ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2015

நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் “ஈஸ்வர தரிசனம்”

கோவிலை அமைத்து அதில் ஈசனுக்குச் சிலைகள் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து தேங்காய் பழம் வைத்து நாம் கும்பிட்டுவிட்டால் அதுதான் ஈஸ்வர தரிசனம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஈஸ்வர தரிசனத்திற்கு இன்று நாம் எப்படிச் செல்கிறோம்? தேங்காய் பழம் கொண்டு செல்கிறோம். சுவையான நைவேத்தியங்களைச் செய்கிறோம். பின், ஆலயத்திற்குள் வணங்கும்போது எப்படி வணங்குகின்றோம்?

அங்கே தெய்வச் சிலைக்குப் படைக்கப்பட்டிருக்கும் கனிகளை மலர்களை சுவைமிக்க பதார்த்தங்களை நாம் எண்ணுவதில்லை. மாறாக நாம் எதை எண்ணுகின்றோம்?

நம் வாழ்க்கையில் நமக்கு ஒருவர் இடைஞ்சல் செய்திருந்தால் அல்லது ஒருவர் நம்மைக் கோபித்திருந்தால் அவர்களைப் பற்றிய நினைவுகளையே அங்கே ஆலயத்தில் எண்ணிக் கொண்டிருப்போம்.

கோபித்தவர்களையும், இடைஞ்சல் செய்தவர்களையும் ஆலயத்திற்குள் நாம் எண்ணினால் நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

ஒரு குழம்பு வைக்கும்போது பலசுவையுள்ள பொருகளைப் போட்டு அதில் சிறிது காரத்தை அதிகமாகப் போட்டால் குழம்பில் காரத்தின் சுவையே அதிகமாக இருக்கும்.

இதைப் போன்றுதான் நாம் தெய்வச் சிலைக்கு முன் சுவையான பலகாரங்களையும், நறுமணமான மலர்களையும் வைத்திருந்தாலும் நமக்கு இடையூறு செய்தவர்களை நாம் எண்ணும்போது நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

தெய்வ வடிவங்களை உருவாக்கி ஈஸ்வர சக்தி எது? என்ற நிலைகளில் கதைகளை எழுதி ஈஸ்வரன் இந்த நிலைகளில் அனைவரையும் காப்பாற்றுவான் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஆண்டவனுக்குத் தேங்காய் பழம், நைவேத்தியம் படைத்து ஆண்டவனிடம் உன்னுடைய குறைகளைச் சொல்லிவிட்டால் ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவான் என்று மற்றவர்கள் சாங்கிய சாஸ்திரங்களை எழுதிவிட்டார்கள்.

நமது உயிரை ஈஸ்வரன் என்றும்
நாம் எண்ணிய எண்ணங்கள் எவையோ அவை அனைத்தையும்
உயிர் ஈசனாக இருந்து ஜீவ அணுக்களை உருவாக்கி
நமது உடலாக மாற்றுகின்றது என்பதை ஞானிகள் காண்பித்தனர்.

உயிரை ஈஸ்வரன் என்றும்
உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வின் சத்தை உடலை சிவம் என்றும் காண்பித்தனர் ஞானிகள். சிவனுக்கு வாகனமாக மாட்டை வைத்து அதற்கு நந்தீஸ்வரன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.

சிவனின் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன். நாம் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் போனவுடன் நந்தீஸ்வரா.., அதாவது சுவாசித்த உணர்வின் குணம் நம் உடலுக்குள் உணர்வின் சத்தாக விளைகின்றது.

இப்பொழுது இந்த மனித உடலில் நாம் எந்த குணத்தை அதிகமாக எண்ணி நமக்குள் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வின் தன்மைக்கொப்ப நந்தீஸ்வரனின் கணக்கின் பிரகாரம் நமது உயிர் நமது அடுத்த உடலை உருவாக்குகிறது என்று ஈஸ்வர தரிசனத்தில் ஞானிகள் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையிலுள்ள சூட்சம இயக்கங்களை மனிதருக்கு உணர்த்தும் விதமாக உடலைச் சிவமாக, உயிரை ஈசனாகக் காண்பித்தார்கள் ஞானிகள்.

ஆகவே,நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் ஈஸ்வர தரிசனம் என்றனர் ஞானிகள்.

இதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஈஸ்வர தரிசனம் என்பதன் மூலம் நமது உயிரை எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தபின் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி நாம் வணங்க வேண்டும்.

இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டபின்
எங்கள் பார்வை பிறர் தீமைகளை நீக்குவதாக இருக்க வேண்டும்,
எங்கள் சொல் பிறர் கஷ்டங்களைப் போக்குவதாக இருக்க வேண்டும்,
எங்கள் பார்வை பிறரை நல்லவர்களாக்கும் நிலை பெறவேண்டும்,
எங்களைப் பார்ப்போரெல்லாம் உயர்ந்த எண்ணங்கள் பெறவேண்டும்
என்று இவ்வாறுதான் நாம் அனைவரும் எண்ணவேண்டும்.

நாம் காலையில் தூக்கதிலிருந்து எழுந்து ஈஸ்வர தரிசனம் எனும் நிலையில் நமது உயிரை எண்ண வேண்டும். நம் கண்கள் உயிரின் இயக்கத்தின் தொடர் கொண்டு இது நல்லது இது கெட்டது என்று காண்பிக்கின்றது.

நமக்கு ஒருவர் நன்மைகள் செய்திருந்தால் அவரை நாம் அதிகமாக எண்ணுவதில்லை. ஒருவர் நமக்குத் தீங்கு செய்திருந்தால், அவன் நமக்குத் தீமை செய்தானே பாவி…, என்று அடிக்கடி அவரைப் பற்றி எண்ணுவோம்.

இப்படிப்பட்ட உணர்வுகளை காலையில் படுக்கையை விட்டு எழும்போது எண்ணினால் வேதனை. காலையில் படுக்கையில் உடல் சோர்வடைந்திருக்கும் வேளையில் வேதனை என்ற உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு நம் உயிரில் மோதும்போது நம் உடலில் வேதனை உருவாகிறது.

அப்பொழுது நம்முடை ஈஸ்வர தரிசனம் எதுவாகின்றது?

நாம் வேதனை உணர்வு ஒன்றைக் கண் கொண்டு பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டபின் நம்மிடத்தில் வேதனையை உருவாக்கும் நினைவாற்றல் வருகின்றது.

நமக்கு ஒருவர் தீங்கு செய்திருந்து அதன் உணர்வுகள் நமக்குள் பதிவாகியிருந்தால் நமக்குத் தீங்கு செய்தவர் பற்றிய நினைவே நம்மிடத்தில் வருகின்றது.

இதனின் தொடர் கொண்டு காலையில் நாம் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இனம் புரியாது “பாவிகள்.., எனக்கு ஏன் இப்படித் தீங்கு செய்கிறார்கள்?” என்ற வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும்.

வேதனைகளை நாம் எண்ணும்போது நம்முள் உள்ல வேதனையை உருவாக்கும் அணுக்களுக்கு உண்வினை அதிகமாக ஊட்டி நமக்குள் வேதனைகளை உருவாக்கும் நோய்களை நஞ்சின் தன்மைகளை வளரச் செய்கின்றது.

இதனை மாற்றுவதற்குத்தான் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம்
ஈஸ்வர தரிசனம் என்று காட்டி
காலையில் எழுந்திருக்கும்போதெ நினைவின் ஆற்றலை
நமது உயிரின்பால் கொண்டு செல்ல வேண்டும்
என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அடுத்து இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்து மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உயிரில் ஒன்றிய உணர்வினை ஒளியின் உணர்வாக மாற்றி இன்று விண்ணில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ள துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள்  அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று பல முறை திரும்பத் திரும்ப எண்ணி தியானிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லாம் வாழ்வில் இனிமை பெறவேண்டும், எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அவர்கள் மன நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இது நம் ஈஸ்வர தரிசனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணும்பொழுது
பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறக்கின்றோம்,
பிறருடைய துன்பங்களை மறக்கின்றோம்,
மற்ற குடும்பத்தினர் நமக்குச் செய்த இடைஞ்சல்களை மறக்கின்றோம்.

ஆகவே, இது போன்ற உயர்ந்த உணர்வின் தன்மைகளை  நமது உயிரில் இணைக்கும்போது நமது உடலில் மகிழ்ந்திடும் உணர்வுகளுக்கு அமுது கிடைக்கின்றது.
மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெறுகின்றோம்.
ஏகாந்த வாழ்க்கை வாழ முடியும். உடலுக்குப்பின்
அழியா ஒளிச்சரீரம் பெறமுடியும்.