அன்றைய காலத்தில் ஊரில் போதுமான மழை இல்லையென்றால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து
மலைப் பக்கம் போவார்கள்.
அங்கே இருக்கும் ஏதோ ஒரு கல்லிற்குத் தண்ணீரை ஊற்றி எங்கள்
ஊருக்கு மழை பெய்ய வேண்டும் என்று கேட்டுவிட்டு ஊருக்குத் திரும்பும் பொழுது
மழையானது
அவர்கள் பின்னாடி துரத்திக் கொண்டு வரும்.
அவர்களுடைய ஊரில் நல்ல மழை பெய்யும்.
யாம் சிறு வயதாக இருக்கும்பொழுது மழை கேட்டு ஊர் மக்களுடன்
மலைப்பக்கம் செல்வோம். ஊர்
மக்களுடன் சேர்ந்து மழையைக் கூப்பிட்டு வருவோம்.
இன்று மழையைக் கூப்பிட்டு வாருங்கள் பார்க்கலாம்.
ஒரு சமயம் யாம் தபோவனம் ஆரம்பித்த நேரம், ஊரில் அதிகமாக
வறட்சியாக இருந்ததால் ஊரில் நல்ல மழை பெய்யவேண்டும் என்று வேண்டி சேர்ந்தாற்போல்
தபோவனைத்தில் தியானம் இருந்தோம்.
தபோவனம் ஆரம்பித்த புதிது, அதுசமயம் தியான மண்டபம்
கிடையாது. மழை பெய்யவேண்டும் என்று தியானமிருந்த அந்த நேரத்தில் எம்மைத் தேடி
ஒருவர் வந்தார்.
வந்தவர் எம்மைப் பார்த்து, “ஏன் ஐயா.., நாங்கள் வாழ்வது
உங்களுக்குப் பிடிக்கவில்லையா? மழை பெய்யவேண்டும் என்று கேட்டு தியானம்
செய்கிறாயா..?” என்று கேட்டார்.
மழை பெய்தால் ஊருக்குத் தானே நல்லது என்று தியானம்
செய்கிறேன் என்று யாம் கூறினோம்.
அதற்கு அவர் நாங்கள் கெட்டுப் போகவேண்டும் என்று நீங்கள்
தியானம் செய்கிறீர்கள் என்று கூறினார்.
அதற்கு யாம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று
அர்த்தமாகவில்லை என்று கூறினோம்.
நான் எனது தோட்டத்தில் புகையிலையெல்லாம் புடுங்கி காயப் போட்டிருக்கிறேன்.
இந்த நேரத்தில் மழை பெய்தால் காயப்போட்டுள்ள புகையிலை எல்லாம் என்னாவது? “தியானம் செய்கிறானாம்..,
தியானம்..,” என்று இப்படியே கேட்டார்.
இப்பொழுது மழை பெய்யவில்லையென்றால் காயப்போட்டுள்ள புகையிலை
எல்லாம் எடுத்துவிடுவீர்கள். நாளை கிணற்றில் நீர் இல்லையென்றால் விவசாயம்
செய்வதற்குத் தேவையான நீருக்கு எங்கே போவீர்கள்? என்று யாம் அவரிடம் கேட்டோம்.
“அதற்காக வேண்டி என்னுடைய சொத்தெல்லாம் போவதா.., ஏன் ஐயா..?”
என்று கேட்டார்.
சரி உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என்று கூறிவிட்டோம்.
இப்படிக் கேட்ட அவருடைய நிலப்பகுதியில் மழை பெய்வதே இல்லை. கிணற்று நீர் குறைந்து
கொண்டே போகின்றது.
அவருடைய நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நிலைப்பகுதிகளில் மழை
பெய்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்களுக்கு ஊற்று இருக்கிறது. தண்ணீர் மேலே வருகிறது.
அவர் அப்படிக் கேட்டதால் மழை பெய்யவேண்டும் என்று யாம்
கேட்டதை விட்டுவிட்டோம். இன்று அந்தப் பகுதிகளில் 1000 அடி, 1500 அடி என்று
ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். 1500 அடி தோண்டினாலும் நீர் இல்லை.
மனிதர்களுடைய நிலை எப்படி இருக்கின்றது? மனிதர்களுக்கு அந்தச் சமயத்திற்கு எதுவோ அதைத்தான்
எண்ணுகின்றனர். நமது நாட்டைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை.
அரசியல்வாதியானாலும் சரி, தெய்வ பக்தி உள்ளவர்களானாலும் சரி
நல்ல ஒழுக்கங்களைப் பற்றி சற்றும் சிந்திப்பதே இல்லை. தான் எண்ணியபடி அன்றைக்கு
நடந்தால் சரி என்ற நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.
நாம் இந்த நாட்டில்தான் பிறந்துள்ளோம். இந்த
பூமி நலமாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க முடியும் என்று யாரும் எண்ணுவதில்லை.
நாட்டில் விளைந்த உணர்வெல்லாம் நம்மிடம் இருக்கின்றது.
யாரும் பிரிந்து வாழவில்லை. நாடு நலமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாம்
வாழவேண்டும்.
நாடு நலமாக இருக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் அன்று
ஞானிகள் கோவிலைக் கட்டிவைத்துள்ளார்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஊர் முழுவதும்
படரவேண்டும். இந்த ஊரிலுள்ள மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று ஒவ்வொருவரும் எண்ணி
இந்தப் பேரன்பின்
உணர்வுகளை நமக்குள் வளர்த்து
பேரொளியாக நாம் மாற்றவேண்டும்.
அப்பொழுது, பகைமைகள் அங்கே அகன்று நல்ல மழை பெய்து தாவர
இனங்கள் செழித்து வளர்ந்து எல்லோரும்
நலமும் வளமும் பெற இது எதுவாகும்.