ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2015

மரணமில்லா பெருவாழ்வு

ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு மனிதனாகப் பிறந்த வழியை அறிந்துகொண்டால் இந்த மனித வாழ்க்கையில்
நாம் எதைச் சேர்க்க வேண்டும்,
எதை வளர்க்க வேண்டும்?
எதைச் சுவாசிக்க வேண்டும்?
எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்?
என்ற உணர்வுகளை நீங்கள் பெறமுடியும்.

இந்த வாழ்க்கையில் நாம் நம்மையறிந்து நம் உயிராத்மாவையும் அறிந்து தீமைகள் நம்மிடத்தில் வராது காக்கத் தவறினால் தேளாக, பாம்பாக அல்லது புலியாகப் பிறக்க நேரிடும்.

உதாரணமாக ஒரு தேள் நகர்ந்து செல்கிறது. அதை ஒரு மான் மிதித்து விட்டால் மானின் நினைவு கொண்டு அந்தத் தேளின் உயிரான்மா வெளிவருகிறது.

ஆக, எதைச் சுவாசித்து கணங்களுக்கு அதிபதியானதோ அதன் நிலை கொண்டு தேளின் உயிரான்மா மானின் உடலுக்குள் சென்று அதனின் உணர்வுக்குள் கருவாகிவிடும். தேள் மானின் உருத்தன்மை பெறும் சக்தியாக மாறுகின்றது.

இப்பொழுது ஆண் மான் ஒரு தேளை மிதித்திருந்தால் தேளின் உயிராத்மா மானின் ஈர்ப்புக்குள் சென்று அதனின் கருவாக உருவாகின்றது. அந்த உருத்தன்மை உருவாக்கும் சக்தியாக மாறுகின்றது.

இதைப் போன்று ஒரு பெண் மான் பாம்பையோ, தேளையோ, ஈயையோ அல்லது ஒரு வண்டையோ மிதித்திருந்தால் அதன் உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு அதன் வளர்ச்சியின் ரூபம் பெறும் சக்தியாக வருகின்றது.

ஆக, மான் இனம் இரண்டும் இணைக்கப்படும்போது இரண்டு அணுவின் தன்மையும் அதில் வளர்ந்த அமிலத்தையும் இதே செல்லுடன் சேர்த்து இணைத்து மானாக உருப்பெறும் தன்மை வருகின்றது.

இன்று விஞ்ஞான அறிவில் ஒவ்வொரு அணு சிசுக்களை எடுத்து மற்ற பெண்பால் உயிரினத்தில் சேர்த்து பெண்பாலின் துணை கொண்டு ரூபம் ஆக்குகின்றனர்.

ஆனாலும், விஞ்ஞான நிலை கொண்டு உருவாக்கப்பட்ட மான் இனங்கள் இரண்டும் இயற்கை வழிப்படி இணைந்து அது மறுபடியும் தன் இனத்தை உருவாக்கும் சக்தி இழக்கப்படுகின்றது. அதை இன்று பார்க்கிறோம்.

விஞ்ஞான அறிவின் துணைகொண்டு ஆண் சேவல் இணையில்லாது ஒரு கோழி முட்டையிட்டால் அந்த முட்டையில் கரு இருக்கும். ஆனால், தன் இனத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்காது.

இது போன்றே, நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்றால் நாம் எப்படி மனிதனாக உருவானோம்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வீட்டுக்குள் பாம்பு வந்தால் என்ன செய்வோம்? அடித்துக் கொல்வோம். வேதனை தாங்காது உடலைவிட்டுப் பிரிந்து வரும் பாம்பின் உயிராத்மா என்ன செய்யும்? அடித்துக் கொன்றவருடைய உடலுக்குள் புகுந்து கொள்ளும்.
நமது தாய் தந்தையர் இதே பாம்பை அடித்துக் கொன்றிருந்தால்
பாம்பின் உயிராத்மா நம் தாய் தந்தையின் உடலுக்குள் புகுந்துவிடும்.

பாம்பு எந்த மனிதனைக் கூர்ந்து கவனித்த்தோ உற்றுப் பார்த்த அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக பாம்பிற்குள் பதிவாகின்றது.

பின், பாம்பின் உடலில் வேதனையின் உணர்வுகளைப் பெருக்கிய பாம்பின் உயிராத்மா பாம்பின் உடலிலிருந்து வெளிப்பட்டு நம் தாய் தந்தையின் உடலுக்குள் வந்துவிடுகிறது.

ஆக, மனிதனாக உருபெறும் கருமுட்டையாக தாய் தந்தையின் உடலில் உருபெற்றுவிடுகிறது. இதைப் போன்று எறும்பைக் கொன்றாலும் சரி அதனின் உயிராத்மா கொன்றவரின் உடலில் புகுந்துவிடும்.

நீங்கள் ஒரு எறும்புக் கூட்டின் மீது நின்று கொண்டிருக்கும்போது ஒரு எறும்பின் மீது கால் பட்டாலும் போதும், அது எழுப்பும் ஒலி அலைகளை மற்ற எறும்புகள் நுகரும் தன்மை வருகின்றது.

எறும்புக்கு எந்தத் தொந்தரவும் இல்லாவிட்டால் உங்களைக் கடிக்காது, பார்க்கலாம். ஆனால், அது நம் காலில் மிதி பட்டால் அது தனது ஒலி அலைகளை எழுப்புகின்றது.

அந்த ஒலியலைகளைக் கேட்கும் மற்ற எறும்புகள்
உடனே ஓடி வந்து நமது கால்களைக் கடிக்கும்.
பாதிக்கப்பட்ட எறும்பை விடுவிக்கவும் தன் இனத்தைக் காக்கவும் அது தன் உணர்வைச் செயல்படுத்துகின்றது என்பதை குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார்.

ஆனால், கடித்த எறும்பை நம் தாய் தந்தையர் கொல்லும் உணர்வுடன் தாக்கி நசுக்கப்படும்போது அந்த எறும்பின் உயிரான்மா நம் தாய் தந்தையரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது. ஆக, மனிதனாக உருப்பெறும் கரு முட்டையாக மாறிவிடுகின்றது.

இதையெல்லாம் மனிதனாக உருவாக்கும் ரசத்திற்குள் இணைத்து அந்த உணர்வின் தன்மையை கருவினை உருப்பெறச் செய்யும் பாதுகாப்பான கவசத்தில் வைத்துவிடுகின்றது. பின் அதனின் வரிசையில்தான் மனிதனாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

உதாரணமாக, நாம் கோழிக்கறியைச் சாப்பிட்டிருந்தால் அதனை நம்முள் அணுவின் திசுக்களாக உருவாக்கிவிடும் நம் உயிர். அந்த அணுத் திசுக்கள் கோழியின் ரசத்தை உட்கொள்ளும் நிலையாகவே வளரும்.

கோழியைச் சாப்பிட்டிருந்தாலோ அல்லது அதை இரண்டு நாளைக்குச் சேந்தாற்போன்று பார்த்திருந்தாலோ அதனுடைய வாசனை உங்கள் உடலில் வீசும். இதனை நீங்கள் அறிய முடியும்.

இப்படி நமக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் (தாய் தந்தையர்) நாம் பாம்பாக, தேளாக நஞ்சு கொண்ட உயிரினமாக சரீரம் கொண்டு வாழந்த நம்மை அடித்துக் கொல்லப்படும்போது நம் உயிரான்மா நம்மைத் தாக்கிய தாய் தந்தையின் கருவுக்குள் சென்றிணைந்து அதன் தொடர் வரிசை கொண்டு மனித உருத்தன்மை பெற்றது.

ஆகவே, இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது யார்? நமது உயிரே.

மனிதனின் சரீரத்தைப் பெறும்போது சமப்படுத்தும் எண்ணங்கள் தோன்றுகின்றது. மனிதனானபின், பல எண்ணங்கள் உருப்பெறும் தன்மையும் அறிந்திடும் நிலையும் வருகின்றது.

பல தீமைகள் வந்தாலும் தீமை என்று உணர்ந்தபின் அந்தத் தீமையின் உணர்வுகள் தனக்குள் நுழையாதபடி தடுத்திடல் வேண்டும்.

ஏனென்றால், இந்த மனித வாழ்க்கையில் நாம் சாந்த குணம் கொண்டு துன்பப்படுவோரை அணுகி அவர்களின் உணர்வை நுகர்ந்தறியப்படும்போது அது நமது நல்ல அணுக்களில் ஊடுருவி “ஓ” என்று இயங்கத் தொடங்கிவிடும்.
இதுதான் “ஓமுக்குள் ஓம்”,
அது இதை அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

இப்படிப் பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம் என்ற நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றும் நம் உயிர் கடைசியில் மனித உருவை உருவாக்கியது.

நமது உயிராத்மாவை ஒளி சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற
இந்த மனிதச் சரீரத்தை அலட்சியப்படுத்தாமல்
நாம் நமது உயிரை மறந்துவிடாமல்,
இந்த மனிதப்பிறவியை நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக எண்ணி
இந்த மனிதச் சரீரத்தை உருவாக்கிக் கொடுத்த
நாம் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி
அவர்களின் ஆசியின் துணை கொண்டு
மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
நம்முள் தீமைகள் வராது தடுத்து
நம்முள் சேர்க்கும் உணர்வுகளை
ஒளி பெறும் உணர்வுகளாகச் சேர்க்க வேண்டும்.

நஞ்சான உணர்வுகளை ஒடுக்கக் கற்றுக் கொண்டவர் அகஸ்தியர். அவர் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்ளவேண்டும். நம் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் அதைப் பெறச் செய்யவேண்டும்.

அதை நமக்குள் வளர்த்தால் அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களைப் போன்று
நாமும் இந்த அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தினை ஒடுக்கி
ஒளியின் உணர்வாக மாற்றிடும் சக்தியினைப் பெறுகின்றோம்.

நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழியினைக் கடைப்பிடிப்போர் அனைவரும் பெருவீடு பெரு நிலை அடைந்து  அழியா ஒளிச் சரீரம் பெற்றிட எமது அருளாசிகள்.