ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2015

ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்

நீங்கள் புது வீடு கட்டுகிறீர்கள். அதே சமயத்தில் வீட்டிற்குள் பலருடைய எண்ண அலைகள் அங்கே பட்டிருக்கும்.

அதற்காக, கட்டிய பின் உங்களுடன் பழகிய தியான வழியில் உள்ள நண்பர்களைக் கூப்பிட்டு தியானம் எடுங்கள். அந்த வீட்டில் அமர்ந்து கூட்டுத் தியானம் செய்யுங்கள்.

இந்த வீட்டிற்குள் படர்ந்துள்ள தீமையான எண்ணங்கள் நீங்கவேண்டும். இந்த வீடு முழுவதும் தரையிலும் சுவரிலும், மகரிஷிகள் அருள் சக்தி படரவேண்டும். இந்த வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படவேண்டும்,

இந்த வீட்டில் குடியிருப்பவர்களும் இந்த வீட்டிற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழவேண்டும். இதைப் பெறச் செய்வதற்கு அவசியம் கூட்டுத் தியானம் செய்யவேண்டும்.

ஆனால், நாம் வழக்கமாக கிரகப்பிரவேசம் அன்று எல்லோரையும் வரச் சொல்கிறோம். யாகத்தை வளர்த்து அதில் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுகிறோம். நெய்யை ஊற்றுகிறோம். பஸ்பத்தைப் போடுகிறோம். சில குச்சிகளைப் போடுகிறோம். இதைத்தான் செய்கிறோம்.

நீங்கள் கூட்டுத் தியானம் செய்து உயர்ந்த குணங்கள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து சுவாசித்து அந்த அலைகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.
இது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
இதை நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

இதே மாதிரி ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழவேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.

தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுங்கள். அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம். எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று
உங்கள் எண்ணத்தைச் செலுத்தி திருப்பூட்டச்செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால், நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழவேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக்குழந்தையாக எதிர்காலத்தில் வளரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

சாஸ்திரப் பிரகாரம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். சாஸ்திர விதிகள் என்ன சொல்கிறது?

எல்லோரும் கூட்டமைப்பாக நாம் சேர்ந்து உயர்ந்த உண்மையின் உணர்வுகளைக் குவித்து அங்கே பரவச் செய்யவேண்டும். ஆனால், நாம் என்ன செய்கிறோம்?

யாகத்தை வளர்க்கிறார்கள். அந்தத் தீயில் பல பொருள்களைப் போடுகிறார்கள். இதற்கு இவ்வளவு ரூபாய் கொடு, கொடுத்தால் அதிலே நான் போடுவேன். தாலி கட்டப்படும்போது இவ்வளவு ரூபாய் கொடு என்று சொல்லி ஒவ்வொரு முறைகளை ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இது காலத்தால் யாகங்கள் என்றும் வேள்விகள் என்றும் இப்படி மாற்றியமைத்து நம்மை அறியாமலேயே நமக்குள் அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதை வலுக்கொண்டு நிலைப்படுத்திக் கொள்ள முடியாதபடி தீமைகளின் உணர்வுகளின் நாம் பின் சென்று கொண்டிருக்கின்றோம்.

பண விரயம் செய்கிறோம். எத்தனையோ அர்ச்சனைகளையும், பூஜைகளையும், யாகங்களையும், வேள்விகளையும் செய்கிறோம்.
செய்தாலும் மன நிம்மதி இருக்கின்றதா? இல்லை.
சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று இல்லாது நீங்கள் முழுமையாக தியானித்து மணமக்கள் அன்னை தந்தை அரவணைப்புடன் ஒன்றி மகிழ்ந்து வாழுங்கள் என்று சொல்லுங்கள்.

இதை உருவாக்குவதற்குத்தான் திருப்பூட்டும் இடத்தில் விநாயகனை வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள். ஆனால், விநாயகனை ஏன் வணங்கிவிட்டு திருப்பூட்டச் செய்கிறோம் என்ற உண்மைகள் காலத்தால் நாம் அறியாதபடி மறைந்துவிட்டது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அந்த அருள் ஞானிகள் எப்படி இயங்கினார்களோ அதே போல மணமக்கள் வாழ்ந்திட வேண்டும்.

அந்த அருள் சக்திகள் அவர்களுக்குள் விளைந்து அதனின் நினைவின் ஆற்றல் கொண்டு அந்த மகரிஷிகளைப் போன்று மணமக்களும் வாழ்க்கையில் தெரிந்துணர்ந்து செயல்படும் நிலைகள் வழி வழியாகத் தொடர்ந்து வருவதற்கு அன்று ஞானிகள் கொடுத்ததுதான் இந்த முறை.