ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2015

நல்லவராக இருப்பவர்கள் திடீரென்று பல தவறுகளை ஏன் செய்கிறார்கள்...?

வாழ்க்கையில் எல்லாமே சந்தர்ப்பம்தான்.

குடும்பத்தில் நான்கு பேர் ஒற்றுமையாக இருக்கலாம். இருந்தாலும் அந்த நான்கு பேர் வேறு நான்கு பேருடன் பழகுகின்றனர்.

சிநேகிதர்களாகப் பழகுகின்ற காலத்தில் அவர்களில் ஒருவர் குடும்பத் தொல்லைகள் காரணமாகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ மரணம் அடைந்துவிடுகிறார்.

அப்படி மரணம் அடையும்பொழுது தான் பழகிய ஒருவரின் நினைவுடன் வெளியே வரும் அவரின் ஆன்மா
தான் வெளியே வரும் சமயத்தில்
யார் நினைவு இருந்ததோ
அவருடைய உடலுக்குள் வந்துவிடுகிறது.

ஒருவர் நேற்றுவரை நல்லவராக இருப்பார். இருந்தாலும், பிறிதொரு ஆன்மா அவருடைய உடலுக்குள் வந்தபின், அந்த ஆன்மா தன் உடலில் வாழ்ந்த காலத்தில் என்னென்ன தவறுகளைச் செய்ததோ அதே தவறுகளைத் தான் புகுந்துகொண்ட உடலிலும் செய்ய ஆரம்பிக்கும். இது நிச்சயம்.

அப்பொழுது, இதுபோன்ற தவறுகளை பிறிதொரு ஆன்மா தன்னிடத்தில் செய்ய ஆரம்பிக்கும் பொழுது தன்னை உணரும் நிலை வேண்டும்.

நாம் நேற்றுவரை எப்படியிருந்தோம்?
நமக்கு ஏன் இன்று திடீரென்று கோபம் வருகிறது?
என்கிற வகையில் சிந்தித்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எங்கள் உடலில் எந்த ஆன்மா இருந்தாலும் அதுவும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும். அந்த ஆன்மா பிறவியில்லா நிலை அடையவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யவேண்டும்.

பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும். தெளிந்த மனமும் தெய்வீகத் தன்மையும், தெய்வீக அன்பையும் தெய்வீக அருளையும் நாங்கள் பெறவேண்டும் என்றும் எண்ண வேண்டும்.

இது போன்ற உணர்வுகளை எங்கள் உடலிலுள்ள ஆன்மாவும் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து வந்தால் நம்மிடமுள்ள தீய உணர்வுகளனைத்தும் நீங்கிவிடும்.

பிறிதொருவருடன் பாசமாகப் பழகும்போது பாசமாகப் பழகியவர் இறக்க நேர்ந்தால் அவருடைய ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடுகிறது.

இதுபோன்ற நிலைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளது.

பெரும்பகுதி இது போன்ற நிலைகள் பெண்களுக்கே வருகிறது. ஆண்களுக்கு அவ்வளவாக இல்லை. பெண்பால் மேல் அதிக மோகம் கொண்டவராக இருந்து உடலைவிட்டு வெளியேறும் ஆன்மா பெண்களிடத்தில் வந்து சேரும்.

இதெல்லாம் குருநாதர் காண்பித்த அருள்வழியில் அனுபவபூர்வமாக அறிந்தோம். அதை உங்களிடம் சொல்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு உயர்ந்த சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பயன்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

யாம் சிரமப்பட்டோம், எத்தனையோ தொல்லைகளை அனுபவித்தோம், தெரிந்து கொண்டு வந்தோம். உங்களுடைய கஷ்டங்களை நீங்களே நிவர்த்திக்கும் வழியில் உபாயங்களைக் கொடுக்கிறோம்.

ஆகவே, குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சுவாசித்து, ஆத்ம சுத்தி செய்து கொண்டு குறைபாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.

இது போன்று குறைபாடுகளை நாம் மாற்றியமைத்துக் கொண்டே வந்தால் நமக்குள் தீமைகள் வளராது.