ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2015

தியானத்தின் மூலம் “நான் சப்தரிஷி மண்டலம்தான் போகிறேன்” என்று கூறமுடியும்

நமது எண்ணங்களால்தான் நமக்கு நோய்கள் வருகின்றன.
அதே எண்ணங்கள் கொண்டு நம் நோய்களை நீக்கவும் முடியும்.
எண்ணங்களால்தான் பரிணாம வளர்ச்சியில் மனிதராக வந்தோம்.

இந்த மனிதப் பிறவியில் நமது எண்ணம் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வின் கணக்கை நம்முள் கூட்டினால் நாம் பிறவியில்லா நிலையைப் பெறலாம்.

தியானத்தில் நாம் அடுத்து எங்கே போகின்றோம் என்பதை முன் கூட்டியே அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். சொல்ல முடியும். நான் இங்கே தான் போகிறேன் என்று கூற முடியும்.

கோபியில் தியான வழி அன்பர் ஒருவர் “நான் போகின்றேன்” என்று சொல்லிக் கொண்டே போனார். இந்தச் சம்பவம் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காட்சியாகக் கிடைத்தது.

நான் “சப்தரிஷி மண்டலம் போகின்றேன்.., என்னை எண்ணி யாரும் அழக் கூடாது” என்று கூறியுள்ளார்.

அவருடைய மனைவி தியானத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தவர். அன்றுதான் தியானத்தில் அமர்ந்தார்.

நாம் சிறிது நாள் தியானமிருந்தால் “ஒளி உடல் பெறுகிறோம்..,” அவ்வளவுதான். இதுதான் விஜய தசமி. உயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வனைத்தும் ஒளியாக மாறுகின்றது. இதுதான் கல்கி. இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை.

எது எப்படி இருந்தாலும் துருவ நட்சத்திரம் உங்கள் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

கஷ்டம் என்ற நினைவை உங்களுக்குள் உள்ளே விடாதபடி தடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

இதை உங்களுடைய பழக்கத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

இடையூறு ஏதேனும் வந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் தியானமிருந்தால் இடையூறுகளை நீக்கும் சிந்தனை உங்களுக்குக் கிடைக்கும். என்ன செய்யவேண்டும் என்ற ஞானமும் கிடைக்கும்.

உங்களிடத்தில் அமைதியும் சாந்தமும், விவேகமும் பிறக்கும். உங்கள் வாழ்க்கையில் எதையும் சீர்படுத்தக்கூடிய வலிமை உங்களுக்குக் கிடைக்கும்.

சிறிது நாள் தியானமிருந்து பாருங்கள். உங்களால் பெறமுடியும்.
கவலை என்பதை விட்டுவிடுங்கள்
சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
சங்கடம் என்பதை விட்டுவிடுங்கள்
வேதனை என்பதை விட்டுவிடுங்கள்.

அருள் உணர்வுகளைக் கூட்டுத் தியானங்களில் அடிக்கடி சொல்லும்போது உற்சாகம் ஊட்டுவதாக அமையும். யாம் கொடுத்த அருள் உபதேசங்களையும், பதிவு செய்த ஒலி நாடாக்களையும் போட்டு மற்றவர்களையும் கேட்கச் செய்து அவர்களுக்கு விளக்கம் கொடுங்கள்.

அதே சமயத்தில் அருள் உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நாம் அருள் உணர்வுகளைச் சொல்லும்போது காற்றில் கலந்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பெறுவதற்கு எளிதாக இருக்கும்.

தியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய  வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

இந்த உலகில் நாம் எந்தப் பொருளைத் தேடிப் பெற்றாலும்
அந்தப் பொருள் நமக்குச் சொந்தமாகப் போவதில்லை.
நாம் நம்மிடத்தில் சொந்தமாக்க வேண்டியது அழியா ஒளிச் சரீரம் பெறும் உணர்வைத்தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் நமது கடைசி எல்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்து இந்த மனித வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களை அகற்றினோம் என்றால் என்றுமே இன்னல் இல்லாத நிலை அடைகின்றோம்.