ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2025

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”


1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.
 
யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.
 
கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.
 
வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்துதீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.
 
வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து  உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால் இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.
 
ராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.
 
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.
 
இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.
 
ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி ராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?
 
இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
 
குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.
 
அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.