ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 7, 2015

எம அக்னி என்றால் என்ன?

விநாயகர் சதுர்த்தி என்பது ஏழாவது அறிவோடு ஒன்றி ருப்பது. வேதனை என்ற நிலை வரும்போது இருளாகின்றது. வேதனையையும், மற்ற தீய உணர்வுகளையும் நீக்கும்போது ஏழாவது அறிவாகின்றது.

ஏழாவது அறிவென்ற ஒளியின் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலையைக் கூறும் தத்துவம்தான் விநாயக சதுர்த்தி.

பருப்பை வேகவைத்து நிலத்தில் ஊன்றினால் அந்தப் பருப்பு முளைக்குமா?

முளைக்காது.

நாம் சந்தர்ப்பத்தால் தீய உணர்வுகளை நுகர நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைத்து தீய உணர்வுகளை வேக வைத்து தீய உணர்வுகள் வளராதபடி தடை செய்யவேண்டும்.

வேதனைப்படுபவரைப் பார்த்து அவருக்கு நீங்கள் உதவி செய்கின்றீர்கள். அவர் வேதனைப்படுவதை நீங்கள் கண் கொண்டு பார்க்கும் பொழுது
அந்த வேதனை உணர்வுகள் மாறி
உங்களுக்குள் வந்து தாயாக நோயாக உருவாகிவிடுகின்றது.
இதுதான் மாரியம்மா.

ஆனால், ஒரு நோய் வந்துவிட்டால் உடனே மாரியம்மன் கோவிலுக்குப் போனால் நோய் நீங்கிவிடுமா? மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் வைத்திருப்பார்கள்.

ஏனென்றால், வேதனை என்ற உணர்வானால் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த அக்னிகுண்டத்தில் நம் உணர்வுகளை இறக்க வேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் தங்கத்தில் கலந்துள்ள செம்பையும் பித்தளையையும் திராவகம் ஆவியாக மாற்றுகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் எண்ணும்போது, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மையறியாது சேர்ந்த தீயவினைகளை மாற்றியமைக்கின்றது.

ஆகையினால், இதனை எம அக்னி என்று கூறுவார்கள். அதாவது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள் தீமைகளைப் பொசுக்கும் தன்மை கொண்டது.

விஷத்தால்தான் நெருப்பு உருவானது.
நெருப்பால்தான் விஷத்தை மாய்க்க முடியும்.
ஆகவே எம அக்னி என்று கூறுவார்கள்.
தீமைகளக் கொல்லும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்

அந்த அக்னியை நமக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தோம் என்றால் நம்முள் அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க முடியும்.

தெருவில் யாரோ இரண்டு பேர் கோபமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் பார்க்கின்றீர்கள். அது சமயம் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சண்டையில் ஈடுபட்டவர்கள் பெறவேண்டும். சாந்தமும், ஞானமும், விவேகமும் பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை அவர்கள்பால் பாய்ச்ச வேண்டும்.

உப்பு, புளி, மிளகாய் போன்றவைகளைச் சேர்த்து குழம்பைச் சுவையாகச் செய்கிறோம்.

இதைப் போன்று கார உணர்வுகளை (சண்டை போடுபவர்களின் உணர்வை) நுகர நேர்ந்தால் அந்தக் கார உணர்வுகள் நம்மை இயக்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் நுகரவேண்டும்
.

அப்பொழுது நமக்குள் சுவை கொண்ட நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும், உணர்ச்சியைத் தூண்டும் சக்தி வரும்.

இனி வரும் காலத்தில் வரக்கூடிய விஷத்தன்மையிலிருந்து
உங்களை நீங்கள் மீட்டுக் கொள்வதற்கு
மிகப் பெரிய சக்தியை - ஆயுதத்தை
எளிமையான முறையில் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.
இதற்காக யாம் உங்களிடம் காசு எதுவும் வாங்குவதில்லை.

அனைவரிடமும் பேரின்பம் என்ற பெருநிலையை உருவாக்குவதற்குத்தான் யாம் பாடுபடுகின்றோம்.

அனைவரது உயிரும் கடவுள்,
அனைவரது உடலும் கோவில்
என்ற நிலையில் யாம் சேவை செய்து வருகின்றோம்.

உயிரான கடவுள் வீற்றிருக்கக்கூடிய உடலான ஆலயத்தை அனைவரிடத்திலும் பரிசுத்தமாக்க வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் பரிசுத்தம் செய்துகொண்டிருக்கின்றோம்.