ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2015

கஷ்டம் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள் - ஆனால் சக்தியைக் கொடுத்தால் “ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை”

குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை வந்துவிட்டால் நான் செத்து, பேயாக வந்து உன்னைப் பிடித்து என்ன செய்கிறேன் பார்.., என்று கூறி சாபமிட்டுக் கொள்வார்கள்.

இதனால் அந்தக் குடும்பமே நாசமாகும் சந்தர்ப்பம் வருகிறது.

நண்பர் ஒருவர் சந்தர்ப்பத்தால் இறந்துவிட்டார் என்றால் ஐயோ.., இப்படி ஆகிவிட்டதே..,” என்று இன்னொருவர் எண்ணினால் விபத்தில் இறந்தவரின் உணர்வுகள் இவருக்குள் கவரப்படுகின்றது.

இவ்வாறு கவரப்பட்ட உணர்வுகள். இவரையும் விபத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் பார்க்கலாம்.

ஒரு குடும்பத்தில் விபத்து நடந்ததென்றால் அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் விபத்துகள் நடந்து கொண்டேயிருக்கும். சில குடும்பங்களில் விபத்துகள் தொடர்கதையாக இருக்கிறதே என்று இருப்பார்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் அவர்களையறியாமலே இயக்கிக் கொண்டிருக்கின்றன.

இது போன்ற உணர்வுகளின் இயக்கங்களின் தன்மையை யாம் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையிலிருந்து அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டோம். அப்படிக் கிடைத்த அனுபவங்களைத்தான் உங்களிடம் எடுத்துக் கூறுகின்றோம்.

உலகம் எப்படி இருக்கிறது என்று குருநாதர் உணர்த்திய உண்மைகளை யாம் அறிந்துகொண்டோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நடைபெறுகின்றது? குடும்பத்திலுள்ள ஒருவர் இறந்தபின் அவருடைய குடும்பத்தில் என்ன நடைபெறுகின்றது?
இறந்தபின் அந்த ஆன்மாக்களின் நிலை என்ன? என்பதை
யாம் அனுபவரீதியாகத் தெரிந்துகொண்டோம்.

உங்களிடத்திலுள்ள கஷ்டத்தை நீக்கி உங்களைக் காக்கும் சக்தியைக் கொடுத்தாலும் கூட ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.
சாமி (ஞானகுரு) சொன்னபடி தியானம் செய்து என்ன வந்தது?
என்று சிலர் எண்ணுகின்றனர்.

ஆனால், யாம் சொன்னதை எடுத்தால்தான் அங்கே நடக்கும்.

எத்தனையோ பேருக்கு எத்தனையோ துயரங்களைப் போக்குகிறோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து தம்முள் தெளிந்த நிலையை வளர்த்து தீமைகள் தம்முள் வராது காத்திடும் நிலையைப் பெற்றிடல் வேண்டும்.

எல்லா நேரத்திலும் எம்மால் சக்தியை விரயம் செய்ய முடியாது. 

ஆனால், மீண்டும் மீண்டும் தெளிந்த உணர்வை நீங்கள் பெறுவதற்குண்டான வழி முறையை யாம் வகுத்துக் கொடுக்கிறோம்.

ஏனென்றால், உங்களிடத்தில் மீண்டும் வரும் தீமைகளிலிருந்து நீங்கள் கரையேறி வருவதற்குண்டான சுய பலம் வேண்டுமல்லவா.

எல்லாவற்றையும் சாமி (ஞானகுரு) பார்த்துக் கொள்வார் என்று கூறினால் சாமி எதைப் பார்ப்பார்?

நீங்கள் சொல்கிற கஷ்ட உணர்வுகள் எல்லாம் எமக்குள் வந்தால் யாம் தப்புவதற்குத்தான் பார்க்க முடியுமே தவிர அதன் பிறகு உங்களைக் காப்பது எப்படி?

ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து தங்களிடத்தில் வரும் தீமைகளைத் துடைத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.