ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2025

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?


நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.
 
ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் நண்டு மாதிரி இருந்து எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?
 
1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.
 
நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.
 
உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுதுஅதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.
 
மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.
 
அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?
 
குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது கண் திருஷ்டி பட்டுவிட்டது எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.
 
ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.
 
ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.
 
அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”
 
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.
 
1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.