சாமியம்மாவிற்கு (எமது மனைவி) எலும்புருக்கி டி.பி. நோய்
இருந்தது. அதனால் முதுகெலும்புகள் கரைந்து போயிருந்தன. சாமியம்மாவை டாக்டரிடம்
அழைத்துப் போய்க் காண்பித்தோம்.
டாக்டர்கள் சாமியம்மாவிற்கு சில எலும்புகளை எடுத்துவிட்டு
ஒட்டு எலும்புகளை வைக்கும் ஆபரேசனைச் செய்தால் பொம்மை மாதிரி அவர்கள் உட்கார்ந்து கொள்ளலாம்
என்று கூறினார்கள்.
சாமியம்மாவினுடைய அப்பா டாக்டர்களைப் பார்த்து, எந்தச்
சிகிச்சை வேண்டுமானாலும் கொடுங்கள், எனது மகள் உயிருடன் இருந்தால் போதும், எனக்கு
இருப்பது ஒரே மகள் என்று கூறினார்.
சாமியம்மாவினுடைய அப்பா எம்மைப் பார்த்து, “எனது மகளை
இந்தச் சண்டாளப் பையனுக்குக் கொடுத்துவிட்டு இப்படி இருக்கின்றதே” என்று எம்மைத்
திட்டினார்.
சாமியம்மாவை ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு சென்றார்கள்.
அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தால் எடுக்கவில்லை.
யாம் குருநாதரிடம் ஓடினோம். “சாமி, ஒற்றைப் பிள்ளை...,
காப்பாற்றுங்கள்” என்று கூறினோம்.
“ஆபரேசன் செய்தால் தொலைந்து போகும்டா..,” என்றார்
குருநாதர்.
யாம் ஒன்று கேட்டால் அவர் ஒன்று பேசுவார். குருநாதர் 23
பாஷைகளில் கலந்து கலந்து பேசுவார். எமக்கு ஒன்றும் புரியாது. இரண்டு பேருக்கும்
ரகளை.
“அது.., இது.., எல்லாம் கலவைடா போடா..,” என்று கூறுவார்.
பிறகு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். மயக்க மருந்து வேலை
செய்யாததால் ஆபரேஷன் செய்யவில்லை. ஆபரேஷன் வேண்டாம் என்று டாக்டர்கள்
கூறிவிட்டார்கள்.
டாக்டர்கள் உன் மனைவிக்கு முதுகில் பேண்டேஜ் போட முடிவு
செய்துள்ளார்கள். பேண்டேஜ் எப்படிப் போடவேண்டும் என்று சில யுக்திகளை எம்மிடம்
குருநாதர் சொல்லி “இதை டாக்டர்களிடம் சொல்” என்றார்.
சாமியம்மா முதுகெலும்பு நிமிர்ந்து இருப்பதற்கான பேண்டேஜ்
போட்டார்கள் டாக்டர்கள். முதுகெலும்பு மிகவும் பலவீனமாக இருந்தது. மிகவும் வளைந்து
இருந்தது.
குருநாதர் சொன்னபடி சாமியம்மாவிற்கு பேண்டஜ்
போடுவதற்குண்டான யுக்திகளைச் சொன்னோம்.
அவர்களோ, “நான் டாக்டரா? நீ டாக்டரா.., “ என்று கேட்டு
எம்மை “போய்யா..” என்று கூறிவிட்டார்கள். பிறகு எப்படியோ பேண்டேஜ்
போட்டுவிட்டார்கள்.
ஆனால், சாமியம்மாவினுடைய முதுகெலும்பு இப்பொழுதும் சிறிது வளைந்திருக்கும்.
சாமியம்மாவின் உயரம் இரண்டு இன்ச் குறைவாக இருக்கும்.
ஆஸ்பத்திரியிலிருந்து எமது மனைவியை வீட்டிற்கு அழைத்து
வந்தோம். பேண்டேஜிற்குள் மூட்டைப் பூச்சிகள் புகுந்து கொண்டன. மூட்டைப் பூச்சிகள்
வீட்டிலிருந்து வந்ததா? அல்லது ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததா? என்று தெரியவில்லை.
என் மனைவி படுத்திருந்த கட்டிலிலும் மூட்டைப் பூச்சிகள்.
வீட்டிற்குள் எங்கு பார்த்தாலும் மூட்டைப்பூச்சி, சகிக்கமுடியவில்லை. அந்த
அளவிற்கு ஏராளமான மூட்டைப்பூச்சிகள்.
குருநாதரிடம் சென்று, “சாமி வீடு முழுவதும்
மூட்டைப்பூச்சிகளாக இருக்கிறது என்று கூறினோம்.
“அது.., கெட்ட
இரத்தத்தையெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும்” என்று கூறினார் குருநாதர்.
பாப்பம்பட்டியிலிருந்து ஒரு சாமியார் எமது வீட்டிற்கு
வரவழைக்கப்பட்டிருந்தார். அவரும் வீட்டிற்கு வந்து அது, இது என்று ஏதோதோ சொல்லி
ஏதோதோ செய்து கொண்டிருந்தார்.
திடீரென்று காளி மாதிரி ரூபம் பெரியதாகத் தோன்றவே ஓடிப்
போய்விட்டார். இது போன்ற அற்புதங்களை குருநாதர் செய்து காண்பித்தார்.
ஏதோ சந்தர்ப்பம் குருநாதருடன் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக்
கிடைத்தது. இல்லையென்றால் யாம் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. குருநாதர்
எம்மை விடவே இல்லை.
குருநாதருடன் பழகியவர்கள் நிறையப் பேர். ஆனால், அவர்கள்
எதன் மேல் ஆசை கொண்டிருந்தார்களோ அதிலேயே இருந்தார்கள். அவர்கள் சொத்திற்காகவும்
சுகத்திற்காகவும்தான் குருநாதரைத் தேடி வந்தனர்.
அதைக் கட்டலாம், இதைக் கட்டலாம் என்றுதான் இருக்கிறார்களே
தவிர அருள் உணர்வுகளைப்
பெறுவோம் என்று யாருமே வரவில்லை என்று குருநாதர் எம்மிடம் கூறினார்.
என்னை நிறையப் பேர் தேடி வருகின்றனர். ஆனால், “நான் உனக்கு
அருள் உணர்வுகளைச் சொல்கின்றேன், நீ என்னிடமிருந்து ஓடுகின்றாய்..,” என்று
கூறுவார் குருநாதர்.
எமது மனைவி அனுபவித்த நரக வேதனை ஏராளம். அனுபவித்த வேதனைகள்
கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கும் அதை நினைத்தால் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்.
எமது மாமியாருக்கோ எம்மைத் திட்டுவதுதான் வேலை. வீட்டிற்குள்
வர முடியாது. மாமியார் திட்டுவதைச் சகிக்க முடியாது. இதுபோன்ற பல பரிசோதனைகளை
வைத்துத்தான் குருநாதர் எம்மை அழைத்து வந்தார்.
எமது மனைவிக்கு நோய் எதுவும் இல்லை என்றுதான் நான்
நினைக்கின்றேன். குருநாதர் தான் ஏதோ உண்டு பண்ணி எம்மை அவர்பால் இழுத்திருக்கின்றார்.
குடும்பத்தில்
அமைந்த இந்த நிலைகள் எமக்கு அருள் உணர்வைப் பெறும்
சந்தர்ப்பமாக அமைந்தது. இப்பொழுது யாம் சந்திக்கும்
(உபதேசிக்கும்) சந்தர்ப்பமும் இதுபோன்றுதான்.
எல்லாமே சந்தர்ப்பம்தான் எனும் நிலையை
விபரமாகக் கூறினார் குருநாதர்.