்கின்றார் என்று கூறுவார்கள்.
தாத்தாவின் மறு பிறப்பு என்று கூறுவார்கள்.
பின், பேரனுக்குத் தாத்தா மாதிரியே நோய் வந்துவிடும்.

ஆகவே இத்தகைய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உடல் மீது பற்று கொண்டு வாழும் நிலையில் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா மனிதரல்லாத உருவைத்தான் உருவாக்கும். அதனால் இதிலெல்லாம் நாம் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நமது உயிர் ஒரு காலத்தில் உடலைவிட்டுப் போய்த்தான் ஆக வேண்டும்.

நம்மிடத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் அந்தக் கணக்கின் பிரகாரம் நமது உயிரான்மா துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கிறது - அவ்வளவுதான்.

அப்பொழுது அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்துவிடுகிறது
உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவாக நிலைத்துவிடுகிறது.
என்றும் பதினாறு என்ற நிலை அடைகிறோம்.
பேரின்ப பெருவாழ்வு என்ற நிலை அடைகின்றோம்.