ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2015

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 10

அலுவலகத்தில் வேலையின் காரணமாக வரும் குறைகள்
நாம் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறோம். நம் மேலதிகாரி நாம் செய்யும் வேலைகளில் குறைகளைக் காணுகிறார் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

மேலதிகாரியினுடைய குறையான உணர்வுகள் நம்முள் வராதபடி ஆத்ம சுத்தி செய்து தடுத்துவிட்டு
மேலதிகாரி சிந்திக்கும் திறன் பெறவேண்டும்,
அவருக்கு என் பால் நல்ல எண்ணங்கள் பெறவேண்டும்
என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் இதனின் உணர்வுகள் அவரிடத்தி ஊடுருவி அவரைச் சிந்திக்கச் செய்யும்.

மாறாக, நாம் தப்பு செய்துவிட்டு மேலதிகாரியும் நம்முடைய தவறுக்குத் துணை வரவேண்டும் என்று எண்ணினால் இது நடக்காத காரியம்.

நம்மிடத்தில் தப்பில்லாத நிலைகளில் உண்மையின் உணர்வின் தன்மையில் நாம் செயல்படும்போது நாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரி என் மீது நல் எண்ணம் பெறவேண்டும். அவர் உண்மையை உணர்ந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் நீங்கள் எண்ணியது நடக்கும்.

இதைப் போன்ற சந்தர்ப்பம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வருபவர்கள் தமது மன உறுதி கொண்டு செயல்பட்டு வந்தால் தம்மிடத்திலுள்ள எந்தத் தீமைகளையும் மாற்றியமைக்க முடியும். உயர்ந்த எண்ணங்களின் செயலாக்கங்களை வலிமைப்படுத்த முடியும்.
சொந்தமில்லாத உடலுக்குச் சொந்தம் கொண்டாடுகின்றோம்
நாம் சேர்த்து வைத்த காசும் பணமும் சொத்தும் நம் உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தபின் கூட வரப்போவதில்லை. உடலில் அணிந்துள்ள சட்டையும் துணியும் கூட கொஞ்ச நாளில் நீசமாகப் போய்விடுகிறது.

அம்மா என்பார்கள், அப்பா என்பார்கள். ஆனால், இறந்த உடலை சில நாட்கள் கூட வைத்திருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். வைத்திருக்க முடிகின்றதா?

இறந்த உடலிலிருந்து நாற்றம் வரத் தொடங்கிவிடுகிறது. தூக்கிக் கொண்டு போ என்று கூறுவார்கள். இந்த உடலே நமக்குச் சொந்தமில்லாது இருக்கின்றது. பிறகு நமது வாழ்க்கையில் எதற்கு இத்தனை போர்.

என்றைக்கும் நிரந்தரமான சொந்தமான நமது உயிரோடு ஒன்றி, உயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக ஆக்கவேண்டும்.

நமது ஆறாவது அறிவால் நம்முள் அறியாது சேர்ந்த இருளை நீக்கி உணர்வை ஒளீயாக மாற்றி ஒளியின் உடலைப் பெறவேண்டும்.

எல்லா மனிதரும் இந்த உடலில் சிறிது நாள்தான் வாழ்கின்றனர். ஆனால், ஒளியின் உடல் பெற்றவர்கள் இன்றும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதே சமயத்தில் தங்கள் வாழ்க்கையில் இச்சைகளை வளர்த்து வேதனை என்ற நிலையைக் கூட்டி மீண்டும் பிறவிக்கு வந்து எத்தனை பேர் படாத பாடுபட்டு வேதனைகளை அனுபவிக்கின்றனர்?

இவைகளை இன்றைய ஆஸ்பத்திரிகளில் போய்ப் பார்த்தால் தெரியும்.

இன்று ஆஸ்பத்திரிகளில் அதி நவீனக் கருவிகள் வந்துவிட்டன. ஆஸ்பத்திரிக்குக்ச் சென்று நம்முடைய நோய்களைக் குணமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் வலிகளை நாம் சகித்துத் தாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்தால் அசையாமல் இருக்க வேண்டும், எத்தனை அவதிப்படுகின்றோம்? ஆனால், பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆபரேஷன் செய்துவிட்டு ஆஸ்பத்திரியிலிருந்து வந்தபின் மீண்டும் நிரந்தரமாக இருக்கின்றோமா?
சிறிது நாள்களுக்கு இருப்போம்.
பிறகு இறந்துவிடுகிறோம்.

சொந்தமில்லாத உடலுக்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் என்றுமே ஏகாந்த நிலை என்ற பெரும் சொத்தைப் பெறவேண்டும்.