ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2015

அதிகாலையில் செய்ய வேண்டிய தியானம்

அதிகாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிகுள் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது
துருவ தியானம் செய்யுங்கள்.
அந்த நேரம் மிக முக்கியமான நேரம்.

துருவ தியானம் செய்யவேண்டும் என்பதற்காக நீங்கள் அதிகாலையில் பல் துலக்க வேண்டும், குளிக்க வேண்டும் என்பதில்லை. துருவ தியானம் செய்தபின் கூட நீங்கள் பல் துலக்கலாம், குளிக்கலாம்.

இதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

அன்றாடப் பணிகளைச் செய்துவிட்டு ஒவ்வொரு நாளும் நாம் குளித்து உடல் அழுக்கைப் போக்கிக் கொள்கிறோம், துணி அழுக்கையும் போக்கிக் கொள்கிறோம்.

இது போன்று நாம் அன்றாடம் நமது ஆன்மாவில் நம்மையறியாது சேரும் அழுக்குகளை - தீமைகளைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

துருவ தியானம் செய்வதை நீங்கள் ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவந்தபின் உங்களுடைய உடலிலிருந்து நல்ல வாசனை வருவதைப் பார்க்கலாம். ஆக, நல்ல உணர்வுகளை நாம் நுகரும்போது அதன் உணர்வுகள் நமது உடலில் விளைகின்றது. அலைகளாக மாறுகின்றது.

துருவ தியானத்தில் நாம் என்ன செய்கிறோம்?

நம் உடலிலுள்ள உடல் உறுப்புகளை அதாவது இரத்தத்திலிருந்து தோல் மண்டலம் வரை எல்லா உறுப்புகளையும் எண்ணி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைச் சேர்த்து அந்தந்த உறுப்புகளுக்கு வல்லமையைக் கொடுக்கின்றோம்.

இதன் வழியில் காற்று மண்டலத்திலிருந்து நல் உணர்வின் சத்துகளைப் பிரித்தெடுத்து நமது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றோம்.

துருவ தியானம் செய்வதை நம்முடைய பழக்கத்திற்குக் கொண்டு வருவது சிரமமான காரியமல்ல.

மந்திர நிலைகளில் சொல்வது போன்று, மந்திரங்களை இப்படி ஜெபிக்க வேண்டும், அப்படி ஜெபிக்க வேண்டும், ஆயிரம் முறை ஜெபிக்க வேண்டும், இலட்சம் முறை ஜெபிக்க வேண்டும் என்ற நிலை இல்லை.

மந்திரங்களை மறந்துவிட்டாலோ அல்லது மாற்றி ஜெபித்துவிட்டாலோ ஆபத்து என்ற நிலை துருவ தியானத்தில் இல்லை.

தீமை என்ற ஒன்றைப் பார்த்தவுடனே ஆத்ம சுத்தி செய்து நம்மிடத்தில் நஞ்சுகள் தீமைகள் வராது தடை செய்துவிடவேண்டும்.

ஏனென்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நம்முள் துருவ தியானத்தின் வழியில் சேர்த்து வரும்போது இதன் கணக்கு நமக்குள் கூடுகின்றது. 
நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும்
துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் பதிவு அதிகமாகின்றது.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமது உடலிலுள்ள உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் இணைத்துவிடுகின்றோம்.

இப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம் உடலிலுள்ள உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் சேர்க்கும்போது நம் உயிரைப் போன்றே உடலிலுள்ள ஜீவ அணுக்களையும் மாற்றிக் கொண்டு வருகின்றோம்.

உதாரணமாக ஒரு விதையை ஊன்றி தகுந்த தருணங்களில் சில உரங்களைப் போட்டு வந்தால் அந்த வித்து செடியாக வளர்ந்து நல்ல தரமான பலன்களைக் கொடுக்கின்றது.

இதுபோன்றுதான் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைச் சேர்த்து நல் உணர்வின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

இது சாதாரணமாக உங்களுக்குத் தெரியலாம். இந்த உண்மைகளை யாம் அனுபவித்துச் சொல்கிறோம்.

சொல்லும்போது இங்கே விளைந்துவிடுகிறது.
சொல்லாகச் சொல்கிறோம், நீங்கள் கேட்கின்றீர்கள்.
கேட்கும்போது பதிவாகின்றது.
நீங்கள் நினைவுபடுத்தும்போது அருள் சக்தி பெறும் நிலை ஆகின்றது.
இவ்வளவுதான் - சிரமம் ஏதுமில்லை.

ஏனென்றால், இது ஒரு பெரிய அதிசயமில்லை.

நம்மைத் திட்டுபவரை நமக்குள் பதிவு செய்துகொள்கின்றோம். திட்டியவரை நாம் எப்பொழுதெல்லாம் எண்ணுகின்றோமோ அப்பொழுதெல்லாம் நமக்குள் குழப்பம் வருகின்றது.

வியாபாரத்தில் ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்றால் அவரை எப்பொழுதெல்லாம் நினைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் நமக்குக் கோபம் வருகின்றது.
இது போன்றுதான் நம்முள் உள்ள பதிவுதான்
நம்மிடத்தில் மீண்டும் நினைவாகின்றது.

அதனால், மிக சக்தி வாய்ந்த நிலையை அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் திரும்பத் திரும்ப நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளைச் சுவாசித்து உடல் உறுப்புகளில் பாய்ச்சி அந்த உறு[ப்புகளை உருவாக்கிய அணுக்களை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைந்து ஒளியின் சரீரம் பெறமுடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.