உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வதற்கு முன்னாடி இருந்த அனுபவமும்… தியானத்திற்கு வந்த பிற்பாடு சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.
இதை நீங்கள் கூர்ந்து பார்த்து இதனுடைய இயக்கம்
1.நாம் இயங்குகின்றோமா…
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அந்த இயக்கிய உணர்வுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்பதை யோசனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் உணவாக உட்கொண்ட அந்த உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. ஆகவே தீமை என்ற உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.
அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? அதை மாற்றுவதற்கு உண்டான சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.
எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமைகளிலிருந்து தப்புவதற்கு குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்தாரோ அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீயவினைகள் இருந்தாலும் குறையும்
2.புதிதாகத் தீயவினைகள் நமக்குள் உருவாகாதபடி தடுக்கவும் முடியும்.
3.இரண்டும் இல்லை என்றால் நான் தியானம் செய்தேன்… அதைச் செய்தேன்… என்று சொன்னால் “அது அர்த்தமற்றது…”
ஆகவே இதைப் பின்பற்றி ஒவ்வொன்றுக்கும் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.
ஒரு வித்தினை ஊன்றி செடி உருவாகி விட்டால் அது வளர்வதற்குண்டான நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் தான் வளர்க்க முடியும்… அதிலே மீண்டும் வித்துக்களும் உருவாகும்.
ஆனால் செடியை வைத்து விட்டேன்… தண்ணீரையும் ஊற்றி விட்டேன்.. அது வளர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி விளையும்…?
இது போன்று அனுபவத்திலே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரக்கூடிய அழுக்குகளை நீக்கிடும் ஒரு பழக்கம் வர வேண்டும்,
1.எத்தனையோ கோடி உடல்கள் பெற்று
2.அதிலிருந்து மீளும் சக்திகளை நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது தான்
3.உயிர் இந்த மனித ரூபத்தைக் கொடுத்தது.
அகஸ்தியன் பல விஷத்தன்மைகளை அடக்கி அதை எல்லாம் மாற்றி அமைத்ததனால் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்றால்… அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றி முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதிய வினைகள் நமக்குள் சேராதபடி தடுத்து நம் உணர்வுகளை வலுவாக்க முடியும்.
வலு பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழி நடந்த பின்
1.வாழ்க்கையில் உங்களை எது இயக்கியது…?
2.குடும்பங்களில் வெறுப்பு எப்படி வந்தது…?
3.பகைமைகள் எப்படி வந்தது…?
4.தொழில் எப்படி நஷ்டமானது…?
5.அதை எல்லாம் தியானத்தின் மூலம் எப்படி மாற்றினோம்…? என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
உங்களிடம் இப்போது கேட்கிறோம்…! அடுத்து அதற்குண்டான விடைகளையும் யாம் (ஞானகுரு) கொடுக்க முடியும்.
எம்மிடம் பழகிக் கொண்ட பிற்பாடு… தியானத்தில் இருந்தீர்கள். தியானத்தின் மூலம் தீமை நீக்கிடும் அனுபவங்களைப் பெற்று அதை வலுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
அதை மற்றவரிடமும் சொல்லித் தான் ஆக வேண்டும். நீங்கள் அதை வெளிப்படுத்தினால்
1.அடுத்து மற்றவரும் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல
2.எல்லோரும் அந்த ஞானிகள் காட்டி வழியினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்குத் தான் இதைச் சொல்வது.
ஆரம்பத்திலே எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டினோம். உடலுக்குள் ஆன்மாக்கள் எப்படி இயங்குகின்றது…? அது உடலுக்குள் நுகரப்பட்டால் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் காட்சியாகக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.
ஆனால் காட்சியைக் கொடுக்கப்படும் போது அவரவர் ஆசை எதுவோ அதற்குத்தக்க
1.அந்த ஆசை உணர்வு கொண்டு இறந்த பிற ஆவிகள் அவர்கள் உடலில் புகுந்து…
2.போகும் மார்க்கங்களை இடைமறித்து… மீண்டும் தீய வினைகளுக்கே அழைத்துச் சென்று விட்டது.
ஆரம்ப நிலையில் எம்மிடம் பழகியவர்கள் எல்லாம் பெரும்பகுதி அந்த நிலைக்குத் தான் சென்று விட்டார்கள்.
ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல நிலைகளைக் காண்பித்தேன். அதைத் தப்பான வழியில் கொண்டு சென்று விட்டார்கள்.
ஆகவே… அந்த இயற்கையின் உண்மைகளை நாம் நுகர்ந்து கொண்ட பின் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
நம் உடலில் அது வளர்ந்த பின் நண்பர்கள் நம்மைப் பார்க்கும் போது எப்படி மதிக்கின்றனர்…? ஒரு பொருளைப் பார்த்த பின் நமக்கு வெறுப்போ அல்லது அதன் மீது பாசமோ எப்படி வருகிறது…? என்பதை நாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுக்கொப்பத் தான் அது வரும்.
1.எம்மிடம் அதை வெளிப்படுத்தினால் அதற்குண்டான விளக்கமும் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அருள் வழியில் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும்.