ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2015

குரு பீடத்தின் சக்தி எல்லோருக்கும் பொதுவானது - தியானித்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்...!

யாம் எத்தனையோ அவஸ்தைகளை அனுபவித்தபின் அருள்ஞான உணர்வுகளை ஒவ்வொருவரையும் தேடி வந்து சொல்கிறோம். ஆனால், எத்தனை பேர் கடைப்பிடிக்கின்றார்கள்?
எத்தனையோ பேருக்கு நோய்களை நீக்கியிருக்கின்றோம்.
எத்தனை பேர் திரும்பிப் பார்த்தார்கள்?

கடுமையான நோய்களுடன் வந்தவர்களை ஆசீர்வதித்து அவர்களுடைய நோய்க்ளை நீக்கியபின், நீங்கள் ஒருவரைப் பார்த்து நோய் நீங்கிப் போகும் என்று கூறினால் அவருடைய நோய் நீங்கும் என்று சொல்கிறோம். அதற்காகத்தான் யாம் இவைகளைச் செய்கிறோம்.

யாம் எல்லோருக்கும் செய்தோம். ஆனால், அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

கொஞ்சம் விஷயம் தெரிய ஆரம்பித்தவுடனே தனது வசதிக்குத்தான் கொண்டுபோகின்றார்களே தவிர மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணுவதில்லை.

பெரிய அபூர்வ சக்தி என்னிடம் இருக்கின்றது. நான் தான் கடவுள் எல்லாச் சக்தியும் எனக்குள் இருக்கின்றது என்று கூறுவார்கள்.

ஏதாவது ஒன்று நல்லது செய்தால் “நான் தான் செய்தேன், என்னால்தான்  நல்லதாகியது” என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்கள் தன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று விளம்பரம் தேடுகிறார்கள்.

உங்களுக்கு அருள்சக்தி கிடைக்கவேண்டும் என்று யாம் மனமாரச் செயல்படுத்துகின்றோம். ஆனால், கடந்த காலங்களில் யாம் செய்த முயற்சி எல்லாம் தோல்வியடைந்தபின், இனி போதுமான காலம் இல்லை என்ற நிலையில் பேருண்மைகளை வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துவிட்டோம்.

அனைவரும் அந்தச் சக்தியை எடுத்து வளரட்டும். ஏனெனில் இனி நேரமில்லை. ஆகையினால், யாம் வேகமாக எல்லோருக்கும் அருள் சக்தியைப் பதிவு செய்துவிட்டோம்.

நீங்கள் தியானத்தைச் செய்யுங்கள். உங்களுக்கு நலம் கிடைக்கும் என்ற முடிவிற்கு யாம் வந்துவிட்டோம். தியானம் செய்தால்தான் நன்மை கிடைக்கும்.

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். தொழில் சம்பந்தமாக நீங்கள் நூறு பேரைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. அவர்கள் அனைவரும் தங்கள் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார்கள்.

நீங்களும் காது கொடுத்துக் கேட்கிறீர்கள். அந்த நூறு பேரின் உணர்வுகளும் உங்களுக்குள் வந்துவிடும். முதலில் நன்றாக இருப்பீர்கள். இப்பொழுது கஷ்டம் வந்துவிடும்.

இதுபோன்ற சில சூழ்நிலைகளை மாற்றுவதற்குத்தான் யாம் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

ஒருவர் எந்த வகையில் நலமானாரோ அந்த வகையில் அவர் மற்றவர்களுக்குச் சொன்னால் நலமாகும். மற்றவர்களை நாம் பார்க்கும்போது அவர்களுடைய நோய் போகின்றது.

அந்தளவிற்கு, தியானம் செய்பவர்கள் ஒருவரைப் பார்த்து உங்களுடைய நோய் நீங்கிவிடும் என்று கூறினால் அவருடைய நோய் நீங்க வேண்டும்.

அதே மாதிரி தியானம் செய்பவர்கள் சிலர் நோய்வாய்ப்பட்ட சிலருக்குச் சொல்லிய வாக்கின்படி நோயின் தன்மை குறைந்தது என்று கூறுவார்கள். நான் சொன்னேன் அவருக்கு நலமாகிவிட்டது என்று சொல்லி சாமியைச் சந்தியுங்கள் என்று எம்மிடம் அனுப்பிவைப்பார்கள்.

சாமியிடம் செல்லுங்கள் என்று கூறுவதை விட்டுவிட்டு தபோவனத்தின் குருபீடத்தை எண்ணி நீங்கள் இது போன்று செய்யவேண்டும் என்று கூறவேண்டும்.

அதாவது தியானம் செய்யும்போதும், ஆத்ம சுத்தி செய்யும்போதும் தபோவனத்தை குருபீடத்தை எண்ணிக் கொள்ளவேண்டும்.

இது போன்று செய்யுங்கள், உங்கள் உடல் நலமாகிவிடும்,
உங்களுக்கு அருள் சக்தி கிடைக்கும்
தொழில் வளம் பெருகும் என்று ஆர்வமாகச் சொன்னீர்கள் என்றால் இதைக் கேட்டு இதன் வழியில் அருளுணர்வை வளர்க்கும் அன்பர்கள் தபோவனத்தின் குருபீடத்தின் ஈர்ப்புக்கு வருகின்றார்கள்.

குரு அருளை நீங்கள் பெறும் நிலையாக உங்களில் உணர்வை வலிமையாக்கும்போது அந்த ஊக்கத்தால் யாமும் உங்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும். நீங்களும் மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும்.

அந்த அளவிற்குப் பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும்.