ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2015

நம் அவசர உணர்வுகளால் வரும் தீமைகளை அகற்றக் கற்றுக் கொள்ளுங்கள்

உயர்ந்த சக்திகளை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். யாரும் செய்யாததை யாம் செய்து உங்களுக்கு அருள் சக்தியைக் கொடுத்துள்ளோம்.

நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தீமைகளை நீக்கி அருள் உணர்வை எடுக்கலாம். ஆனால், நீங்கள் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கின்றீர்கள்.

துப்பாக்கியைக் கையில் கொடுத்து “புலி வருகிறது.., சுடு..,” என்று கூறினால், “ஐய்யய்யோ... புலி வருகிறது..” என்று பயந்து கொண்டு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தால் புலி தான் நம்மைத் தாக்கும்.

வாழ்க்கையில் தீமையான உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் உடலுக்குள் செலுத்தி தீமை என்ற இருளைச் சுட்டுப் பொசுக்குங்கள்.

மற்றவர்களுடைய நோயை நீக்கக்கூடிய சக்தியை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஆனால், நீங்கள் மற்றவர்கள் நோயை நீக்குவதற்கு முன்னால் கண்டிப்பாக ஆத்ம சுத்தி நீங்கள் செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் முதலில் ஆத்ம சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு நோயாளியை எண்ணி அவருடைய நோய் நீங்க வேண்டும், அவர் குணமடைய வேண்டும்  என்று எண்ணினால் நோயாளியின் நோய் நீங்கி அவர் குணமடைவார்.

உதாரணமாக, வயிற்று வலியால் அவதிப்படுபவரைப் பார்த்து நீங்கள் ஆத்ம சுத்தி செய்யாமல் அவர் நலமடைய வேண்டும் என்று எண்ணினால்
அவரிடத்தில் விளைந்த நோயின் உணர்வுகள்
உங்களுக்குள் விளைந்து உங்களுக்கு வயிற்று வலி வந்துவிடும்.

நோயாளிக்கு வலி நீங்கிவிடும். ஆனால், நீங்கள் வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள். மற்றவர்களுடைய நோய் நீங்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அவர்கள் நோய் நீங்கும்.

அதே சயமம் நோயாளியின் நோயின் உணர்வுகள் உங்களை வேதனைப்படச் செய்யும். இது பக்தி மார்க்கம். பக்தி மார்க்கத்தின் வழி செயல்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

ஆகையினால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். ஆத்ம சுத்தி செய்துகொண்டால் நலமாக இருக்கும்.

அதே மாதிரி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி மற்றவர்களை நீங்கள் தூண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நாங்கள் நலமாக வேண்டும் என்று எண்னி தியானம் செய்யுங்கள் என்று கூறி உங்களுடைய வாக்கைப் பதிவு செய்தால் நலமாகும்.

யாமும் எம்மைத தேடி வருபவர்களுக்கு நோய் நீங்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு ஆசீர்வாதம் செய்கிறோம். எம்முள் சேர்த்துகொண்ட உணர்வுக்கொப்ப அவர்களிடத்தில் அறியாது சேர்ந்த தீமைகள் அவர்களை விட்டு கீழே இறங்குகின்றன.

ஆனால், யாம் அவர்களுடைய உணர்வுகளை எடுத்துக் கொள்வதில்லை.

ஆத்ம சுத்தி செய்யாமல் நீங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது அவர்களுடைய வேதனை உணர்வுகளை நீங்கள் இழுத்துக் கொள்கிறீர்கள். இதனால் உங்களிடத்தில் நோய் வருகிறது.

சமையல் செய்யும்போது கடுகைத் தாளித்து ஊற்றுவதற்காக ஒரு கரண்டியில் எண்ணைய் ஊற்றி அடுப்பில் வைப்போம். அது சமயம் கைப்பிடி முழுவதும் சூடாகியிருக்கும்.

அப்பொழுது எண்ணையில் கடுகைப் போட்டால் சட.., சட…, என்று வெடிக்கும். உடனே கைப்பிடியைச் சட்.., என்று விட்டுவிடுகிறோம். அதனால் சூடான எண்ணெய் நம் மீது தெறிக்கும்.

ஆகவே, அவசர உணர்வுகள் நம்மையறியாமல் நம்மை இயக்குகின்றன. இது போன்ற நிலைகளில் நீங்கள் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாம் மிகவும் விழிப்புடன் இருந்து மற்றவர்களின் தீங்கான உணர்வுகளை நீக்க வேண்டும். அவர்களுடைய தீங்கான உணர்வு நம்மை இயக்கிவிடக்கூடாது.

ஆகவே, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழியில் செயல்பட்டால் சந்தர்ப்பத்துக்கொப்ப ஞானங்கள் கிடைக்கும். அருள் வழி வாழுங்கள். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியைப் பெற்று என்றென்றும் மகிழ்ந்து வாழுங்கள். எமது அருளாசிகள்.