நீங்கள் தியானம் செய்யும்பொழுது உங்கள் உடலிலிருந்து
வெளிச்சம் வரும் என்று முன்பு கூறியிருந்தோம். அது சமயம் அன்பர் ஒருவர்
தியானத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
அவர் ஒரு நாள் தீவிரமாக தியானத்துக் கொண்டிருக்கும் பொழுது
அவருடைய உடலிலிருந்து “பளீர்..,” என்று வெளிச்சம்
வெளிப்பட்டது. அவர் உடலிலிருந்து வெளிச்சம் வருவதை அவருடைய மனைவியும்
பார்த்தார்.
“ஐயோ.., என்னுடைய உடலிலிருந்து வெளிச்சம் ஜெகஜோதியாக
வெளிப்படுகின்றதே..,” என்றார். “நீ.., பார்த்தாயா..,?” என்று மனைவியைக் கேட்டார்.
“ஆமாம்” என்று அவருடைய மனைவியும் கூறினார்.
தொடர்ந்து அவர் தியானத்திலிருக்கும் பொழுது அவருக்கு மேலே
பறப்பது போல இருந்தது. “ஐயோ.., நான் மேலே அல்லவா போய்விடுவேன் போலிருக்கின்றது”
என்று தன் மனைவியைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.
மனைவியும் அவருடன் சேர்ந்து அழுதார், இது நடந்த நிகழ்ச்சி.
இது போன்று சிலருக்குக் காட்சி கிடைக்கும். தியானத்தில்
தான் பறப்பது போல் காட்சி கிடைத்தால், “எங்கே நாம் பறந்து போய்விடுவோமோ” என்று
பயந்தவர்கள் உண்டு.
“நான் சொர்க்கத்திற்குப்
போய்விட்டால் நீ இங்கே தனியாக இருந்து என்ன செய்வாய்?” என்று மனைவியைக்
கேட்டுக் கட்டிப்பிடித்து அழுதவர்கள் உண்டு.
உங்களுக்குப் பணம் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.
திடீரென்று ஒரு இலட்சம்
பரிசு கிடைத்துள்ளது என்று உங்களிடம் கூறினால் எபப்டி இருக்கும்?
உங்களுடைய உடல் பட.., பட.., என்று நடுங்கும். பணம்
கிடைத்துவிட்டது என்று கூறியவுடன் மூச்சடைத்து இறந்து போவோரும் உண்டு.
யாம அனைவருக்கும் உயர்ந்த ஆற்றலைக் கொடுப்போம். அது சமயம்
தியானத்தில் சில பேருக்கு தாங்கள் மிதப்பது போன்றும், கீழே என்னென்னமோ
நடைபெறுகிறது என்றும் காட்சியாகக் கிடைக்கும்.
சிலர் தியானிக்கும்போது மணிக்கணக்கில் மிதப்பது போன்று
காட்சிகளைப் பார்க்கின்றார்கள். பிறகு நான் மணிக்கணக்காக மேலிருந்து கீழே நடப்பது
எல்லாவற்றையும் பார்த்தேன் என்றும் இது இது நடந்தது என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அதே சமயம் “நான் எங்கே சொர்க்கத்திற்குப் போய்விடுவேனோ..? பயமாக
இருக்கிறது..,” என்று கூறுகின்றனர்.
“ஏன் பயப்படுகிறீர்கள்..?” என்று கேட்கிறோம்.
சிறிது நாளைக்கு நான் எனது மனைவி பிள்ளைகளுடன் வாழ
விரும்புகிறேன். நான் இறந்துவிட்டால் என்ன செய்வது? என்று கூறுகின்றார்கள்.
கூழுக்கும் ஆசை,
மீசைக்கும் ஆசை.
இது போன்றுதான் சமுதாயம் இருக்கிறது.
ஏனென்றால், உயர்ந்த சக்திகள் நம்முள் வரும் பொழுது உயர்ந்த
ஆற்றல்களை நாம் பெறுகின்றோம், பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று ஆனந்தத்தைச்
செலுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால், பய உணர்வைச் செலுத்தினால் உடலில் நடுக்கம்
தான் வரும்.
உயர்ந்த சக்திகளைப் பெறும் பொழுது நாம் சிறுகச் சிறுக
வளர்ந்து வந்தால் நல்லது.
ஏனென்றால், யாம் ஒவ்வொன்றையும் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம். ஆகவே, எம்மிடம் எந்தவிதமான பயமோ பதட்டமோ தோன்றவில்லை.
திடீரென்று உங்களுக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்கும்போது
பயந்தீர்கள் என்றால் அந்த உயர்ந்த சக்தியை உங்களால் அனுபவிக்க முடியவில்லை என்று
அர்த்தம்.
அதற்குத்தான் மனபலம் தேவை என்று கூறுவது.
மன பலம் கொண்டு எனக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது
என்று நீங்கள் ஆனந்தப்பட்டீர்கள் என்றால்
உங்களிடத்தில் உயர்ந்த சக்தி வளர்ச்சி அடையும்.
ஆகவே, நாம் உயர்ந்த சக்திகளை நம்முள் பெறும் பொழுது
உயர்ந்த ஆற்றல்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வுகளை நம்முள்
வலுவாக்க வேண்டும்.