ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2015

உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல...!

தியானம் என்பது, உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகி தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது, நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுங்கள்.

ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால், அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அவருடைய உணர்வை உங்களுக்குள் பதிவாகாதபடி அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் இதைச் செய்யுங்கள், நலமாக இருப்பீர்கள் என்று இதைச் சொல்லுங்கள்.

இதேபோன்று ஒவ்வொரு தியானவழி அன்பர்களும் ஒன்றுபட்டு உங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்கொருவர் இதை பரிமாற்றம் செய்து இதை வளர்ச்சி பெறச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையையே துன்பங்கள் நுகராது அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக உருவாக்குங்கள்.

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும், இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் "இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா?" என்று சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் கட்டாயப்படுத்தி சண்டை போடுபவர்களிடம் சொல்லப் போனால் அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம். எதிரியை உங்களுக்குள் ஒதுங்க விடுங்கள். அது உங்கள் செயலை எல்லாம் அது குறைத்துவிடும். என்று நண்பரிடம் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

உங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லுங்கள்.

அதைக் கடைப்பிடிக்க நேர்ந்தால், அவர்களது எதிரியின் உணர்வுகள் இந்த எதிரியான அணுக்கள் நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்கு தியானமாகிவிடுகின்றது.
பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
நம் நினைவுகள் வேறு எங்கும் போவதில்லை.

இதைப்போல நமது வாழ்க்கையில், அப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும், அப்பொழுது நீங்கள் ஒரு 5 நிமிடம் ஆத்மசுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

தீமைகள் எதனால் வருகின்றது?
நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது?
அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது?
தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்?
என்று ஆத்மசுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சிறிது நேரம் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. தை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால், சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே, மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும், அவர்களுக்குள் சகோதரத்துவம் வளரவேண்டும். எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும் என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

உங்களை உங்கள் எண்ணமே காக்கும். அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கி என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் வாழலாம்.