ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2023

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.

தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.

ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.

ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.

எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.

இது தான் தியானம்.

நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!

நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.

இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தான் ஏகாதசி...!

1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.

அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”

யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”

12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்திந் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.

ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.

ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அதுதான் நமக்கு முக்கியம்…!

சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.