ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2015

நாம் ஏழாவது நிலை பெறுவதற்கு சாப்பாடு கொடுப்பது துருவ நட்சத்திரம்தான்

ஒரு வித்து மண்ணில் புதையுண்ட ஓரிரு நாட்களில் முளைவிட்டுச் செடியாக வெளிப்படும்போது நம்மால் அது என்ன செடி என்று அடையாளம் காண முடிவதில்லை.

முன்பே அந்தச் செடி வளரும்போது பார்த்திருந்தால் தெரிந்து கொள்கிறோம். அல்லது ஓரளவு செடி வளர்ச்சியடைந்த பின்பு அது என்ன செடி என்று தெரிந்துகொள்கிறோம்.

இது போன்று நம் உடலிலுள்ள அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அருள் ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வருகிறோம்.

அந்த அருள் ஒளியின் சுடராக உங்கள் உடலிலுள்ள அணுக்களை மாற்றுவதற்குத்தான் யாம் இத்தனை வேலைகளைச் செய்கிறோம்.

உபதேசத்தின் மூலமாக  துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்கிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் நிவர்த்திக்கக்கூடிய சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

ஆனால், நீங்கள் “முடியவில்லை..,” என்ற உணர்வைச் செலுத்தினீர்கள் என்றால் உங்களுடைய முயற்சி தடைப்படும். உங்களுடைய வாழ்க்கையில் தடைகளாக இருப்பவைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொரு காரியத்தையும் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும்போது சில கஷ்ட நஷ்டங்கள் வரலாம். இதனால் வேதனை உணர்வுகளை எடுப்பதை விடுத்து அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்? என்ற எண்ணத்துடன் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவைச் செலுத்தவேண்டும்.
துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது
தீமைகளிலிருந்து விடுபடுவதற்குண்டான ஞானம் வரும்.

சூரியன் கோள்களுக்கு, பூமிக்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்கள் பூமியில் விளைந்த உணர்வை எடுத்து வளர்கின்றது.

ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஆக்கியது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரம் ஒளியின் நிலை பெற்றது.

நாம் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெறும் உணர்வை வளர்க்கும்போது நமக்குச் சாப்பாடு கொடுப்பது துருவ நட்சத்திரம்தான்.

ஏனென்றால், துருவ நட்சத்திரம் விஷத்தை ஒளியாக மாற்றுகின்றது. நாகம் விஷத்தை அடக்கி நாகரத்தினமாக ஒளியாக மாற்றியமைக்கிறது.

அதைப் போன்று நாம் உயிரின் உணர்வு போன்று ஒளியின் உணர்வை எடுத்து நம்முள் உள்ள அனைத்து அணுக்களையும் ஒளியாக மாற்றியமைக்கிறோம்.
இப்படி ஒளியாக மாற்றியமைக்கும்போது
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.

நமது தியானங்களில் என்ன செய்கிறோம்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை நம் உடலிலுள்ள இரத்தநாளங்கள், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் என்று எல்லா உறுப்புகளிலும் இணைக்கின்றோம்.

இப்படி உடல் உறுப்புகளில் இணைத்து வலுவாக்கும்போது காற்றிலிருந்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை பிரித்துத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது.