ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2015

மெய் ஞானத்தைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் வருபவர்கள் மிகவும் அரிதாக இருப்பதன் காரணம் என்ன...?

பள்ளிக்குச் செல்லும் மாணவர்களில் சிலர் பாடங்களில் கருத்தைச் செலுத்தி நன்றாகப் படிக்கின்றனர். நல்ல மதிப்பெண் பெறுகின்றனர்.

வேறு சிலர் பாடம் புரியவில்லை, படிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது என்று சொல்லி பாடங்களில் கருத்தைச் செலுத்தாமல் விளையாட்டின் மீது கவனம் செலுத்தி விளையாடச் சென்றுவிடுகின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் எல்லா ஞானத்தையும் அறிந்து கொண்டு பள்ளிக்கு வருவதில்லை.

இதே போன்று தியானவழி அன்பர்கள் நமது ஞானப் பள்ளிக்கு (தபோவனம்) வரும்போது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வருவதில்லை. தெரிந்து கொள்வதற்குத்தான் வருகின்றனர்

நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில் ஞானத்தைத் தெரிந்து கொள்ளத்தான் வருகின்றனர். அது சமயம் யாம் உபதேசித்த உணர்வுகளை அந்த ஞானத்தைப் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் ஞானத்தில் வளர்ச்சி பெறுவர்.

அதே சமயத்தில் சாமியிடம் சென்றால் தன்னுடைய தொழிலுக்கு ஏதாவது புதிய வழிமுறை கிடைக்குமா? தொழிலில் லாபம் கிடைக்குமா? என்ற எண்ணத்துடன் வருபவர்களும் உண்டு.

யாம் அவர்களை வரவேண்டாம் என்று சொல்ல முடியாது.

அப்படி வருபவர்களிடத்தில் ஆத்ம சுத்தியையும் தியானத்தையும் கடைப்பிடியுங்கள் என்று கூறி சில வழி முறைகளையும் சொல்லி உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று ஆசீர்வதிக்கின்றோம்.
அதுபோன்று நன்மை அடைகின்றனர்.
தாம் நன்மை அடைந்ததையும் கூறுகின்றனர்.

ஆனால் நன்மை அடைந்தபின், தாம் தியானம் செய்யவேண்டும், தன்னுள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வருபவர்கள் ஒன்றிரண்டு பேர்தான்.
நன்மை அடைந்தபின் தபோவனத்தையும்,
எம்மையும் மறந்து போவோரும் உண்டு.

தபோவனம் ஆரம்பித்த புதிது. 12 வருட காலமாக வயிற்று வலி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஒருவர் எம்மைத் தேடி வந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் வலி நீங்கவில்லை என்று சொன்னார்.

அவரைத் தபோவனத்தில் தங்கச் செய்து தியானம் செய்யச் சொல்லி அவருடைய வயிற்று வலியை நீக்கினோம். குணமாகி தன் ஊருக்குச் சென்று எங்கேயெல்லாம் யார் யாருக்கெல்லாம் வயிற்று வலி இருந்ததோ அவர்களையெல்லாம் தபோவனத்திற்கு அனுப்பி வைத்தார்.

“சாமி.., நான் ஊருக்குச் சென்று தபோவனத்தைப் பற்றி எப்படியெல்லாம் சொல்கிறேன் பாருங்கள்..,” என்று கூறிச் சென்றவர் ஒரு கூட்டத்தையே அனுப்பி வைத்தார்.

பெரிய கூட்டமே வரிசையாக வந்து எம்மைச் சாப்பாடு கூட சாப்பிட விடவில்லை. யாம் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தோம்.

முதலில் வயிற்று வலி நீங்கிச் சென்றவர் அதன் பிறகு தபோவனத்திற்கே வரவில்லை. அவர் சொல்லி அங்கே வந்தவர்களிடம் சொல்லி அவரை தபோவனத்திற்கு வரச் சொல்லுங்கள் என்று கூறினோம்.

வயிற்று வலி நீங்கி குணமானவர் தபோவனத்திற்கு வருவதற்கு நேரமில்லை, எனக்கு வேலை நிறைய உள்ளது என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் எம்மைச் சந்திக்கவில்லை. நடந்த நிகழ்ச்சி.

அதே மாதிரி, பெண் பிள்ளை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஐயா.., இந்தக் குழந்தைக்கு இளம்பிள்ளை வாதம் வந்து கால் நடக்க முடியாது போய்விட்டது என்று அழுது கொண்டு வந்தனர்.

அந்தக் குழந்தைக்கு அருள் உணர்வின் ஆற்றலைச் செலுத்தி ஆசீர்வாதம் செய்து நடக்க வைத்தோம். தபோவனத்திற்கு வந்த இரண்டு மணி நேரத்திலேயே அந்தப் பெண் குழந்தை எழுந்து குணம் அடைந்துவிட்டது.

குடு., குடு என ஓடவும், நடக்கவும் செய்தது. குழந்தை நலமாகி ஊருக்குச் சென்றவரகள்தான், அதன் பிறகு தபோவனத்திற்கு வரவே இல்லை.

தபோவனத்தில் தியான மண்டபம் கட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு எம்மிடம் வந்தார்கள்.

இரண்டு வருடமாக இவரால் நடக்க முடியவில்லை. தபோவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டோம். சாமியைச் சந்தித்து நோயாளியை நடக்க வைக்கலாம் என்று இங்கே வந்தோம் என்றார்கள்.

அவரை தபோவனத்தில் ஒரு வாரம் தங்கியிருக்கச் செய்து தியானப் பயிற்சியைக் கொடுத்து நடக்க முடியாமல் இருந்தவரை நடக்க வைத்தோம்.

தான் குணமான சந்தோசத்தில் தபோவனத்திற்குள் இங்கும் அங்கும் ஓடினார். “இதை என் ஊருக்கே நான் சொல்வேன்.., ஊரே திரண்டு வரும் பாருங்கள்..,” என்று கூறினார். இது நடந்த நிகழ்ச்சி.

டாக்டரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டேன். அதனால் என் கால் முடங்கி நான் நடக்க முடியாமல் போய்விட்டது. தபோவனத்திற்கு வந்தேன். சாமியிடம் வந்தேன் 5 நாளில் குணமாகிவிட்டது என்று எல்லோரிடம் சொல்லி கை கால்களை இயக்கி மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் தன் ஊருக்குச் சென்றார். 15 நாட்கள் ஆகிவிட்டது.

அவர் ஊரிலிருந்து திருப்பதி மலைக்கு நடந்து சென்று 50000 ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளார். ஊரிலிருந்து நிறைய பேரை அழைத்துச் சென்று அவர்களுக்கும் 20000 ரூபாய் செலவழித்துள்ளார்.

ஏனென்றால், இரண்டு வருடமாக திருப்பதி வெங்கடாசலபதி கவனிக்கவில்லை. வெங்கடாசலபதிக்குக் காணிக்கை முடிச்சு போட்டதால் திருப்பதி வெங்கடாசலபதிதான் நடக்க வைத்தார் என்றுதான் எண்ணினாரே தவிர தபோவனைத்தை எண்ணவில்லை.

திரும்பி வந்து எம்மைச் சந்தித்தார். நடந்தே சென்று திருப்பதிக்குக் காணிக்கை செலுத்தினேன், ஆகவே உங்களைச் சந்திக்க நாளாகிவிட்டது.

மரக் கன்றுகளைக் கொண்டு வந்தார். என் கையாலேயே மரக்கன்றுகளை இங்கே நட வேண்டும் என்று தென்னை மர, சீதாப்பழ மரக் கன்றுகளை நட்டார்.

விதவிதமான சாதங்களைக் கொண்டு வந்திருந்தார். சாமி கூட அமர்ந்து சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று சாப்பிட்டார்.
ஒரு இரண்டு மூன்று வாரம் இங்கே வந்தார்
அதன் பிறகு அவரும் வரவில்லை.

மூன்று வருடத்தில் காய்க்கும் என்று கூறினார். ஆனால், 10 வருடம் ஆகியும் எதுவும் காய்க்கவில்லை. தென்னை மரத்தில் பாளை கூட விடவில்லை. சீதா மரத்தில் ஒரு பழம் கூட வரவில்லை.

இது போன்று யார் ஒருவர் எம்மைப் (ஞானகுரு) போற்றித் துதிக்கின்றார்களோ அவ்வளவுதான், சாமியினுடைய சக்தி அதோடு போய்விடும்.

ஆனால், யாம் நினைப்பது என்னவென்றால் எம்மைச் சந்திக்க வருகின்றவர்களுடைய துன்பங்களை நீக்கி, நோய்களை நீக்கி, நன்மை பெறச் செய்து அவர்களுடைய ஆன்மாவை வலுப்பெறச் செய்து அவர்களை உயர்ந்த நிலை பெறச்செய்யலாம் என்று எண்ணுகிறோம்.

அவர்களைக் குணப்படுத்தி “நீங்கள் நலமடைவீர்கள்..,” என்று யாரையாவது பார்த்து நீங்கள் கூறினால் அவர்கள் நலமடைவார்கள் என்று கூறுவோம்.

ஏனென்றால், தூண்டிலில் இரையை மாட்டி மீனைப் பிடிப்பது போன்று அவர்களுடைய கஷ்டத்தைப் போக்கினால் அவர்கள் நம்முடைய அருள்ஞான வழிக்கு வருவார்கள் என்று நினைத்தோம்.

ஆனால், அவர்கள் எமக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு “நீயா.., என்னைப் பிடிக்க முடியும் என்று விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
இது போன்று விலகிச் சென்றவர்கள் ஏராளமான பேர்.
இன்று வரையிலும் இது போன்றுதான் நடக்கிறது.

இன்று யாரெல்லாம் தபோவனத்திற்குத் தொடர்ந்து வருகிறார்கள்? நான் பிறவியில்லா நிலை அடையவேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் வருகின்றார்கள்.

ஆக அப்படி வந்தாலும் தனக்குச் சாப்பாட்டிற்குப் பணம் கொஞ்சம் வேண்டுமே என்று எண்ணுகிறார்கள். பணத்தின் மீது ஞாபகம் வந்ததும் தான் ஆத்ம சுத்தி செய்வதை விட்டுவிடுகிறார்கள்.

சாமி.., நீங்கள் சொன்னதைத்தான் செய்து கொண்டுள்ளோம் என்பார்கள். ஆனால், காரியம் நடக்கமாட்டேன் என்கிறது என்று சொல்வார்கள்.

தபோவனத்திற்கு எப்பொழுதும் வந்து கொண்டேயிருக்கின்றேன். என்னுடைய காரியங்கள் சித்தியாகமாட்டேன் என்கிறதே என்று எண்ணுவார்கள்.

இதன் காரணம் என்னவென்றால் சாமி செய்வார் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
சாமி (ஞானகுரு) உபதேசித்த அருள் உணர்வுகளை எடுத்து
குருவின் வழியில் தனது காரியங்களில் வெற்றி பெறுவோம்
என்ற எண்ணம் அங்கே வருவதில்லை.

இப்படி அனைவரும் உலக பாசத்துடன் ஒட்டி வாழ்கின்ற நிலை உள்ளது. நம்முள் உள்ள தீமைகளை குரு காண்பித்த அருள்ஞான வழியில் நாம் அகற்ற முடியும்.
வாழ்க்கையை உயர்த்த முடியும், உயர முடியும்
என்ற தன்னம்பிக்கை அனைவரிடமும் வரவேண்டும்.