ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2025

முன்னோர்களுக்குச் சாப்பாடு இன்று எப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்…?

முன்னோர்களுக்குச் சாப்பாடு இன்று எப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்…?


முன்னோர்கள் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது வேதனையுடன் தான் வெளியில் செல்கின்றது. அந்த வேதனையை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் மாறுகின்றது.
 
அந்த அணுவிற்குச் சாப்பாடு எங்கே…?
 
மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமிக்குள் பரவி இருக்கின்றது.
1.அதை எடுக்கப்படும் பொழுது மூதாதையரின் நினைவும் அவர் பட்ட கஷ்டமும் நமக்கு நினைவு வருகின்றது.
2.அந்த உணர்வைச் சேர்க்கப்படும் போது அவர் உடலிலே எப்படி நோய்கள் உருவானதோ
3.நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் நிலை வந்து விடுகின்றது.
 
அதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
பூரண நிலா அன்று துருவ நட்சத்திரம் நமக்கு நேராக வருகின்றது. அந்த நேரத்தில் முன்னோர்கள் உயிரான்மாக்களை ஒளியின் சரீரமாக்கிநம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு அந்த ஒளியை உணவாகக் கொடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் வேதனைப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கின்றது.
2.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.அதன் வழி வேதனைகளை நீக்கப் பழக வேண்டும்.
 
உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்த பின் அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்.
 
1.மூதாதையர்கள் பெற்ற உணர்வு எனக்குள் இருந்து அது உயர்ந்த உணர்வு பெற்று
2.நல் உணர்வை உருவாக்கும் அந்த அணுத்தன்மை எனக்குள் பெருக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.அப்பொழுது அதற்கு உணவு கொடுக்கின்றோம்…! என்று பொருள்.
 
எனக்கு இப்படித் துரோகம் செய்தான் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு. அவனை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் சுவாசித்து வெறுப்பான உணர்வு ஆகி அந்த வேதனையான உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சாப்பாடாகச் சேருகின்றது.
 
அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் போது உடலில் நோயாக வருகின்றது. சாதாரண நிலைகளில் இது நடக்கின்றது.
 
அது போல் நம்முடைய மூதாதையர்களின் உடலில் எத்தனை வகையான நோய்வாய்ப்பட்டார்களோ அதன் வழி வெளியில் செல்கின்றனர்.
 
அவர்களை நாம் எண்ணும் பொழுது எங்களை வாழ வழி வகுத்துக் கொடுத்தீர்கள்…! ஆனால் நோயுடன் உடலை விட்டுப் பிரிந்தீர்கள்…! என்று எண்ணினால் அதே உணர்வு பரம்பரை நோய் என்ற நிலையும் பரம்பரை குணம் என்ற நிலையும் அத்தகைய உணர்வாக நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது.
 
முதலிலே குடும்பம் நன்றாக இருந்திருக்கும். எல்லோரையும் காக்க அவர் வேதனைப்பட்டு இருப்பார். அவர் இறந்த பின் அந்த உணர்வு வழி வழி வரப்படும் பொழுது அந்தக் குடும்பத்தில் பின் தொடர்ந்து தொல்லைகள் தான் அதிகமாகும்.
 
காரணம் அவர் வேதனைப்பட்ட உணர்வுகளைப் பாசத்தால் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பரம்பரை நோயாகவும் பரம்பரை குணமாகவும் பரம்பரை செயலாகவும் மாறி விடுகின்றது.
 
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுடைய ஆன்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை விண் செலுத்த வேண்டும்.
 
எங்களை வளர்ப்பதற்காக எத்தனையோ தொல்லைகள் பட்டீர்கள் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை இப்படி விண் செலுத்த வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
1.எங்களுக்குள் இருக்கும் மூதாதையரின் அத்தனை அணுக்களுக்கும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் அவையெல்லாம் நமக்குள் ஜீவணுவாக இருக்கும்.
3.அந்த அணுக்களுக்கெல்லாம் இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் செலுத்தி அதற்கு உணவு கொடுக்க வேண்டும்.
 
முன்னோர்கள் ஒளி உணர்வு பெற்றதை நாம் எண்ணி நம் உடலில் உள்ள அந்த ஜீவணுக்களுக்கு அந்த அருள் உணர்வுகளைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.