ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2015

நாம் நுகரும் உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்றபின் அதனின் செயலாக்கங்கள்

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதும்போது உணர்ச்சிகளாக மாறுகின்றது. நுகர்ந்த உணர்ச்சிக்கொப்ப நம்மிடத்தில் உமிழ்நீர் சுரக்கின்றது. நம்முள் சுரந்த உமிழ்நீர் நமது சிறுகுடலில் கலக்கின்றது.

நீங்கள் சங்கடமாக, சலிப்பாக இருந்து சாப்பிட்டுப் பாருங்கள்.
சரியாக ஜீரணிக்காது.

வேதனையோடு இருந்து பாருங்கள்
வயிறு பொருமும், சரியாக ஜீரணிக்காது.

ரொம்ப வேதனையோடு வெறுப்போடு இருந்து பாருங்கள்.
சாப்பாட்டின் மீது ஞாபகம் இருக்காது.
உடலிலுள்ள உணர்வின் அணுக்கள் சோர்வடைந்துவிட்டால் சாப்பாட்டின் மீது ஞாபகம் இருக்காது.

ஒருவர் வீட்டிலுள்ளவர்களுடன் கோபித்துக் கொண்டு முறைத்துக் கொண்டு படுத்துவிட்டார்கள் என்றால் பசியே தெரியாது.

“அவர் சாப்பிடவே இல்லையே.., பட்டினியாக இருக்கிறாரே” என்று மற்றவர்கள்தான் நினைக்க வேண்டும்.

ஏனென்றால், வேதனை வெறுப்பின் உணர்வின் தன்மை கொண்ட உமிழ்நீர் உள்ளே போனவுடன்
அது உடலிலுள்ள அணுக்களை மயக்கமடையச் செய்துவிடுகிறது.
பசி எடுப்பதற்கு வழியில்லை.

இதை மீறி சாப்பிட்டார்கள் என்றால் ஜீரணமாகாது. நோய்தான் வரும் எண்ணிய எண்ணத்திற்கு அதாவது வேதனையான உணர்வுகளால் உடலில் நோய்தான் வருகிறது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கூறப்பட்டது. நாம் எண்ணக்கூடிய எண்ணங்களின் உணர்வின் சத்தை நமது கண் இந்தக் காற்றிலிருந்து நுகர்ந்தெடுத்து நமது உடலில் இணைக்கின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதியவுடன் நம்முள் உணர்ச்சிகளாகின்றது. உமிழ்நீராக மாறுகின்றது.

நாம் நல்ல சந்தோஷமான எண்ணங்களை எண்ணியிருந்து உமிழ்நீர் சுரந்தால் நமது உடல் உற்சாகமடைந்து நன்றாக ஜீரணமாகின்றது. “இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா..,” என்ற ஆசை நம்முள் வரும்.

இதுபோன்ற நிலைகளை நாம் விஞ்ஞான அறிவாலும் அறிந்து கொள்கிறோம். ஆனால், நம் குருநாதர் அருளிய மெய்யுணர்வுகளை நாம் தெரிந்து கொண்டால்
கோபிப்பது நாமல்ல
சங்கடப்படுவது நாமல்ல
சலிப்படைவது நாமல்ல
வெறுப்படைவது நாமல்ல
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கிவிடுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

நம்மிடத்திலுள்ள தீமைகளை நீக்கி நம்மிடத்தில் நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்.

ஆகவே, நம்மையறியாது வரும் தீமைகளை நீக்க நமக்கு ஒரு ஆயுதம் வேண்டுமல்லவா. அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

தீமைகளையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதனால்தான் இந்த உணர்வுகளை உங்களிடம் அடிக்கடி சொல்லி செல்ஃபோன்களில் பதிவு செய்வது போன்று உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
இதன் நிலை அதிகமாக அதிகமாக
பேரருள் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரித்து வரும்.

எனவே, நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்கவேண்டும்.

அப்பொழுது நம் கண்களில் உள்ள கருவிழிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைக் கவர்ந்து நம்முள் பதிவாக்கச் செய்கின்றது.

நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளைத் துடைக்கவும் செய்கிறது. நம்முள் தெளிந்த ஞானத்தை உருவாக்கி நாம் மகிழ்ந்து வாழும் நிலையையும் உருவாக்கச் செய்கிறது.