ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2015

மந்திர ஒலிகளில் நாம் சிக்கி விடக்கூடாது...!

அன்று ஆண்ட அரசர்கள் ஞானிகள் கொடுத்த பேருண்மையின் தன்மைகளைத் தனக்கும் தனது ஆட்சிக்கும் உகந்த நிலையில் மாற்றியமைத்து மக்களை அடிமைப்படுத்தும் நிலைக்கு உருவாக்கினார்கள்.

தெருவில் ஒரு போக்கிரி இருக்கிறான் என்றால் பிறருடைய கையில் ஏதாவது பொருள் இருப்பதைப் பார்த்துவிட்டு அதைத் தரும்படி அவன் கேட்டு,
இல்லை.., என்று சொன்னால் உதைக்க ஆரம்பித்துவிடுவான்.
இந்தப் போக்கிரிகளைப் போன்றவர்கள்தான் அரசர்கள்.

அந்தப் போக்கிரி வரிசையில்தான் அரசர்கள் உருவாகி அதன் கீழ் மக்களை அடிமைப்படுத்தி ஞானிகள் கொடுத்த தத்துவத்தை, சாஸ்திரங்களை, வேதங்களை தங்களுக்குகந்த வகையில் மாற்றியமைத்து, குல தெய்வங்களாக்கப்பட்டு இவர்கள் இது இது செய்தால் இந்த நிலை வரும் என்று சட்டங்களை உருவாக்கி அதை மக்களிடத்தில் பதிவாக்கினார்கள்.

உதாரணமாக காளியின் தன்மையோ கோபமானது. எவராவது ஒருவர் தவறு செய்தால் அந்தக் காளி கோவிலுக்குச் சென்று காளிக்குரிய மந்திரத்தை உச்சரித்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு எதிரியை வீழ்த்த முடியும், எதிரிகளின் அங்கங்களை முடக்க முடியும் என்று மந்திரங்கள் கூறுகின்றது.

இது அதர்வண வேதத்தில் கடைப்பிடிக்கும் முறைகள்.

காளியை வேண்டி யாகங்கள் செய்யும்போது  ஆடுகளையும், பிற உயிர் பிராணிகளையும் யாகத் தீயில் போடுவார்கள். அப்பொழுது அதற்குகந்த மந்திரங்களையும் சொல்வார்கள்.

கேட்டுணரும் மந்திரங்களின் உணர்வுகளையும், மற்ற உயிரின்ங்களின் உணர்வுகளையும் உற்றுக் கவனிக்கும் பொழுது அதை நாம் நுகர்கின்றோம்.

ஒரு புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்வதைப் போன்று தான் தன்னுடைய எதிரிகளை வீழ்த்திடவும், தனக்குள் வலு சேர்க்கவும், இரக்கம்ற்ற செயல்களைச் செய்யும் உணர்வினை உருவாக்கத்தான் அரசர்கள் காளி என்ற நிலை கொண்டு யாகங்களை உருவாக்கி அதில் அனைவரையும் அமரச் செய்து மந்திரங்களை ஓதுகின்றனர். நமக்குள் அது பதிவாகிறது.

இந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வின் வேகங்கள் நமக்குள் பதிவாகி அது நமக்குள் இருக்கும் சாந்த குணங்கள் அனைத்தையும் அடக்குகின்றது.
வீரிய உணர்வுகள் தூண்டப்படுகிறது.
அப்பொழுது அதற்குண்டான இசையும் இசைக்கப்படுகின்றது.

காளிக்குத் தகுந்த நிலை கொண்டு அதிர்ச்சி தரும் வாத்ய இசைகளை இசைப்பார்கள். அந்த இசையும் நமக்குள் பதிவு உண்டு. இப்படி உருவாக்கப்பட்ட நிலைகள் கொண்டுதான் நாம் பக்தியுடன் அங்கே செல்கிறோம்.

நமக்குத் துன்பம் நேரிடும்போது காளியிடம் வேண்டினால் நமக்கு வேண்டிய பாதுகாப்புத் தருவாள் என்றும் தன்னை நியாயப்படுத்தி அதன் உணர்வின் துணை கொண்டு மற்றொருவர் தீங்கு செய்வதாக எண்ணி “காளி அழித்துவிடுவாள் அவனை” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்படுகிறது.

இப்படி யாகங்களை வளர்த்து இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் நம் உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால், அந்த உயிராத்மாவில் எந்தெந்த இசையின் தன்மைகள் பதிவாகியுள்ளதோ, அந்தந்த இசைகளை வாசித்து அந்தந்த மந்திரங்களைச் சொல்லி உயிரான்மாவை வசியம் செய்து கைவல்யப்படுத்துகிறார்கள்.

பின், அந்த உயிராத்மாக்களைத் தங்களுக்குகந்தவாறு செயலாக்கங்களைச் செய்யும்படியாகப் பயன்படுத்துகின்றார்கள். மந்திர ஒலிகளை வைத்து மனிதன்பால் பாய்ச்சப்பட்டு வெறி கொண்ட நிலையில் எதிரிகளை வீழ்த்தும் நிலைக்குச் செல்கிறார்கள். அதற்குத்தான் மதுபானங்கள்.

நீங்கள் எந்த யாகத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த யாகத்தில் சோமபானம் என்ற நிலைகளில் அதனை ஊற்றுவார்கள். தெய்வங்களுக்கு இந்தெந்த நிறத்தில் ஆடை என்று அந்த ஆடைகளையும் யாகத்தீயில் போடுவார்கள்.

இன்று டி.வி.க்களில் மனிதர்கள் வேடமிட்டு நடிக்கும்போது அதைப் படமாக்கி இயந்திரத்தின் துணை கொண்டு காற்றில் பரவச் செய்கின்றனர். மற்றொரு இடத்தில் டி.வி.யை அந்த அலைவரிசைக்குத் திருப்பும்போது அதனின் காட்சியை நேரடியாக அதிலே காண்கிறோம்.

இதே போன்றுதான் ஆலயங்களில் வேடமிட்டு அந்த உணர்வினைக் கண் கொண்டு பார்க்கப்படும்போது சூரியனின் காந்தப்புலனறிவால் அதை அலைகளாக மாற்றி பூமிக்குள் பரவுவதை நம் கண்ணின் காந்தப்புலனறிவு கவர்கின்றது.
கவர்ந்து அதை நுகரச் செய்கிறது.
அதன் உணர்வு கொண்டு நம்மை இயக்குகின்றது.

இத்தகையை தன்மை உலகிலுள்ள எல்லா மதங்களிலும் உண்டு. மந்திரமில்லாத மதமும் இல்லை. மந்திரத்தைக் கேட்காத மனிதனும் இல்லை.

மந்திரங்களால் மதச் சட்டங்களை இயற்றி ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி இதுவே கடவுள் என்ற நிலைகளை மனிதரிடத்தில் உருவாக்கிவிட்டார்கள்.
ஆக, ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை
அரசர்கள் தங்களுக்குகந்தவாறு மாற்றியமைத்து
அவர்களுக்குகந்த கடவுளாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

இப்படி உருவாக்கிய அரசன் இறந்துவிட்டால் அவனுடைய மகன் ஆட்சிக்கு வந்து தனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கி தந்தை செய்தது சரியில்லை, இதுதான் சரி என்று மாற்றி மாற்றி மதச் சட்டங்கள் மாற்றப்பட்டு பல்வேறு இனங்களாக மனிதர்களைப் பிரித்துவிட்டார்கள்.

ஆகவே, நாம் இனிமேல் மந்திர ஒலிகளில் சிக்காது மகரிஷிகளும் ஞானிகளும் நமக்கு வகுத்துத் தந்த மெய்ஞான வழியில் நமது எண்ணங்களைச் செலுத்துவோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து என்றும் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் நிலையாக உணர்வினை வளர்த்து பிறவா நிலை எனும் பெருவீடு பெறும் நிலையாக நம் உணர்வுகளை வளர்ப்போம்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் நீங்கள் எல்லோரும் பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட எமது அருளாசிகள்.