ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2015

உடல் நமக்குச் சொந்தமில்லை, உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போகவேண்டும்

நாம் யாரிடமாவது பணம் கடனாகக் கொடுத்து திரும்பப் பெற முடியாமல் ஏமாந்திருப்போம். என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று நாம் ஏமாந்த விஷயத்தை மற்றவர்களிடம் சொன்னால் அவர்கள் நமக்கு உதவி செய்வது தடைப்படும்.

நாம் ஏமாந்து போனால், ஏமாந்த விஷயத்தைச் சொல்லவே கூடாது. அதில்லாது அதை மற்றவர்களிடம் சொல்லும்போது நிச்சயம் அவர்களிடமிருந்து நமக்கு உதவி கிடைப்பது தடைப்பட்டுவிடும்.

நாம் இத்தனையும் செய்தேன் ஆனால், ஏமாந்து போனேன் என்று சொன்னால் போதும். நண்பர் நமக்குக் கொஞ்சம் கடனாகக் கொடுத்து உதவலாம் என்று நினைத்திருப்பார்.

நாம் ஏமாந்ததைக் கேள்விப்பட்டதும் “நாம் இவருக்குப் பணம் கொடுத்தால் பணம் திரும்பக் கிடைக்குமா?” என்ற சந்தேகம் கொள்வார். ஆகவே, நாம் இதிலெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நாம் நமது நண்பர்களிடம் சாதாரணமாகப் பேசிவிடுகிறோம். ஆனால், நாம் பேசிய உணர்வுகள் நமக்கு எப்படி எதிரியாக வருகிறது என்பது தெரியாது.

அதே போன்று ஒருவர் தன்னுடைய வேதனைகளை, கவலைகளை உங்களிடம் சொல்வதை நீங்கள் கேட்க நேரும்போது அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின், வேதனையைச் சொன்னவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும்.
அவர் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்,
தெளிந்த ஞானம் பெறவேண்டும்,
அவர் நல்ல பண்புகளைப் பெறவேண்டும்,
உடல் ஆரோக்கியம் பெறவேண்டும்
என்ற இதன் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்தால்
அவருடைய துயரம் உங்களுக்குள் விளையாது.

மாறாக அவருடைய வேதனை நிலைகளை நீங்கள் எண்ணினால் அந்த வேதனை உணர்வுகள்தான் உங்கள் உடலுக்குள் விளையும், பின் நோயாக வளரும்.

நம் உடலுக்குள் இத்தகைய தீமைகளோ, நோய்களோ வளராமல் தடுப்பதற்காக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமது உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அடிக்கடி இணைக்க வேண்டும்.

நமது சிறுநீரகத்தில் ஏதாவது கோளாறென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதன் உணர்வுகளைச் சிறுநீரகத்தில் இணைக்க வேண்டும்.

அதே போன்று நுரையீரலில் தொல்லைகள் இருக்கிறதென்றால் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த உணர்வுகளை நுரையீரல் பாகங்களில் இணைக்க வேண்டும்.

இந்த அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க நுரையீரலிலுள்ள தொல்லைகள் குறையும்.

வேதனை வேதனை என்ற உணர்வுகள அடிக்கடி நுகரும்போது
இருதயம் மிகவும் பலவீனமடைகின்றது.
அந்தச் சமயத்தில் நல்ல உணர்வுகளை நம்மால் நுகர முடிவதில்லை.

இருதயத்தை நாம் நினைவிற்குக் கொண்டுவந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த உணர்வுகளை இருதய பாகங்களில் இணைக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அருள் உணர்வின் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும். இதனால் இது நம் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றது.

இந்த ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகத்தான் அகஸ்தியர் பெற்ற நிலைகளை உங்களுக்குச் சொல்கிறோம். அதை யாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எம்மைக் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார்.

அகஸ்தியர் எங்கெல்லாம் அமர்ந்து தியானித்தரோ அங்கெல்லாம் எம்மை அழைத்துச் சென்றார். அகஸ்தியர் மலை உச்சிகளில்தான் அமர்ந்து தியானித்துள்ளார். மலை உச்சிகளில் மேகங்களைக் கூட்டி தண்ணீர் வரச் செய்தார்.

இதனை உணர்த்துவதற்காகத்தான் அகஸ்தியரின் கையில் கமண்டலம் இருப்பதைப் போன்று காட்டினார்கள் ஞானிகள். ஏனென்றால், அந்த ஜீவ சக்தி – நீர் மிக முக்கியம்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் யாம் உண்மைகளைத் தெரிந்து கொண்டு அவ்வப்பொழுது உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சொல்வதோடு மட்டுமல்லாமல் உங்களிடம் கவனத்தைப் பதிவு செய்து உங்களை அருள் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுடைய எண்ணம் மகரிஷிகளின் அருள் சக்தியைக் காற்றிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அப்படிப் பெறக்கூடிய தகுதியை உங்களிடம் ஏற்படுத்துவதற்குத்தான் யாம் உங்களுக்கு அருள் உபதேசமும், பிரார்த்தனையும் செய்கிறோம்.

ஏனென்றால், இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை. உயிரை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டே போகவேண்டும்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக என்றுமே நமக்குச் சொந்தமாக்க வேண்டும் அதுதான் நம்மைக் காக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகளை மாற்றியமைத்துக் கொண்டே வரவேண்டும். ஆகவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து நம்முள் சுத்தப்படுத்திக் கொண்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

அப்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரில் மோதும்போது “தெய்வ ஆணை,” அதன் உணர்வுப்படி நம் சொல்லும் செயலும் அமைகின்றது.